07 பிப்ரவரி 2017

உன்னைப் போல் ஒருவன் - ஜெயகாந்தன்

ஜெயகாந்தனின் குறுநாவல், விகடனில் வந்து பின்னால் அவரால் திரைப்படமாகவும் எடுக்கப்பட்ட நாவல்.  

பெரும்பாலும் முன்னுரைகள் என்பவை அப்புத்தகத்தை பற்றிய சிறு குறிப்பாக அமையும், ஆனால் ஜெயகாந்தனின் முன்னுரைகள் பெரும்பாலும் ஒரு கட்டுரை போலவே அமையும். நூலையொட்டிய அவரது பல கருத்துக்கள், நாவல் என்னும் சட்டகத்தில் அடைக்க முடியாத எண்ணங்களை அவர் முன்னுரையில் எழுதுகின்றாரோ என்றும் தோன்றும். சில சமயம் அது ஒரு விளக்கம் போலவும், நாவலை படிக்க ஒரு கோனார் நோட்ஸ் போலவும் இருக்கும். அந்த காரணத்திற்காகவே அவரது முன்னுரைகளை படிப்பதில்லை. நாவலை படித்து முடித்த பின் அதை படிப்பது வழக்கம். "வாழ்வின் இருண்ட பக்கங்களை மட்டுமே காட்டுபவன்" என்ற பெயர் தனக்கிருப்பதாக அவரே மற்றொரு புத்தகத்தின் முன்னுரையில் கூறுகின்றார். அதற்கான பதில் இப்புத்தகத்தின் முன்னுரையில் கிடைக்கின்றது. ஒளிமிகுந்த நகரத்தில்தான் இருளடைந்த குடிசைகளும் இருக்கின்றன. இரண்டும் சேர்ந்ததுதான் நம்முலகம். ஏதாவது ஒன்றை மட்டும் பற்றிக் கொண்டு கூவுவது முட்டாள்த்தனம். அதைத்தான் முன்னுரையில் கொஞ்சம் பெரிய நடையில் விளக்குகின்றார்.

ஜெயகாந்தனை பற்றி பலர் கூறும் விமர்சனம், அவரது கதைகளின் இன்றைய தேவை. அக்னிபிரவேசம், சில நேரங்களில் சில மனிதர்கள், பாரீஸுக்கு போ போன்றவை இன்று கொஞ்சம் காலாவதியான விஷயம் போல இருக்கலாம். ஆனால் எங்கோ ஒரு மூலையில் அதற்கான தேவையிருக்கின்றது என்பது செய்திதாள்கள் காட்டும். இந்த நாவல், என்றைக்கும் தேவையிருக்கும் நாவல். நாவலில் பாத்திரங்கள் ஒரு சேரிப்பகுதி வாழ் மக்கள். ஆனால் நாவலில் வரும் அதே பிரச்சினை பங்களாவிலும் வரலாம்.


சில நாள் முன்பு ஒரு செய்தி கண்ணில் பட்டது. yes i am a mother, but i need sex என்று யாரோ சொன்னதாக ஒன்று சுற்றி வந்தது. இந்த நாவலில் வரும் தங்கம் பாத்திரத்தின் தேவையும் அதுதான். ஆனால் அந்த சிறுவனின் மனதில அது உண்டாக்கும் பாதிப்பு? ஜெயகாந்தனின் மற்றொரு சிறுகதை, இரண்டாம் திருமணம் செய்து கொள்ளும் தந்தைக்கான் தர்மசங்கடத்தை காட்டும். முடியும் போது, சினிமா கத்து கொடுக்காததையா மத்தது கத்து கொடுக்க போகுது என்பதாக முடியும். அடல்ஸ் ஒன்லி என்பது கதையின் பெயர் என்று நினைக்கின்றேன். தகப்பனின் திருமணத்தை தாண்டும் குழந்தைகளால், தாயின் திருமணத்தை தாண்ட முடிவதில்லை. சிட்டிபாபு, தங்கத்தின் மகனுக்கு உண்டாகும் வெறுப்பு எங்கு செல்கின்றது என்பதே கதை. கோபத்தில் ஓடும் சிறுவன் பீடி பிடித்து புகையை விடுவதை, சமூகத்தின் மீது அவன் காட்டும் கோபம் என்கின்றார். (ஜெயகாந்தன் கதையில் பாத்திரங்கள் எல்லாம் பேசுவதில்லை, ஜெயகாந்தன் தான் பேசுவார் என்பது தெரிந்ததே).  ரயிலில் போகும்பொது ட்ராக்கில் அங்காங்கு அமர்ந்து பீடி, சிகரெட் பிடித்தபடி அமர்ந்திருக்கும் சிறுவர்களின் பின்னால் என்ன கதையிருக்கும் என்று யோசிக்க வைக்கின்றது. அவர்களின் செயலை, சமூகத்தின் மீதான, அவர்களை பெற்றவர்கள் மீதாக கோபமாக நியாயப்படுத்துவதை மனது சரி என்று ஏற்று கொள்ள வைக்கின்றது. 

முடிவு, சினிமாட்டிக். எப்படி முடிந்திருந்தாலும் அது அப்படித்தான் தோன்றும். 

ஜெயகாந்தனின் ஒரு நல்ல நாவல் இது. அவரது மற்ற நாவல்களை விட இது எனக்கு அதிகம் பிடித்திருகின்றது. காரணம், வழக்கமான உபதேசங்கள், அறிவார்ந்த வாதங்கள் குறைவு. முடிந்தவரை பாத்திரங்கள் இயல்பாகவே இருக்கின்றது, ஒரே ஒரு ஐஸ் பாக்டரி முதலாளி. அவர் மட்டும் கொஞ்சம் பேசுகின்றார்.

இதை சினிமாவாக எடுக்க பலர் கேட்டும் தரவில்லை என்று படித்தேன். நல்லதுதான். எடுத்திருந்தால், அம்மா சென்டிமென்ட் படமாக்கி பிழிந்திருப்பார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக