14 செப்டம்பர் 2017

சூல் - சோ. தருமன்

ஆசிரியரைப்பற்றி ஒரு சிறிய அறிமுகம். சோ. தருமன் கோவில்ப்பட்டி அருகிலிருக்கும் உருளைக்குடி கிராமத்தை சேர்ந்தவர். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த தருமன், அவரின் சமுதாய மக்களின் வரலாற்றை தூர்வை, கூகை என்னும் இரண்டு நாவல்களில் பதிவு செய்திருக்கின்றார். தன்னை ஒரு தலித் எழுத்தாளர் என்று குறுக்குவதை விரும்பாதவர். கரிசல் காட்டு கிராமத்து வாழ்வை பதிவு செய்த ஒரு சிறந்த எழுத்தாளர். 

தருமனின் எழுத்துக்களில் என்ன வித்தியாசம்? அவர் காட்டும் தலித் சமுதாயம்தான். தலித் மக்களை ஒரு வித அனுதாபத்துடன் அணுகும் மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுகின்றார். தலித் சமுதாயம் இப்படியும் இருந்தது என்பதை அவரது தூர்வை நாவலில் காட்டுகின்றார். பெரிய சம்சாரிகள், நிலம் வைத்து விவசாயம் செய்தவர்கள், பிற ஜாதியினரிடம் சகஜமாக பழகியவர்கள். கூகை நாவலில் தலித் மக்களுக்கும் பிராமணர்களுக்குமிருந்த உறவைப் பற்றி காட்டுகின்றார். பல போராளிகளுக்கு இது போன்ற விஷயங்கள் உவப்பாக இருக்காது. எரிச்சலாகக் கூட இருக்கும், ஆனால் எழுத்தாளன் என்பவன் கொஞ்சம் தயவு தாட்சண்யம் பார்க்காதவனாக இருக்க வேண்டுமல்லவா?

சூல் முதலிரண்டு நாவல்களிலிருந்து விலகி, அக்கால மக்களின் வேறு ஒரு வாழ்க்கையை காட்டுகின்றது. முதல் இரண்டும் நாவல்களும் சமூக, பொருளாதர மாற்றங்களை பேசுகின்றது. இந்நாவல் விவசாயம், ஆன்மீகம், பாரம்பர்ய அறிவு, அரசியல் மாற்றங்களை அதிகம் பேசுகின்றது.