23 ஜூன் 2017

அலை உறங்கும் கடல் - பா.ராகவன்

அலை உறங்கும் கடல், கல்கியில் தொடராக வந்தது. அனேகமாக பொன்னியின் செல்வன் வந்து கொண்டிருந்த சமயமாக இருக்கும். 1999 - 2002 வாக்கிலிருக்கலாம். பொன்னியின் செல்வன் தொடருக்காக எனது மாமா எனக்காக கல்கி வாங்கி வந்தார். ஆனால் அவர் ரெகுலராக படிக்க மாட்டார், இந்த தொடரை அவரை படிக்க சொன்னேன். படித்துவிட்டு கடுப்பாகி விட்டார். "எப்பப் பாரு பிராமணன வச்சி ஏதாவது எழுதறதே இவனுங்க வேலையா போச்சி" என்று திட்டிவிட்டு போய்விட்டார். அவருக்கு இந்த காரணத்திற்காகவே ஜெயகாந்தனையும் பிடிக்காது. எனக்கு புத்தகங்களுக்கு அவர்தான் வழிகாட்டி. இருந்தும் எனக்கு இது மிகவும் பிடித்திருந்தது.

அதுவரை ராஜேஷ்குமார் போன்று துப்பறியும் கதைகளையும், விகடனில் வரும் சிறுகதைகளையும், தொடர்களையும் படித்து வந்த எனக்கு, இது ஒரு புதிய வகை தொடராக இருந்தது. சேகரித்து, தைத்து வைத்திருந்தேன். வேலைக்காக சென்னை வந்த பின் அது எங்கோ சென்று விட்டது. பரணில் தேடினால் கிடைக்கலாம். 

பிறகு இந்த நூலை தேடிப்பார்த்தேன், அச்சில் இல்லையென்று விட்டு விட்டேன். போன வாரம், பாரா கிண்டிலில் கிடைக்கின்றது என்று ஃபேஸ்புக்கில் தகவல் வெளியிட்டிருந்தார். இரவோடு இரவாக உடனே வாங்கிவிட்டேன். 

20 ஜூன் 2017

பொலிக பொலிக - பா. ராகவன்

பொலிக பொலிக - பா. ராகவன்

நன்றி - தினமலர்
ராமானுஜரின் ஆயிரமாவது திருநட்சத்திரம் சமீபத்தில் வந்தது. அதையொட்டி தினமலரில் ராமானுஜரின் வாழ்க்கை சரிதத்தை பா.ராகவன் தினமும் எழுதிவந்தார். முதலில் சில நாட்கள் படித்தபின், தொடர்ந்து படிப்பது முடியாமல் போனது. தினமும் படிப்பதை விட புத்தகமாக படிப்பதே எனக்கு சுலபமானது.

ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்னால பிறந்து வாழ்ந்த ஒருவரைப் பற்றி இன்றைக்கு தெரிந்து கொள்ள வேண்டிய தேவை என்ன இருக்கின்றது என்ற கேள்வி எழலாம். பதில் அது யாருடைய வாழ்க்கை என்பதைப் பொறுத்தே அமையும். இன்றைய சூழலில் ராமானுஜரின் வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்வது என்பது சமூகம், ஆன்மீகம் என்ற இரண்டு தளங்களிலும் தேவை. 

09 ஜூன் 2017

அரசூர் வம்சம் - இரா. முருகன்

நம் காலத்திற்கு  முற்பட்ட காலத்தைப் பற்றிய கதைகள் எப்போதும் சுவாரஸ்யமானவை.  சரித்திரக்கதைகள் காலத்தால் முந்தையவை, மற்றொருவகை சில நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட வாழ்க்கையை பற்றிய கதைகள், கொற்கை, ஆழி சூல் உலகு, தூர்வை, கோபல்ல கிராமம் போன்றவை. இவையெல்லாம் சமூகத்தை மையமாக கொண்டு எழுதப்படுபவை. ஒரு குடும்பத்தை மையமாகக் கொண்டு சில கதைகளும் எழுதப்பட்டிருக்கின்றன. அசோகமித்திரனின் யுந்தங்களுக்கு இடையில், பி.கே.கிருஷ்ணனின் புலிநகக் கொன்றை. இவையிரண்டும் ஒரு பெரிய குடும்பத்தின் தலைமுறைகளைப் பற்றி பேசுபவை. 

அரசூர் வம்சமும் அது போன்ற ஒரு நாவல். ஒரு குடும்பத்தில் ஏதோ ஒரு தலைமுறையில் நடந்த கதை. சிறு சிறு குறிப்புகளை வைத்து கற்பனையால் விரித்தெழுதியுள்ள நாவல். ஆங்கிலேயர்களின் காலம், அவர்கள் தங்களை மேதுவாக இங்கு நிலைநாட்டிக் கொண்டிருந்த காலம் என்று வைத்துக் கொள்ளலாம். கதை 1800 களின் மத்தியில் என்று எனக்கு தோன்றுகின்றது. 

இரண்டு புவியியல் பகுதிகளில் நடக்கும் கதை ஒன்று கேரளம், மற்றொரு பகுதி தமிழகம். பிராமணக் குடும்பங்கள்.

அரசூர் ஒரு காலாவதியாகிக் கொண்டிருக்கும் ஜமீன். ஆங்கிலேயர்களின் தயவில் வாழும் ஒரு ஜமீன்தார். புகையிலை விற்று வாழும் பிராமணர் குடும்பம். அந்த பிராமணரின் மகன் திருமணம் செய்து கொள்ளும் குடும்பம் இருப்பது கேரளத்தில். சமையல் செய்யும் குடும்பம்.