20 ஜூன் 2017

பொலிக பொலிக - பா. ராகவன்

பொலிக பொலிக - பா. ராகவன்

நன்றி - தினமலர்
ராமானுஜரின் ஆயிரமாவது திருநட்சத்திரம் சமீபத்தில் வந்தது. அதையொட்டி தினமலரில் ராமானுஜரின் வாழ்க்கை சரிதத்தை பா.ராகவன் தினமும் எழுதிவந்தார். முதலில் சில நாட்கள் படித்தபின், தொடர்ந்து படிப்பது முடியாமல் போனது. தினமும் படிப்பதை விட புத்தகமாக படிப்பதே எனக்கு சுலபமானது.

ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்னால பிறந்து வாழ்ந்த ஒருவரைப் பற்றி இன்றைக்கு தெரிந்து கொள்ள வேண்டிய தேவை என்ன இருக்கின்றது என்ற கேள்வி எழலாம். பதில் அது யாருடைய வாழ்க்கை என்பதைப் பொறுத்தே அமையும். இன்றைய சூழலில் ராமானுஜரின் வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்வது என்பது சமூகம், ஆன்மீகம் என்ற இரண்டு தளங்களிலும் தேவை. 


சமீபத்தில் அடிக்கடி கண்ணில் படும் வீர வசனம், "இது பெரியார் பிறந்த மண்". தமிழகத்தில் ஜாதி வெறி என்பது கிடையாதாம். எப்படி இருக்கும் அதைத்தான் பெரியார் உடைத்துவிட்டாரே. அவர் மட்டும் இல்லையென்றால் தமிழன் ஜாதிவெறியில் அழிந்திருப்பான். பெரியார் பிறக்காத கர்நாடகம்,ஆந்திரா எல்லாம் அழிந்தது போல. ஆனால் உண்மை நிலை என்னவென்று எல்லாருக்கும் தெரியும். ஜாதி வெறி மட்டுமல்ல, இன வெறி, மொழி வெறிவரை வளர்ந்து நிற்கின்றது. 

இது போன்ற ஒரு சூழலில்தான் ராமானுஜர் போன்ற ஒருவரின் சரித்திரத்தை மக்கள் அறிந்து கொள்வது முக்கியமாகின்றது. தமிழகத்தில் தோன்றிய முதல் புரட்சியாளர் என்று இவரைத்தான் சொல்ல வேண்டும். 

இன்றைய திராவிட தலைவர்கள் தாங்கள் என்னவெல்லாம் செய்து தமிழகத்தை சீர் திருத்தியிருக்கின்றோம் என்று பீற்றிக் கொள்கின்றார்களோ அவையனைத்தையும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செய்து முடித்தவர். தீண்டப்படாதவர்கள் என்று விலக்கி வைக்கப்பட்டவர்களை கோவிலுக்குள் அழைத்துச் சென்றவர், கோவில்கள் எங்கும் சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழை ஒலிக்க வைத்தவர். தமிழுக்கு ஆழ்வர்களும், ராமானுஜரும் செய்யாத தொண்டையா இன்றைய குண்டர்கள் செய்திருக்கின்றார்கள்? வெறும் பக்தியோடு நில்லாமல், நிர்வாகம் என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதையும் வரையறுத்து வைத்துள்ளார். கோவில் என்பது இப்படித்தான் நடக்க வேண்டும், இத்தனை நிலங்கள் இருக்கின்றன, இன்ன வருவாய் வருகின்றது, இப்படி செலவு செய்யப்பட வேண்டும் என்று திட்டமிட்டு செய்ததை இன்று இருக்கும் தண்ட அறநிலையத்துறையுடன் ஒப்பிட்டால் ஒரு முன்னோடி எப்படி இருக்க வேண்டும் என்று தெரியும். 

சமீபத்திய பத்தாண்டுகளில் முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு மக்களிடையே பக்தி அதிகரித்து இருப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. கோவில்களில் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போகின்றது. விஷேஷ நாட்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் போகின்றது. பெருமாளுக்கு வில்வ இலை சாத்தலாமா, சிவனுக்கு போடும் மாலையில் துளசி இருந்தால் பாபமா என்பது போன்ற சந்தேகங்கள் பெருகி வருகின்றன. நுணுக்கமாக பார்த்தால் மக்களிடையே ஆன்மீகம் அதிகரித்திருக்கின்றதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கின்றது. அனைவரிடமும் ஒரு வாழ்க்கை சார்ந்த அச்சம் தோன்றியிருக்கின்றது, இந்த கோவிலுக்கு வரும் கூட்டத்தில் பெரும்பாலனவர்களிடம் இருப்பது அந்த அச்சம். அதை போக்க கோவில் கோவிலாக செல்கின்றனர். நெய்விளக்கேற்றுவது, பிள்ளையாருக்கு கொண்டைக் கடலை மாலை போடுவது, சிவனுக்கு மாம்பழ மாலை சாற்றுவது என்று. கடந்த வருடம் எங்கள் கோவிலுக்கு வந்த ஒருவர் என்னிடம் கேட்டார் "இந்த கோவில்ல என்ன ஸ்பெஷல்", "சுயம்பு பெருமாள், சயனக் கோலம்", "அதக் கேக்கல, திருமணத்தடை, ராகுதோஷம் அந்த மாதிரி". எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. கோவில்களை இப்போது மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் போல மக்கள் பார்த்துவருகின்றார்கள். பரிகார ஸ்தலங்களில் பெரும் கூட்டத்திற்கும், பாரம்பர்ய பெரிய கோவில்களுக்கு வரும் கூட்டத்திற்கும் இருக்கும் வித்தியாசத்தை கண்டாலே இது தெரியும்.

இன்னொரு வகை இவர்களை கிண்டல் செய்து கொண்டு, யோகம், தியானம் என்று ஏதாவது ஒரு குருவின் பின்னால் போகின்றனர். உண்மையான யோகத்தை, தியானத்தை உணர்ந்தவர்கள் அதில் எத்தனை பேர் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். இந்த போலிகள் தன்னை உணர்ந்தவர்கள் என்று தானே நினைத்து கொண்டு தானும் கெட்டு கூட இருப்பவர்களை சேர்த்து கெடுக்கின்றார்கள். கோவிலுக்கு போவது எல்லாம் சும்மா, சும்மா இருப்பதே எல்லாம். அகம் ப்ரம்மாஸ்மி. 

இவர்களின் இந்த ஆன்மீகம் அவர்களை எந்தளவிற்கு உயர்த்தியிருக்கின்றது? கோவில்களில் வரும் கூட்டத்தை கண்டால் பெரும்பாலானவர்கள் கடவுளுக்கு பயந்து நல்ல வழியில் அல்லவா சென்று கொண்டிருக்க வேண்டும். கோவில் கோவிலாக சென்று கொண்டிருந்த அரசியல்வாதியைத்தான் ஊழல்வாதி என்று நீதிமன்றம் சொல்கின்றது. 

http://omsivasakthispritualbakthasaba.blogspot.in/
ராமானுஜர் தன் அவதாரக் காரியத்தை தொடங்கியது இது போன்ற ஒரு காலத்தில் தான் என்று கூறலாம். ஆதிசங்கரரின் கோட்பாட்டை முழுவதும் உணர்ந்து, உண்மையாகவே அதன் தத்துவத்தை கண்டறிந்து நடப்பது என்பது அனைவருக்கும் சாத்தியமா, அத்தகைய மனமுதிர்ச்சி அனைவருக்கும் இருந்திருக்குமா? அந்த தத்துவத்தை உணர முடியாமல் போகின்றவர்களுக்கு, உரித்தானது எது? பக்திதான். வைஷ்ணவத்தின் விசிஷ்ட்டாத்துவைத தத்துவத்தை கூட எத்தனை பேர் முழுவதுமாக உணர்ந்து, புரிந்து வைத்திருக்கின்றனர். ராமானுஜர் அவர்களுக்காகவும் யோசித்தார், பேசினார். அதையே கோபுரமேறி கூவினார்.

இன்றைய பக்தர்களுக்கும் அதுதான் தேவை. ராமானுஜரின் வாழ்க்கை வரலாறே நமக்கு தேவையான பல விஷயங்களை தருகின்றது.

பல வைஷ்ணவ நூலகள் பக்கம் அனைவரும் செல்ல முடியாமல் தடுப்பது அந்த மொழி. வைணவ பரி பாஷை. தொடர்ந்து படிக்கும் வழக்கம் இருப்பவர்களை கூட முதலில் குழப்பும். அதன் நடைக்கு பழக கொஞ்ச நாளாகும். அந்த நடையை அதிகம் மாற்றாமல், அதே சமயம் அனைத்து மக்களுக்கும் அதை புரியும் படி செய்வது எளிதல்ல. அதை செய்திருக்கின்றார் பா. ராகவன்.

முதலில் ஒரு நாவல் நடையில் ஆரம்பமாகும் நூல், மெதுவாக தன் நடையை மாற்றிக் கொண்டு செல்கின்றது.  முதல் அத்தியாயம் என்பது வெறும் டீசர், அதை நம்பி உள் நுழைபவனை ஏமாற்றவில்லை. ராமானுஜரின் சிறுவயது கதைக்குள் எல்லாம் செல்லவில்லை, அவர் சன்னியாசம் வாங்கியதிலிருந்து ஆரம்பித்து அவர் திருவரங்கனடி சேர்ந்தது வரை வெகுஅழகாக எழுதியிருக்கின்றார்.

எம்பெருமானார் சரித்திரத்தில் பல நிகழ்ச்சிகள் மாயத்தன்மை கொண்டதாகவும் இருக்கின்றது, அதை எழுதும் போது வரலாற்று பார்வையிலிருந்து கொஞ்சம் விலகி கொஞ்சம் புராணத்தன்மை வந்துவிடும். ஆனால் பா. ராகவன் எழுத்து அதை தாண்டுகின்றது. படிப்பவனுக்கு அப்படி எல்லாம் பிரித்து பார்க்கத்தோன்றாத வகையில் செய்கின்றது. 

வெறுமனே அவரது வரலாற்றை ஒரு கதையாக சொல்லிக் கொண்டு போவதில் யாருக்கு என்ன பலன் இருக்கப் போகின்றது. கதைகளாக அது பலருக்கு தெரிந்திருக்கலாம். அவரது உபதேசங்களை, அவர் போதித்த தத்துவங்களை, அவர் வாழ்ந்து காட்டிய வாழ்க்கையையும் வாசகனுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய கடமை எழுத்தாளனுக்கு இருக்கின்றது. அதே சமயம், நாடக பாணியில் எழுதினால் இது ஒரு காலட்சேபமாக, உபன்யாசமாக போயிருக்கும்.  வெளிப்படையாக எழுதாமல், அதே சமயம் வாசகனுக்கு சேர்க்க வேண்டிய சரக்கை சேர்க்கும் நல்ல சரக்கு மாஸ்டர் ராகவன். சரியாக சேர்த்திருக்கின்றார். 

வைஷ்ணவத்தின் அடிப்படை என்ன? சரணாகதி என்றால் என்ன? என்பதையெல்லாம் சுருக்கமாக விளக்கியிருக்கின்றார். பாகவத அபச்சாரம் என்பது எத்தனை பெரிய பாவம் என்று ஒரு சிறிய வரிகளில் கூறுகின்றார். சோழனால் கண்கள் பறிக்கப்பட்ட கூரத்தாழ்வார் "ஏதோ ஒரு பாகவதரின் திருநாமம் சரியாக இல்லை என்று நினைத்திருப்பேனோ என்னவோ?". இதை கோவில்களில் வேலை செய்பவர்கள் படிக்க வேண்டும். 

உடையவரின் வாழ்வில் வரும் ஒவ்வொருவரின் கதையும் பல செய்திகளை நமக்கு தருகின்றன. கூரத்தாழ்வான், உறங்காவில்லி, பொன்னாச்சி, வில்லியின் மருமகன்கள், அகளங்கன், விஷ்ணுவர்த்தன், துலுக்க நாச்சியார், எம்பார் என்று அனைவரும் நமக்கு உணர்த்துவது பற்றின்றி அவனை நினைத்து நம் கடமையை செய்வதை. பக்தியோடு அவனை நம்புவதை.

ஜெயமோகன் அவரது ஒரு கட்டுரையில் " சங்கரனை வெய்யாம எப்டிரா விசிஷ்டாத்வைதத்தப் பத்தி பேச ஆரமிக்கிறது?" என்று கிண்டலடித்திருந்தார். வரலாற்றில் விவாதங்களிலும் அது போன்ற ஏதுமில்லாமல் பார்த்து கொண்டிருக்கின்றார் இல்லை மெலிதான மஸ்லின் துணிக்கடியில் ஒளித்து வைத்துவிடுகின்றார்.

உடையவரின் சரித்திரத்தில் வரும் ஸ்தலங்களுக்கு எல்லாம் சென்று வரவேண்டும் என்ற எண்ணம் வலுவாகியிருக்கின்றது. ரெங்கநாதன் அருளும் போது பார்க்கலாம். 

ஒரு வெகுஜன இதழிலில் இது போன்ற தொடரை எழுத வாய்ப்பு கிடைத்ததே பெரிய விஷயம். தினமலர் அதை செய்திருக்கின்றது. கிடைத்த வாய்ப்பை ராகவன் நன்றாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

வெகு சில புத்தகங்களே என்னை மீண்டும் மீண்டும் தொடர்ந்து படிக்க வைத்திருக்கின்றது. தொடர்ந்து   பல இரவுகள் படிக்க வைத்த ராகவனுக்கு நன்றிகள்.

ராகவனின் பெரும்பாலான அ-புனைவுகளை படித்திருக்கின்றேன். அவரது எழுத்து நடை தனித்து தெரியும். சில வாக்கியங்களை, வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துவார், ஒரு சில ஸ்டாண்டேர்ட் உதாரணங்கள் எட்டிப்பார்க்கும் (உ.ம் யானைக்கு அல்வா வாங்கிப் போடுவது). இதில் காண்பது வேறு ஒரு ராகவன். அவரது நாவல்கள் இரண்டை படித்திருக்கின்றேன், அதில் கூட அந்த வழக்கமான நடை எட்டிப்பார்க்கும். இதில் அவரது எழுத்து நடை முழுவதும் மாறியிருக்கின்றது. ஆனால் சுவாரஸ்யமும், எளிமையும் குறையவில்லை. பா.ராகவன் முன்னுரையில் ராமானுஜரின் வரலாற்றை முழுக்க முழுக்க வரலாற்று பார்வையுடன் ஒரு நூலாக எழுத நினைத்திருப்பதாக கூறியிருக்கின்றார். அது விரைவில் நடக்க அருளாளன் அருள் புரியட்டும். 

இது அனைவர் வீட்டிலும் இருக்க வேண்டிய ஒரு புத்தகம். 

இங்கே வாங்கலாம்

ஆன்லைனில் படிக்க நினைப்பவர்கள், பா.ராகவனின் தளத்தில் படிக்கலாம்

கிண்டில் எடிஷனும் கிடைக்கின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக