01 பிப்ரவரி 2017

எக்ஸைல், ராஸ்லீலா , தேகம் - சாருநிவேதிதா

சாருநிவேதிதா ஒரு சுவாரஸ்யமான பத்தி எழுத்தாளர். ஆனால் அவர்து நாவல்கள் எனக்கு அலர்ஜ்ஜியையே தருகின்றன. ஜீரோ டிகிரி வாங்கி படித்து, ஒரு எழவும் புரியாமல் கட்டி பரணில் வைத்துவிட்டேன். அடுத்ததாக பாதிவிலைக்கு கிடைக்கின்றதே என்ற அல்ப ஆசையில் எக்ஸைல் என்ற நாவலை வாங்கி, அதையும் ஜீரோ டிகிரியுடன் துணைக்கு வைத்துவிட்டேன். இந்தமுறை எந்த செலவுமில்லை, தைரியமாக கிண்டில் அன்லிமிட்டடில் இரண்டையும் இறக்கி படித்து பார்த்தேன். 

தேகம் புத்தக வெளியீட்டு விழாவில், இந்த புத்தகத்தை மிஷ்கின் சரோஜாதேவி புத்தகம் என்று கூறி வாங்கி கட்டிக்கொண்டார். அது எல்லாம் கொஞ்சம் ஓவர். அந்தளவிற்கு மோசமாக எல்லாம் இல்லை. ஆனால் படிக்கும் போதே ஒரு ஆயாசம் ஏற்படுகின்றது. அவரை தொடர்ச்சியாக படித்துவருபவர்களுக்கு மறுபடியும் அதே கதையா என்றுதான் தோன்றும். வாதையை பற்றிய கதை, வதையில் ஆரம்பித்து காமத்தின் வழி சென்று கடவுளை அடையும் கதை என்று ஒரு உபாசகர் இந்த நாவலை பற்றி எழுதியிருந்தார். உபாசகர்கள் அப்படி பாஷ்யம் எழுதாவிட்டால்தான் அதிசயம். ஒரு பக்தர், ஜீரோ டிகிரியை அடிக்கடி வாங்குவாராம். பாவம் ஏதாவது ஒரு பிரதியிலாவது அது புரிந்து விடாதா என்ற எண்ணமோ என்ன எழவோ?

ராஸலீலா அவரது அஞ்சல்துறை அனுபவங்களோடு ஆரம்பித்து எங்கெங்கோ போகின்றது. எக்ஸைலும் அதே. 



நாவல் என்பது சீரான ஒழுங்கில் இருக்கவேண்டிய அவசியமில்லை, கதை முன் பின் போகலாம், குதிக்கலாம். ஆனால் பல சாதரண சம்பவங்களை இணைத்து இணைத்து, சம்பந்தமில்லாத பத்து விஷயங்களை உள்ளே போட்டு குழப்பி இதுதான் உயர்ந்த இலக்கியம் என்றால் என்ன செய்வது. முதல் முறை படிக்க சுவாரஸ்யமாக இருக்கலாம், அதுவும் அந்த கிசு கிசு தன்மைக்கும், நிஜவாழ்வில் நடக்கும் என்னற்ற அபந்தங்களை அப்படியே போட்டுடைப்பதற்கும்தான். சமூகத்தின் மீதான் கிண்டல், நக்கல், சக மனிதர்கள் மீது நமக்கிருக்கும் அலட்சியம், சின்ன சின்ன விஷயங்களில் கூட காட்டும் அலட்சியம் என்று பல விஷயங்களை அடித்து துவைக்கும் எழுத்து. ஆனால் அதையே மறுபடியும் மறுபடியும் எழுதி வெளியிடுவது, வாசகனை முட்டாளாக்கும் செயல். 

இருந்தும் இவர் நாவல்கள் இளைஞர்களை கவர்கின்றது என்பதற்கு என்ன காரணம், முதலில் எழுத்து சுவாரஸ்யம். நேரம் போவது தெரியாமல் படிக்க வைக்கும் எழுத்து. சுஜாதாவிற்கு பிறகு ஒரு தனித்தன்மையான சுவாரஸ்யமான எழுத்து நடை. அடுத்தது, பலர் பேச,எழுதத்தயங்கும் பல விஷயங்களை போட்டுடைப்பது. உரித்து போட்டு பார்த்துக்கப்பா இவ்வளவுதான். காமத்தை எழுதுவதில் இது ஒரு வகை. ஆனால் அது பல இடங்களில் சும்மா கிளர்ச்சியூட்டும் வகையிலேயே நின்று விடுகின்றது. வாசகனே நாவலை விரித்து சென்று கொள்ளலாம் என்பது வசதிதான், ஆனால் அதற்கான இடத்தை ஆசிரியர் தரவேண்டும், அது இல்லை. 

பத்துபக்கத்தை சுவாரஸ்யமாக படிக்க முடிந்தால் இருபது பக்கங்களை தள்ள கஷ்டப்பட வேண்டியிருக்கின்றது

நாவலில் இருக்கும் ரெஃபெரென்ஸ்களை படிக்கவே உங்களுக்கு ஒரு ஆயுள் போதாது என்று அடிக்கடி குறிப்பிடுகின்றார். பரிந்துரைகள் வெறும் பெயருதிர்த்தலாகத்தான் இருக்கின்றது. அனைத்து நாவல்களிலும் வரும் பெண்கள் பாத்திரங்கள், ஒரே மாதிரியான கடிதங்கள். அப்பா, படிக்க முடியவில்லை. எரிச்சல்தான் வருகின்றது.

சாரு டைப் புத்தகம் எழுதுவது எப்படி என்பதன் செய்முறை விளக்கம் :

நூலகத்திற்கு சென்று வேதம், உபநிஷத், பைபிள்,குரான், சித்தர் பாடல்கள், சமையல் குறிப்பு, பழைய செய்திதாள்கள், நாட்டுப்புற பாடல்கள், துணுக்குகள் என்று அனைத்தையும் சேகரித்து கொள்ளவும். 
உபநிஷத், பைபிள் போன்றவற்றில் கைக்கு சிக்கும் பகுதிகளை எடுத்து பக்கத்திற்கு ஒன்று வீதம் எழுதி வைத்துக் கொள்ளவும்
மிச்ச புத்தகங்களிலிருந்து பல பகுதிகளை தனித்தனி பக்கங்களில் எழுதி வைத்து கொள்ளவும். 
உங்கள் டைரியிலிருந்து அன்றாடம் நடந்த விஷயங்களை, ஆட்களின் பெயரை மாற்றி எழுதிவைத்துக்கொள்ளவும்.
இரண்டு மூன்று வைத்திய குறிப்புகள், சமையல் குறிப்புகள் சேர்க்கவும். 
சில பக்கங்களில் சம்பந்தமில்லாமல் எதையாவது எழுதி வைக்கவும், உதாரணம் டம் டம், படம் படம் பப்படம், பப்படம், பலானப் படம் பலானப்படம் என்று. 
பிறகு இரண்டு மூன்று பெண் பாத்திரங்களை சிருஷ்டித்துகொள்ளவும். அவர்கள் உருகி உருகி எழுதும் கடிதம், சாட், மெயில், தொலைபேசி பேச்சு என்று சில பக்கங்கள். 
அனைத்து பெண்களும், நாயகனை படுபயங்கரமாக விழுந்து விழிந்து காதலிக்கவேண்டும். காமம் கொஞ்சம் தூக்கலாக இருக்கட்டும், கெட்ட வார்த்தைகள், குறிசார்ந்த வார்த்தைகளை தெரிந்த வரை சேர்க்கலாம். 
இந்தியாவை திட்டி சில பக்கங்களையும், சிலே, ப்ரான்ஸ் போன்ற நாடுகளின் தூய்மை, சுகாதாரம் பற்றி கொஞ்சம் சேர்த்து கலந்து வைக்கவும்
பல ஆங்கில, ப்ரெஞ்சு ஆசிரியர்கள் பெயர், அவர்களின் நூல்களின் பெயர்கள், பல தேசத்து பாடகர்களின் பெயர்கள் என அங்கங்கு தூவவும். 
இறுதியில் இரண்டு, மூன்று பெண்களின் துயர வாழ்வைப்பற்றி நெஞ்சை உருக்கும் கதைகளை வைத்து அலங்கரித்தால் நாவல் ரெடி.
அனைத்தையும் ஒன்றாக அடுக்கவும், சீட்டுகட்டு கலைப்பதை போல கலைத்து பதிப்பகத்திற்கு அனுப்பவும். 






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக