21 டிசம்பர் 2017

நரசிம்ம ராவ்: இந்தியாவை மாற்றியமைத்த சிற்பி - ஜெ. ராம்கி

1991ம் ஆண்டு என்றவுடன் நினைவிற்கு வருவது ராஜீவ் காந்தியின் படுகொலை. இந்திய சரித்திரத்தை மாற்றியமைத்த சில சம்பவங்களில் அதுவும் ஒன்று. அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியின் விளிம்பில் இருந்தது. ராஜீவ்காந்தி படு கொலைக்கு முன்னால் நடந்த வாக்குபதிவுகளில் காங்கிரஸ் பெற்ற ஓட்டுக்கள் குறைவே. ராஜீவின் அனுதாப அலை காங்கிரஸ் கட்சிக்கு பெரிய பலத்தை சேர்த்துவிடவில்லை. ஒரு மைனாரிட்டி அரசாகத்தான் அமரமுடிந்தது. அந்த அரசிற்கு முன்னாலும் பின்னாலும் பல அரசுகள் முழு ஆதரவின்றி நடந்திருக்கின்றன. எதுவும் தன் ஆட்சிகாலத்தை முழுவதும் முடித்ததில்லை. ஆட்சியில் இருந்த போதும் ஏதும் செய்ய முடியாமல் ஆட்சியை காப்பாற்றி கொள்வதை மட்டுமே செய்ய முடிந்தது.

நிலையான ஆட்சியை விட மிகப்பெரிய இக்கட்டாக இருந்தது அன்றை இந்தியாவின் பொருளாதர நிலை. முந்தைய வி.பி.சிங், ராஜீவ் காந்தி போன்றவர்களின் ஆட்சியின் திறன், இந்திய பொருளாதாரத்தை பாதாளத்தில் தள்ளியிருந்தது. புதிய கடனுதவி ஏதும் கிடைக்காமல், அந்நியச் செலாவணி குறைந்த நிலையில், வெளிநாட்டு இந்தியர்களும் தங்கள் முதலீடுகளை திரும்ப பெற ஆரம்பித்திருந்தனர். காஷ்மீர், பஞ்சாப், அஸ்ஸாம் என்று உள்நாட்டு கலவரங்கள் வேறு. இவையனைத்தையும் திறம்பட கையாண்டு, நாட்டை மீட்டவர் இன்று பலராலும் மறக்கப்பட்ட, சொந்த கட்சியினராலேயே திட்ட்மிட்டு மறக்கடிக்கப்பட்ட ஒரு தலைவர், பி.வி.நரசிம்மராவ்.

05 டிசம்பர் 2017

சாதேவி - ஹரன் பிரசன்னா

ஹரன் பிரசன்னா வலையுலகில் பிரபலர். http://www.haranprasanna.in/ என்ற வலைதளத்தில் பல ஆண்டுகளாக எழுதி வருபவர். பல கவிதைகள் புனைந்திருக்கின்றார், கிழக்கு பதிப்பகத்தில் பணிபுரிந்து வரும் இவர் வலம் இதழின் ஆசிரியர்களில் ஒருவர். முன்பு இவரைப் பற்றி பல வதந்திகளும் உண்டு, தவறாக ஏதுமில்லை. இட்லிவடை வலைதளத்தின் அதிபர், பிறகு ஏதோவொரு நெடுஞ்செழியன் என்ற பெயரில் பயங்கர கவிதை புனைவார் என்பது போன்ற வதந்திகள். 

இவரது கதைகள் பல அவரது தளத்தில் வெளியானவை, கவிஞர் என்று கண்டு கொண்டதால், இவரது கதைகளை விட்டு கொஞ்சம் தள்ளியே இருந்தேன். அவரது புதிய சிறுகதை தொகுப்பு சாதேவி. முதலில் என்னடா நூலுக்கு தலைப்பு இப்படியிருக்கின்றதே என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பிறகு அட்டைப்படத்தை கண்டபின் ஓரளவிற்கு யூகிக்க முடிந்தது.

பிரசன்னாவிற்கு பிடித்த எழுத்தாளர் அசோகமித்திரன் என்று தோன்றுகின்றது. பெரும்பாலான கதைகள் அவரது சாயல் தெரிகின்றது. அசோகமித்திரனின் சிறப்பு அவர் கதையை சிக்கலாக்குவதில்லை. சின்ன சின்ன வரிகளில் உணர்ச்சிக் கொந்தளிப்பின்றி சொல்லி செல்வது. அது போன்ற பாணியை தனதாக்கிக் கொண்டுள்ளார். ஒன்றிரண்டு வரிகளில் பெரிய நிகழ்வை காட்டும் கலை கைவந்துள்ளது.

30 நவம்பர் 2017

6147 - சுதாகர் கஸ்தூரி

ஆங்கிலத்தில் பல சுவாரஸ்யமான நாவல்களை எழுதியவர் டான் ப்ரெளன். பெரும்பாலும் சுவாரஸ்யமானவை, ஆனால் ஒரே சட்டகத்தில் அடங்கும் கதைகள். விடை தெரியாத சில அமானுஷ்ய விஷயங்கள், சில ரகசியங்கள், புதிர்கள், பழைய பாடல்கள், கட்டுமானங்கள் போன்றவற்றை வைத்து பின்னப்படும் கதைகள். புதிர்களை விடுவிக்க அந்த துறை சார்ந்த சிலர் உதவ, சுபம். கதை சொல்லலும் ஒரே முறையில். சினிமாக்களில் டைட்டிலுக்கும் முன்னால் வருவது போன்ற ஒரு காட்சித்துண்டு, அது பின்னால் எங்காவது ஒட்ட வைக்கப்படும். ஒன்றிரண்டு நாட்களில் நடந்து முடியும் கதை. 

கதை நாயகன் ராபர்ட் லாங்க்டன் சுழலில் வந்து சிக்கி கொள்வார் . கூடவே அவருக்கு உதவ ஒரு பெண். வில்லன் கூட்டத்தில் ஒருவன் இவர்களுடனே எங்காவது சுற்றிக் கொண்டிருப்பான், அவனை ஒரு சில்ஹவுட்டில் காட்டுவார்கள். வில்லன் பெரும்பாலும் தலைமறைவாக,தொலைபேசியில் அல்லது ஒரு இருட்டில் முகமறியாமல் இருப்பான்.  நடுநடுவே புதிர் குழப்பமாக இருக்கும் போது ராபர்ட்டின் நினைவுகள் பின்னோக்கி செல்லும், ஏதாவது ஒரு நிகழ்வில் விடை கிட்டும். பரபரப்பான க்ளைமேக்ஸ், சினிமா பாணி. இதுதான் டான் ப்ரெளன் ஸ்டைல்.

ஜெயமோகன் ஒரு முறை "தமிழலும் பல டான் ப்ரெளன்கள் உருவாக வேண்டும்" என்று எழுதியிருந்தார். கதையின் ஆசிரியர் அதை சீரியசாக எடுத்துக் கொண்டுவிட்டார் பொல. அதே பாணி அப்படியே. ஆசிரியர் பல துறைகளில் பல விஷயங்களை படித்திருக்கின்றார். ஆராய்ச்சி துறையில் இருக்கின்றார் என்று அவரைப் பற்றிய தேடல்கள் சொல்கின்றது. அதனால் இயல்பாகவே விஞ்ஞான விஷயங்களில் பல விஷயங்கலை அறிந்துள்ளார், தமிழ்ப்பாடல்கள், பூகோளம், சரித்திரம், எண் கணிதம், வடிவ கணிதம் என்று அவர் அறிந்த பல விஷயங்களை வைத்து கதையை பின்னியிருக்கின்றார். 

22 நவம்பர் 2017

மகாத்மா காந்தியின் கொலை வழக்கு - சொக்கன்

காந்தியை கொன்றவன் யார்? கோட்சே. பள்ளி சரித்திரம் கற்று தருவது அவ்வளவுதான். காந்தியின் கொள்கைகள் பிடிக்காமல் கோட்சே என்பவன் சுட்டு கொன்றான் என்ற அளவிற்கு மேல் நமக்கு சொல்லி தருவதில்லை. சமூக வலைதளங்களில் வரும் பிதற்றல்களுக்கு அளவில்லை. காந்தி கொலையைப் பற்றி ஒரு முழுமையான சித்திரத்தை அறிந்து கொள்ள உதவும் ஒரு நல்ல புத்தகம் இது.

காந்தி கொலை செய்யப்பட்டார், குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர் என்று இரண்டு வரிகளில் முடிகின்ற விஷயமல்ல. காந்தியை கொல்ல நினைக்கும் அளவிற்கு ஒருவன் செல்லக் காரணம் என்ன? தேசம் முழுவதும் மதித்த ஒருவரை ஒருவன் கொல்ல நினைக்கும் போது அவனின் தரப்பு என்ன, எந்த ஒரு வலுவான காரணம் அவனை அங்கு தள்ளுகின்றது. பள்ளியில் குண்டுவைக்கும் ஒருவனுக்கே, அவனுக்கும் காரணம் இருக்கும் என்று அனுதாபத்தோடு பார்க்க வேண்டும் என்று பல முற்போக்காளர்கள் கூறுகின்றார்கள்.

கோட்சேவிற்கான காரணம் என்ன?
என்ன?
கோட்சேவிற்கு காரணம் கேட்க கூடாதா?
ஏன்?
அவன் சிறுபான்மை சமூகத்தவன் இல்லையா?
ம்ம்ம், சரி நான் முற்போக்கு வாதியில்லையே அதனால் பரவாயில்லை, காரணம் என்னவென்று பார்ப்போம் என்று படித்தேன்.

14 செப்டம்பர் 2017

சூல் - சோ. தருமன்

ஆசிரியரைப்பற்றி ஒரு சிறிய அறிமுகம். சோ. தருமன் கோவில்ப்பட்டி அருகிலிருக்கும் உருளைக்குடி கிராமத்தை சேர்ந்தவர். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த தருமன், அவரின் சமுதாய மக்களின் வரலாற்றை தூர்வை, கூகை என்னும் இரண்டு நாவல்களில் பதிவு செய்திருக்கின்றார். தன்னை ஒரு தலித் எழுத்தாளர் என்று குறுக்குவதை விரும்பாதவர். கரிசல் காட்டு கிராமத்து வாழ்வை பதிவு செய்த ஒரு சிறந்த எழுத்தாளர். 

தருமனின் எழுத்துக்களில் என்ன வித்தியாசம்? அவர் காட்டும் தலித் சமுதாயம்தான். தலித் மக்களை ஒரு வித அனுதாபத்துடன் அணுகும் மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுகின்றார். தலித் சமுதாயம் இப்படியும் இருந்தது என்பதை அவரது தூர்வை நாவலில் காட்டுகின்றார். பெரிய சம்சாரிகள், நிலம் வைத்து விவசாயம் செய்தவர்கள், பிற ஜாதியினரிடம் சகஜமாக பழகியவர்கள். கூகை நாவலில் தலித் மக்களுக்கும் பிராமணர்களுக்குமிருந்த உறவைப் பற்றி காட்டுகின்றார். பல போராளிகளுக்கு இது போன்ற விஷயங்கள் உவப்பாக இருக்காது. எரிச்சலாகக் கூட இருக்கும், ஆனால் எழுத்தாளன் என்பவன் கொஞ்சம் தயவு தாட்சண்யம் பார்க்காதவனாக இருக்க வேண்டுமல்லவா?

சூல் முதலிரண்டு நாவல்களிலிருந்து விலகி, அக்கால மக்களின் வேறு ஒரு வாழ்க்கையை காட்டுகின்றது. முதல் இரண்டும் நாவல்களும் சமூக, பொருளாதர மாற்றங்களை பேசுகின்றது. இந்நாவல் விவசாயம், ஆன்மீகம், பாரம்பர்ய அறிவு, அரசியல் மாற்றங்களை அதிகம் பேசுகின்றது. 

30 ஆகஸ்ட் 2017

திரைகளுக்கு அப்பால் - இந்திரா பார்த்தசாரதி

ஒரு டெல்லி நாவல். 

கறுப்பு நிறத்தால் கணவனைவிட்டு விலகி வாழும் பெண்ணை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு நாவல். தாழ்வுமனப்பான்மை ஒரு எல்லைக்கு மேல், ஒரு உயர்வு மனப்பான்மையை உண்டாக்கி, ஒரு முரட்டுத்தனமான முகமூடியை போட்டு கொள்ளும். பின்னர் அந்த முகமூடியை கழட்ட முடியாமல் அதோடு திரிய வேண்டியிருக்கும். என்றாவது ஒரு நாள் அந்த முகமூடி எவராலோ கிழிக்கப்படும் போது அதை தாங்க முடியாது. 

முகமூடி அணிந்த ஒரு பெண்ணின் கதைதான் இது. வழக்கமான இ.பா டைப் பாத்திரங்கள். எதிராளியை குத்தி கிழித்து அனுபவிக்கும் பாத்திரங்கள், அறிவுஜீவி முகமூடிகள், மெலிதான காமம். 

வெளிவந்த காலத்தில் பரபரப்பாக இருந்திருக்கலாம், ஆனால் இன்று ஒரு சராசரி நாவல் என்பதற்கு மேலேக ஒன்றுமே தோன்றவில்லை.

29 ஆகஸ்ட் 2017

குருதிப்புனல் - இந்திரா பார்த்தசாரதி

விகடனில் ஈ.வெ.ரா பற்றிய தொடர் வரலாற்று நாயகர்கள் தொடரின் ஒரு பகுதியாக வெளிவந்து கொண்டிருந்தது. அலுவலகத்தில் அப்போது வெட்டியாக இருந்த காரணத்தால் விகடன் பின்னூட்டப் பகுதியில் அனைவருடனும் சண்டை போட்டுக் கொண்டிருந்தேன். ஈ.வெ.ரா பற்றிய எனது விமர்சனங்களுக்கு பலர் வந்து என்னுடன் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தனர். 

கீழ வெண்மணி சம்பவத்தைப் பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை என்று எங்கோ படித்ததை ஒரு வாதமாக அங்கு வைத்த போது அதற்கு பதில் மட்டும் வரவில்லை. விதவிதமா விளக்கெண்ணை பதில்கள் கிடைத்தன. அதைப் பற்றி தேடிப்படித்த போது பல விபரங்கள் கிடைத்தன. அதிலொன்று அதை அடிப்படையாக வைத்து இ.பா ஒரு நாவல் எழுதியிருக்கின்றார். 

குருதிப்புனல் என்ற நாவலின் பெயர் அதற்கு முன்னரே பரிச்சியம். கமல் அதை தன் படத்திற்கு தலைப்பாக வைத்ததும், “ப்” ஐ விட்டுவிட்டு தலைப்பை வெளியிட்டதும் பின்னர் அதை சேர்ததும், பின்னர் தலைப்பை வைத்து இது இ.பாவிற்கு சொந்தமான தலைப்பு என்று சர்ச்சையானதும் நினைவிலிருக்கின்றது.

26 ஆகஸ்ட் 2017

சுதந்திர பூமி - இந்திரா பார்த்தசாரதி

டெல்லி வாழ் எழுத்தாளர்களில் முக்கியமானவர் இ.பா. அவரது நாவல்கள் எனக்கு ஒரு வித சலிப்பையே தந்திருந்தன. காரணம் ஒரே அறிவுஜீவித்தனமான பாத்திரங்கள். அனைத்து பாத்திரங்களும் சிந்தித்துக் கொண்டே இருப்பது. குறிப்பாக வெந்து தணிந்தன காடுகள், மாயமான் வேட்டை. அதீத பேச்சுக்கள். 

ஆனால் இந்த நாவல் அந்தளவிற்கு இல்லை. ஓரளவிற்கு அறிவுஜீவித்தனமான பேச்சுகள் இல்லை. நாவலின் களம், பாத்திரங்கள் அதற்கு காரணமாக இருந்திருக்கலாம். அரசியல்வாதிகள் - அறிவுஜீவித்தனம். சேருவது கடினம்தான்.

அரசியல் என்பது எந்த காலகட்டத்திலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றது. முகுந்தன் என்னும் ஒரு தமிழன் ஏதோ ஒரு மிஸ்ராவிடம் சமையல்க்காரனாக சேர்ந்து மந்திரியாவதுதான் கதை. 

கதை வழியே பல விஷயங்களை விமர்சனம் செய்கின்றார். நாவல் நடக்கும் காலகட்டம் இந்திராகாந்தியின் ஆட்சிக்காலம் என்று யூகிக்கமுடிகின்றது. இன்றுவரை அந்த நிலையை மாறாமல் வைத்திருப்பதில் காங்கிரஸ்ஸின் பங்கு பெரியது.

02 ஆகஸ்ட் 2017

குருத்தோலை, கொட்டு மொழக்கு - செல்லமுத்து குப்புசாமி

இரண்டு நாவல்கள். பாத்திரங்கள் அதேதான். ஆனால் இரண்டும் வேறு வேறு களம். 

குருத்தோலை ஒரு சிறுவனனின் பதின் பருவத்தில் ஆரம்பித்து மத்திம வயதில் முடிகின்றது. கிராமத்து மனிதர்களின் கதை. கொங்கு வட்டார கிராமத்தை ஓரளவிற்கு காட்ட முயற்சித்திருக்கின்றது. அதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கில்லை. முதலில் வரும் சில பகுதிகளை படிக்கும் போது வேறு ஒரு எழுத்தாளர் எழுதியதோ என்ற சந்தேகம் வந்துவிட்டது. 

ஒரு மனிதனின் வாழ்வில் நடக்கும் சில நிகழ்வுகளை ஒரு பார்வை பார்த்து செல்லும் கதை. அந்த பகுதி மக்களின் வாழ்வை கொஞ்சம் நுணுக்கமாக சொல்லியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அழுத்தமான சம்பவங்கள் ஏதுமில்லாமல், முழுமையான பாத்திரங்கள் ஏதுமின்றி ஓடுகின்றது. 

சுமாரான நாவல்.

கொட்டு மொழக்கு - முதல் நாவலில் வரும் ஒரு சிறுவன் தன் தாத்தாவின் சாவிற்கு வருவதுதான் கதை. முந்தைய நாவலுடன் ஒப்பிடுகையில் இதை சிறப்பானது எனலாம். ஒரு சாவு என்பது சாதரண விஷயமல்லவே. நாவல் முழுவதும் அந்த சாவை ஒட்டி நடக்கு விஷயங்கள்தான். எழவு வீட்டிற்கு செல்பவனின் தர்மசங்கடம், அங்கு நடக்கு சில அபத்தங்கள், இரண்டு காலகட்டத்திற்கு நடுவில் நடக்கும் விஷயங்கள் என்று பல விஷயங்களை காட்டுகின்றார். ஒருவன் இறந்து போனால் அதன் பின் நடக்கும் விஷயங்கள் எத்தனை. எவ்வளவு சடங்குகள், அதற்கான வழிமுறைகள். அந்த சடங்குகளில் இருக்கும் சமூகப் பிரச்சினைகள் என அனைத்தையும் காட்டுவதில் வெற்றி பெற்று இருக்கின்றார். கதை எழுதும் போது ஆசிரியருக்கு வந்த ஏதோ ஒரு தொலைபேசி உரையாடலையும் உள்ளே வைத்துவிட்டார் போலா. சாரு பாணி. ஒட்டாமல் தெரிகின்றது.

குருத்தோலையை விட கொட்டுமுழக்கு சிறப்பாக இருக்கின்றது.

31 ஜூலை 2017

இரவல் காதலி - செல்லமுத்து குப்புசாமி

நாவலைப் பற்றிய பல குறிப்புகள் இதை ஒரு ஐடி துறை சம்பந்தப்பட்ட நாவல் என்று கூறுகின்றன. ஐடி துறையின் வளர்ச்சி காரணமாக சமூகத்தில் உண்டான மாற்றங்களை பேசுகின்றது என்றும் எழுதியிருந்தார்கள். பாத்திரங்கள் ஐடி துறையில் வேலை செய்வதால் மட்டுமே அப்பாத்திரங்களின் அனைத்து செயல்களுக்கும் அத்துறையே காரணம் என்ற மொன்னையான அபிப்ராயம் மட்டுமே இது. கள்ளக்காதல் எல்லா துறைகளிலும் நடக்கக்கூடியது. 

கதை ஆரம்பம் என்னவோ ஐடி உலகை காட்டுவது போலத்தான் ஆரம்பிக்கின்றது. ஒவ்வொரு துறைக்கும் சில தனித்துவமான சில விஷயங்கள் உண்டு. கதையோடு ஒட்டி அத்துறை ஞானத்தை கொஞ்சம் நம்முள் கடத்தலாம். அப்படி செய்தால் மட்டுமே அந்த நாவலை துறை சார்ந்த நாவல் என்று கூறலாம். உதாரணம் ஆழி சூல் உலகு, கரைந்த நிழல்கள்.  இதில் அது போன்ற விஷயங்கள் ஏதுமில்லை. சொல்லப்படும் சின்ன சின்ன விஷயங்களும் படிப்பவர்களிடம் ஒரு எதிர்மறை விளைவை ஏற்படுத்தும்படி ஒரு வித கிண்டலாகவே சொல்லப்படுகின்றது

ஐடி துறையை பற்றி ஆரம்பிக்கும் நாவல் கடைசியில் ஒரு கள்ளக்காதலில் சென்று சேர்கின்றது. 

18 ஜூலை 2017

விலங்குப் பண்ணை - ஜார்ஸ் ஆர்வெல்

கம்யூனிசத்தை, கம்யூனிஸ்டுகளை விமர்சனம் செய்து பல நூல்கள் எழுதப்பட்டுள்ளன. அதில் இந்த நூல் வித்தியாசமானது. நேரடியாக விமர்சிக்காமல், விலங்குகளை வைத்து கடுமையான விமர்சனத்தை வைக்கும் புத்தகம். George Orwell எழுதிய Animal Farm என்னும் ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பு, மொழி பெயர்ப்பு  என்பதா தோன்றாத நடை. நேரடியான தமிழ் நூல் போன்றே உள்ளது.

ஜோன்ஸ் என்னும் ஒருவரின் பண்ணையில் வாழ்ந்து வந்த விலங்குக்கூட்டத்தில் ஓல்ட் மேஜர் என்ற பன்றி ஒரு நாள் தன் பொன்னுலக் கனவை மற்ற விலங்குகளிடையில் சொல்லிவிட்டு மரணமடைகின்றது. அதன் பின் ஸ்நோபால் என்னும் மற்றொரு பன்றி, நெப்போலியன் என்னும் பன்றியுடன் சேர்ந்து பண்ணையை ஜோன்ஸிடமிருந்து கைப்பற்றுகின்றது. முதலில் விலங்குகளுக்கு சம உரிமை என்று கனவுடன் ஆரம்பிக்கும் விலங்குப் பண்ணையில் நெப்போலியன் கை ஓங்குகின்றது. ஸ்நோபாலை துரோகி என்று குற்றம் சாட்டி வெளியே விரட்டுகின்றது நெப்போலியன். அதற்கு தன்னுடன் ஒரு நாய்ப்படையை வைத்து அனைவரையும் மிரட்டி பணிய வைக்கின்றது. அதே சமயம் மற்றொரு பன்றியின் மூலம் விலங்குகளை அனைத்தும் அவர்களின் நன்மைக்கே என்று நம்பவும் வைக்கின்றது. மெதுவாக சர்வாதிகாரத்திற்கு செல்கின்றது நெப்போலியன். விரட்டிவிட்ட மோசஸ் என்னும் காகம் வருகின்றது. மெதுமெதுவாக பண்ணை பழைய நிலைக்கு போகின்றது. மனிதர்களின் தலைமைக்கு பதிலாக விலங்கு. 

ஸ்டாலின் மற்ற தலைவர்களை ஓரம் கட்டிவிட்டு ரஷ்யாவை வதைத்த கதைதான். கம்யூனசத்தை பற்றிய பல விமர்சன நூல்களை படித்திருந்தாலும், படிக்காவிட்டாலும் கம்யூனிசத்தை பற்றி ஒன்று தெரியாமல் இருந்தாலும் கூட புத்தகம் சுவாரஸ்யம் தரும்.

மக்களை மக்களில் ஒருவனாக இருந்து ஆளப்போவதாக சொல்லி பதவியை பிடித்து, மெதுவாக மற்ற மக்களைவிட தலைவர்களாகிய நாங்கள் கொஞ்சம் மேம்பட்டவர்கள் என்று திரும்பி, உங்களுக்கு என்ன தேவை என்பது தலைவனான எனக்குதான் தெரியும் என்று ஆரம்பித்து, நான் சொல்வதுதான் உங்களுக்கு நல்லது என்று மக்களை விலங்குகளாக்கிய தலைவர்களை பற்றிய விமர்சன நூல். சுவாரஸ்யமான நூல்.

12 ஜூலை 2017

ரத்தத்தில் முளைத்த என் தேசம்

அமர்நாத் யாத்திரை சென்ற ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு சிலர் உயிரை இழந்துள்ளனர். ஹிந்துக்களின் ரத்தம் அவர்கள் ஹிந்துக்களாக இருப்பதன் காரணத்தால் மட்டுமே சிந்தப்படுவது இன்று நேற்றல்ல பல நூறு ஆண்டுகளாகவே நடந்து வரும் துயரம். அதுவும் ஹிந்துக்களின் பூர்வீக பூமியான நமது பாரதத்தில். முதல் காரணம், ஹிந்து மதம்தான். வியப்பாக இருந்தாலும் அதுதான் உண்மை. ஹிந்துக்களுக்கே உரித்தான பெருந்தன்மை, தர்மத்தின்பாலிருக்கும் பற்று, நேர்மை அதுவே இன்று இந்த நிலைமையை உண்டாக்கிவிட்டது. ஆனால் தர்மம் என்றும் தன்னை நம்பியவர்களை கைவிடாது என்பதே நமக்கு போதிக்கப்பட்டது. அதை சரித்திரம் பல முறை நிரூபித்து வருகின்றது. இல்லை என்றால் இன்று ஹிந்து மதம் என்ற ஒன்றே இல்லாமல் போயிருக்கும். ஹிந்து மதம் என்பதே கிடையாது என்று உளரும் முட்டாள்கள் யாராவது துரதிருஷ்டவசமாக இதை படிக்க நேர்ந்தால், மூடி வைத்துவிட்டு கிளம்பலாம்.

நாட்டில் மதக்கலவரம் வரும் போது நமது டம்ப்ளர்களும், புர்ச்சியாளர்களும், பஹூத்தறிவாளர்களும் கூறுவது, பெரியார் மண். இங்கு இஸ்லாமியனும் நானும் சகோதரன். ஒரு மண்ணும் கிடையாது. முக்கியக்காரணத்தை தமிழர்களுக்கு பிடித்த சினிமா வசனத்தாலேயே காட்டலாம், ஹே ராமில் வரும் ஒரு வசனம், "நீ ஒரு செளத் இண்டியன், என் வேதனை உனக்கு புரியாது ராம்". அதுதான். வட இந்தியா அந்நிய படையெடுப்பின் வலியை முழுவதும் தாங்கியுள்ளது. அதன் வலி அவர்களுக்கு தலைமுறை கடந்தும் இருக்கின்றது. 

அந்த வலியை ஆரம்பம் முதல் கூறுகின்றது. எப்படி கொஞ்சம் கொஞ்சமாக நமது பாரதம் விழுந்தது. எத்தனை கோவில்கள் இடிக்கப்பட்டன. கோரி, கஜினி, கில்ஜி, துக்ளக், பக்தியார், குத்புதீன் என்று ஒவ்வொரு அரசனும் செய்த அக்கிரமங்கள். இடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கோவில்கள். காசி, மதுரா, ஹம்பி. சோம்நாத் கோவிலின் ரத்த பக்கங்கள இங்கு எத்தனை பேருக்கு தெரியும். சோம்நாத் ஐம்பதினாயிரத்திற்கும் மேற்ப்பட்டவர்களை கொன்று இடிக்கப்பட்ட கோவில். பெயர் அறியாத எத்தனை கோவில்கள், ஹிந்துக்கள். 

23 ஜூன் 2017

அலை உறங்கும் கடல் - பா.ராகவன்

அலை உறங்கும் கடல், கல்கியில் தொடராக வந்தது. அனேகமாக பொன்னியின் செல்வன் வந்து கொண்டிருந்த சமயமாக இருக்கும். 1999 - 2002 வாக்கிலிருக்கலாம். பொன்னியின் செல்வன் தொடருக்காக எனது மாமா எனக்காக கல்கி வாங்கி வந்தார். ஆனால் அவர் ரெகுலராக படிக்க மாட்டார், இந்த தொடரை அவரை படிக்க சொன்னேன். படித்துவிட்டு கடுப்பாகி விட்டார். "எப்பப் பாரு பிராமணன வச்சி ஏதாவது எழுதறதே இவனுங்க வேலையா போச்சி" என்று திட்டிவிட்டு போய்விட்டார். அவருக்கு இந்த காரணத்திற்காகவே ஜெயகாந்தனையும் பிடிக்காது. எனக்கு புத்தகங்களுக்கு அவர்தான் வழிகாட்டி. இருந்தும் எனக்கு இது மிகவும் பிடித்திருந்தது.

அதுவரை ராஜேஷ்குமார் போன்று துப்பறியும் கதைகளையும், விகடனில் வரும் சிறுகதைகளையும், தொடர்களையும் படித்து வந்த எனக்கு, இது ஒரு புதிய வகை தொடராக இருந்தது. சேகரித்து, தைத்து வைத்திருந்தேன். வேலைக்காக சென்னை வந்த பின் அது எங்கோ சென்று விட்டது. பரணில் தேடினால் கிடைக்கலாம். 

பிறகு இந்த நூலை தேடிப்பார்த்தேன், அச்சில் இல்லையென்று விட்டு விட்டேன். போன வாரம், பாரா கிண்டிலில் கிடைக்கின்றது என்று ஃபேஸ்புக்கில் தகவல் வெளியிட்டிருந்தார். இரவோடு இரவாக உடனே வாங்கிவிட்டேன். 

20 ஜூன் 2017

பொலிக பொலிக - பா. ராகவன்

பொலிக பொலிக - பா. ராகவன்

நன்றி - தினமலர்
ராமானுஜரின் ஆயிரமாவது திருநட்சத்திரம் சமீபத்தில் வந்தது. அதையொட்டி தினமலரில் ராமானுஜரின் வாழ்க்கை சரிதத்தை பா.ராகவன் தினமும் எழுதிவந்தார். முதலில் சில நாட்கள் படித்தபின், தொடர்ந்து படிப்பது முடியாமல் போனது. தினமும் படிப்பதை விட புத்தகமாக படிப்பதே எனக்கு சுலபமானது.

ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்னால பிறந்து வாழ்ந்த ஒருவரைப் பற்றி இன்றைக்கு தெரிந்து கொள்ள வேண்டிய தேவை என்ன இருக்கின்றது என்ற கேள்வி எழலாம். பதில் அது யாருடைய வாழ்க்கை என்பதைப் பொறுத்தே அமையும். இன்றைய சூழலில் ராமானுஜரின் வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்வது என்பது சமூகம், ஆன்மீகம் என்ற இரண்டு தளங்களிலும் தேவை. 

09 ஜூன் 2017

அரசூர் வம்சம் - இரா. முருகன்

நம் காலத்திற்கு  முற்பட்ட காலத்தைப் பற்றிய கதைகள் எப்போதும் சுவாரஸ்யமானவை.  சரித்திரக்கதைகள் காலத்தால் முந்தையவை, மற்றொருவகை சில நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட வாழ்க்கையை பற்றிய கதைகள், கொற்கை, ஆழி சூல் உலகு, தூர்வை, கோபல்ல கிராமம் போன்றவை. இவையெல்லாம் சமூகத்தை மையமாக கொண்டு எழுதப்படுபவை. ஒரு குடும்பத்தை மையமாகக் கொண்டு சில கதைகளும் எழுதப்பட்டிருக்கின்றன. அசோகமித்திரனின் யுந்தங்களுக்கு இடையில், பி.கே.கிருஷ்ணனின் புலிநகக் கொன்றை. இவையிரண்டும் ஒரு பெரிய குடும்பத்தின் தலைமுறைகளைப் பற்றி பேசுபவை. 

அரசூர் வம்சமும் அது போன்ற ஒரு நாவல். ஒரு குடும்பத்தில் ஏதோ ஒரு தலைமுறையில் நடந்த கதை. சிறு சிறு குறிப்புகளை வைத்து கற்பனையால் விரித்தெழுதியுள்ள நாவல். ஆங்கிலேயர்களின் காலம், அவர்கள் தங்களை மேதுவாக இங்கு நிலைநாட்டிக் கொண்டிருந்த காலம் என்று வைத்துக் கொள்ளலாம். கதை 1800 களின் மத்தியில் என்று எனக்கு தோன்றுகின்றது. 

இரண்டு புவியியல் பகுதிகளில் நடக்கும் கதை ஒன்று கேரளம், மற்றொரு பகுதி தமிழகம். பிராமணக் குடும்பங்கள்.

அரசூர் ஒரு காலாவதியாகிக் கொண்டிருக்கும் ஜமீன். ஆங்கிலேயர்களின் தயவில் வாழும் ஒரு ஜமீன்தார். புகையிலை விற்று வாழும் பிராமணர் குடும்பம். அந்த பிராமணரின் மகன் திருமணம் செய்து கொள்ளும் குடும்பம் இருப்பது கேரளத்தில். சமையல் செய்யும் குடும்பம்.

23 மே 2017

அசுரன் - ஆனந்த் நீலகண்டன்

புராண இதிகாசங்களை வரலாற்று பார்வையுடன் மீண்டும் எழுதுவதை பல மொழிகளில் பலர் செய்து இருக்கின்றனர். உதாரணமாக ஜெயமோகனின் வெண்முரசு, பைரப்பாவின் பர்வா, எம்.டி வாசுதேவ நாயரின் இனி நான் உறங்கலாமா. இவை அனைத்தும் மகாபாரதத்தை அடிப்படையாக கொண்டவை. ராமாயணத்தை அப்படி யாரும் மாற்றி எழுதியதாக எனக்கு தெரியவில்லை. சமீபத்தில் அமிஷ் திரிபாதி ஒரு நாவல் தொடரை எழுத ஆரம்பித்துள்ளார், முதல் பகுதி வெளிவந்து விட்டது. இரண்டாம் பகுதி அடுத்த வாரம் வெளிவருகின்றது.

அசுரன் - அந்த வகையில் ராமாயணத்தை அடிப்படையக கொண்டு எழுதப்பட்டுள்ளது. மேலே கூறப்பட்ட நூல்களில் வேறு ஒரு அம்சம் உண்டு, இதிகாசங்களை ஒரு வரலாற்று பார்வையுடன் பார்ப்பது. இதிகாசங்களில் விடுபட்ட இடங்களை நிரப்புவது, சில இடங்களை விரித்து எழுதுவது என்று. அமிஷ், இதிகாச கதையை கொஞ்சம் வரலாறு, விஞ்ஞானம் என்று கலந்துகட்டி ஒரு மசாலா நாவலாக எழுதுகின்றார். அசுரன் இதில் எந்த வகையிலும் சேராமல், தனக்கு தோன்றியதுதான் வரலாறு என்ற பெயரில் எழுதப்பட்ட ஒரு பெரிய குப்பை.

ராமாயணங்களில் பல வித ராமாயணங்கள் உண்டு, வெளிநாடுகளில் கூட ராமாயணங்கள் உண்டு. ஜைன, புத்த மதங்கள் கூட தங்கள் மதத்தை பரப்ப தங்களுக்கென்று ராமாயணங்களை எழுதிக் கொண்டார்கள் என்று கூறுவார்கள். அதில் ஏதோ ஒரு ராமாயணத்தில் வரும் கதை, சீதை ராவணனின் மகள் என்பது. அதை அடிப்படையாக கொண்டு, அசுரர்களின் கதையை எழுதுகின்றே பேர்வழி என்று ராவணன் முதற்கொண்டு அனைவரையும் கேவலமாக சித்தரித்து ஒரு தண்டத்தை எழுதியிருக்கின்றார் ஆனந்த் நீலகண்டன்.

18 மே 2017

கொசு - பா. ராகவன்

அரசியலை அடிப்படையாக் கொண்ட எழுத்துக்கள் மிகக்குறைவு. சோவின் நாடகங்கள் தனி ரகம். கதைகள், நாவல்கள் வெகு குறைவு. இந்திரா பார்த்தசாரதி வேதபுரத்து வியாபாரிகள், மாயமான் வேட்டை  போன்ற நாவல்களை எழுதியிருக்கின்றார். வேறு யாரும் எழுதியிருக்கின்றார்களா என்று தெரியவில்லை. கொசு, ஒரு அரசியல் நாவல். அரசியல்வாதிகளை பற்றி பேசும் நாவல். தலைப்பை கண்டு வழக்கமான பா ராகவனின் நகைச்சுவை கட்டுரை தொகுப்பு என்று நினைத்து கொண்டேன். நாவல் என்றது கொஞ்சம் ஆச்சர்யம். அவரது தொடர்கதை ஒன்றை கல்கியில் படித்த நினைவிருக்கின்றது. அலை உறங்கும் கடல். ஓரளவிற்கு நல்ல கதை.

தொண்டனுக்கு ஒரு நல்ல பதவியை அடைவது என்பது எப்போதும் கனவாகவே இருக்கும். அந்த கனவுடன் இருக்கும் முத்துக்குமாருக்கு அவன் கட்சியின் சீனியர்கள் கற்று தருவது என்ன என்னபதுதான் கொசு. கட்சியில் பல ஆண்டுகளாக காலம் தள்ளியும் வெறும் வட்டமாக இருப்பவருக்கு, பெரியவட்டமாக ஆசை. அதற்கு ஐடியா கேட்க முத்துக்குமாரை அழைக்கின்றார். அதிலிருந்து மெதுவாக முத்துக்குமார் முன்னேற முயற்சிக்கின்றான். முதல்வன் பட இறுதியில் ஒரு வசனம் வரும், என்னையும் அரசியல்வாதி ஆக்கிட்டீங்களேடா, அதுதான் இங்கும்.

16 மே 2017

வைரமுத்து சிறுகதைகள்

திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து சிறுகதைகள் எழுதுவதாக விளம்பரம் பார்த்தேன். குமுதம் தடபுடலாக விளம்பரம் செய்திருந்தது. மூன்றாம் உலகப்போரின் சூடுதாங்காமல் விகடன் விலகிவிட்டது போல. 

சிறுகதைகள் எழுதிமுடித்த கையோடு உடனே அது புத்தகமாகவும் வந்துவிட்டது, பெரிய விழா, விஜய் டீவியில் பட்டி மன்றம், மலையாள மொழி பெயர்ப்பு. வைரமுத்து ஒரு நல்ல வியாபாரி. தன் புத்தகங்களை விளம்பரப்படுத்தவும், வலுக்கட்டாயமாக விற்பனை செய்யவும் தெரிந்தவர். கிண்டில் அன்லிமிட்டடில் கிடைத்ததால் படிக்க ஆரம்பித்தேன். பொறுமையை மிகவும் சோதித்து விட்டது.

முன்னுரையில் பல பெரிய பெரிய எழுத்தாளர்களையேல்லாம் வைத்து சிறுகதை பற்றி பெரிதாக எழுதியுள்ளார் ஆனால் உள்ளே சுத்தம். வாரமலரில் கூட வெளியாக தகுதியில்லாத கதைகள். சிறுகதை என்பது இறுதியில் ஒரு திருப்பத்தை தருவது என்ற அளவில் எழுதப்பட்டவை, இல்லை சொல்லப்பட்டவை. எந்த கதையும் அவர் கையால் எழுதியது போல இல்லை, வாயால் சொல்லப்பட்டவை போன்றே இருக்கின்றது. இதே பிரச்சினைதான் அவரது கள்ளிக்காட்டு இதிகாசத்திற்கும் நேர்ந்தது. எழுதும்போது நம்மை அந்த உலகிற்கு அழைத்து சென்று நம்மையும் கதையில் ஈடுபடுத்தும். சொல்லப்படும் போது அதை இழக்கின்றது.

13 மே 2017

பழைய கணக்கு - சாவி

சாவி புகழ் பெற்ற பத்திரிக்கையாளர். ஆனந்த விகடன், கல்கி, தினமணிக்கதிர் போன்ற இதழ்களில் பணிபுரிந்துள்ளார். சாவி என்னும் இதழையும் நடத்திவந்தார். குங்குமம் இதழை இவருக்காகவே கருணாநிதி தொடங்கினார் என்றும் எங்கோ படித்த நினைவு. சாவியுடன் நெருக்கமாக பணி புரிந்த ரவி பிரகாஷ் தளத்தில் அவரைப் பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். 

சாவியின் இளவயது அனுபவங்களை முன் பின் தொடர்ச்சியில்லாது எழுதி கட்டி வைத்த ஒரு புத்தகம் பழைய கணக்கு. மிகப்பழைய கணக்கு, அனேகமாக எனக்கு ஒன்றிரண்டு வயதிருக்கும் போது வந்திருக்கும் போல. சாவியின் சிறுவயது அனுபவங்கள், பத்திரிக்கை துறையில் அடைந்த சுவாரஸ்யமான அனுபவங்களின் தொகுப்பு. சாவி சிறு வயதில் அதிக கஷ்டப்பட்ட ஒருவர், அதே சமயம் மிகுந்த சேட்டைக்கார ஆசாமி போல. அடிக்கடி வீட்டை விட்டு ஓடுவது, கோவில்களில் உண்டக்கட்டி வாங்கி தின்றுவிட்டு சுற்றுவது, காசில்லாமல் போகும் போது மீண்டும் வீடு திரும்புவது என்று ஜாலியாக இருந்திருக்கின்றார். ஏகப்பட்ட வேலைகளும் செய்திருக்கின்றார். கிங்காங் - தாராசிங் மல்யுத்தத்தை நடத்துவது, விளம்பர பலகைகள் எழுதுவது, போஸ்டர் ஒட்டுவது என்றும் இருந்திருக்கின்றார்.

பல சம்பவங்கள் ஒரு நல்ல சிறுகதைக்கான கருக்களை கொண்டிருக்கின்றது. அவரது நவகாளி யாத்திரை கட்டுரையை பற்றி பலர் எழுதியிருக்கின்றார்கள், ஆனால் அவர் காந்தியுடன் இருந்தது இரண்டு நாட்கள் என்பதுதான் உண்மை. விகடனில் வேலை வாங்க விகடன் பெயரில் பத்திரிக்கை ஆரம்பிப்பதாக கூறி,அதை வைத்தே வேலை வாங்கி, நடத்ததாத பத்திரிக்கையை மூட விகடனிடமே பணத்தையும் பெற்றது எல்லாம் பெரிய நரிகுளிப்பாட்டித்தனம்தான்.

10 மே 2017

Bhim: Lone Warrior - M.T. Vasudevan Nair

மலையாளத்தில் ரெண்டாமூழம் என்ற பெயரில் எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய மகாபாரதக்கதை. பர்வா மொழிபெயர்ப்பை படித்த பின் மற்ற மொழி பெயர்ப்புகளை படிக்க கொஞ்சம் பீதியாக இருக்கின்றது. பருவம் நூலில் அத்தனை பிழைகள். இதுவும் அதே சாகித்ய அகடமி பிரசுரம் என்பதால், ஆங்கில மொழிபெயர்ப்பையே படிப்பது உசிதம் என்று நினைத்தேன். பிறகு எப்படி ஆங்கில அறிவை வளர்ப்பதாம். அந்நூலை மலையாளத்தில் பெரும் பொருட்செலவில் திரைப்படமாக எடுக்கவிருக்கின்றார்கள் என்ற செய்தி புத்தகத்தை உடனே வாங்க தூண்டியது. இதை திரைப்படமாக்கினால் எப்படி இருக்கும் என்ற எண்ணத்துடனே படித்தேன்.

மகாபாரதத்தை பலரும் பலவிதமாக மாற்றி எழுதிப்பார்த்திருக்கின்றார்கள். இது முழுக்க முழுக்க பீமனனின் பார்வையில் நகரும் கதை. இரண்டாவது இடம் எப்போதும் கொஞ்சம் கடினமானது. நமக்கு முன்னாலிருப்பவனை முந்தாமல், அதே சமயம் மிகவும் பின்தங்காமல் சென்று கொண்டிருக்க வேண்டும். முதல்வனின் முட்டாள்த்தனம் தெரிந்தாலும் ஒன்றும் செய்யமுடியாது, அதன் விளைவுகளை பங்கு போடவும் தயாராக இருக்க வேண்டும். பீமன் இரண்டாமவன் அதை மையமாக வைத்து தலைப்பை இட்டிருக்க வேண்டும்.

பாண்டவர்களில் எனக்கு மிகவும் பிடித்த பாத்திரம் பீமன். குழந்தை (அ) இளம் பருவத்தில் முதன் முதலாக பாரதம் படிக்கும் எவரையும் கவரும் பாத்திரம் பீமன்தான். வலிமை. பதினாயிரம் யானைகளின் பலம் கொண்டவன் என்பதே அற்புதமான விஷயம் அல்லவா. ஆனால் பீமனுக்கு அந்த இடம் கிடைத்ததா என்பது கேள்விதான். ஆரம்பம் முதல் தர்மன் நம்புவது பீமனை மட்டுமே, கெளரவர்கள் கூட அஞ்சுவது பீமனை  மட்டுமே. ஆனால் அவனை விட அர்ஜ்ஜுனன் பெரிய வீரன் என்று கூறப்படும் இடங்களே அதிகம்.


24 ஏப்ரல் 2017

கள்ளி - வா மு கோமு

தலித் மக்களை பற்றிய் நாவல் என்று முன்னுரை கூறுகின்றது. சரிதான், தாழ்த்தப்பட்ட மக்களை பாத்திரங்களாக கொண்ட நாவல். அவர்களின் வாழ்வை பற்றி கூறியிருக்கின்றதா என்றால் ஓரளவிற்கு என்று கூறலாம். ஒவ்வொரு அந்தியாயமும் தனிக் கதை. சில பாத்திரங்கள் பல கதைகளில் எட்டிப்பார்க்கின்றார்கள். கொங்குப்பகுதி வட்டார வழக்கில் படிக்கும் முதல் நாவல். தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, சென்னை, நாஞ்சில் என்று பல வட்டார வழக்கை படித்தாலும் இது கொஞ்சம் கடினமாகவே இருக்கின்றது படிக்க. காரணம், பல வார்த்தைகள் முடியாமலே அந்தரத்தில் தொங்குவது போன்ற தொற்றம், மேலும் படிக்கும் போது சத்யராஜ், கோவை சரளா, மணிவண்ணன் போன்றவர்களின் குரல் கேட்பது போன்ற பிரமை வேறு. 

கிராமத்தில் தலித் மக்களுக்கு நடக்கும் நிகழ்வுகள் பற்றியே கதை. மேய்ச்சலில் விடுபட்ட ஆட்டை தேடிப் போகும் தந்தை மகன்,அவர்களின் உரையாடல் என்று அம்மக்களின் பின் புலத்தை காட்டுகின்றார். அதன் பின்னால் சில பல பகுதிகள் பரவாயில்லை என்று இருக்கின்றது. ஆனால் பிறகு வெறும் ஆண் பெண் உறவில் சென்று அமர்கின்றது. மொத்த நாவலும் அதை பற்றி பேசுவது போன்ற தோற்றத்தை காட்டுகின்றது.

21 ஏப்ரல் 2017

மொஸாட் - சொக்கன்


சொக்கன் தமிழ் இலக்கண சம்பந்தமாக பல புத்தகங்கள் எழுதியிருக்கின்றார். திருக்குறள் முதல் சங்க இலக்கியங்கள் வரை பயின்ற ஒரு நல்ல தமிழறிஞர் என்று சொல்லலாம். தமிழில் எழுதுவதே இன்று கடினமான நிலையில், பிழையின்றி எழுதுவோம் என்று பல நல்ல விஷயங்களை பரப்பி வருகின்றார். பெங்களூரில் அவரது அலுவலகத்தில் வாராவாரம் கம்பராமயாண வாசிப்பை நடத்தி, இப்போது சிலப்பதிகாரம் வாசித்து வருகின்றனர். அவர் எழுதிய ஒரு பரபரப்பான நூல் மொஸாட்.

மொஸாட்டை பற்றி சினிமா, வரலாறு அறிந்தவர்கள் கண்டிப்பாக கேள்விப்பட்டிருப்பார்கள். இஸ்ரேலியர்களின் உளவுத்துறை. நெருப்பிற்கு நடுவிலிருக்கும் கற்பூரக்கட்டி போன்ற நாடு இஸ்ரேல். சுற்றி இருப்பவர்கள் எந்த நேரமும் தாக்கும் அபாயம் கொண்ட நாடு. அதனாலேயே அவர்கள் அதிகம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருக்கின்றது. அதனை பூர்த்தி செய்வது மொஸாட். அவர்களின் உளவுத்துறை. இஸ்ரேலியர்களை பாதுகாக்க உண்டாக்கப்பட்ட அமைப்பு. 

உளவுத்துறையின் வேலை, வரும்முன் தடுப்பது என்பதே பொதுவான நடைமுறை. மொஸாட் தேவைப்பட்டா இறங்கி அடிக்கவும் செய்யும். ம்யூனிச் ஒலிம்பிக்கில் இஸ்ரேலிய வீரர்களை தீவிரவாதிகள் சுட்டு கொன்றனர். அதில் ஈடுபட்ட ஒவ்வொருவரையும் மொஸாட் தேடித்தேடி கொன்றது. அந்த கதையுடன் ஆரம்பமாகின்றது புத்தகம். பல பக்கங்களை அந்நிகழ்வே சாப்பிட்ட பின்னர் மெதுவாக மொஸாட்டின் சரித்திரத்திற்குள் வருகின்றது.

மொஸாட்டின் பல சாகசங்கள் பக்கங்களை நிரப்பியுள்ளதால் சுவாரஸ்யமான புத்தகமாகவே இருக்கின்றது. எங்கும் சுவாரஸ்யம் குன்றவில்லை. முக்கியமான ஒன்று சரித்திரத்தை சொல்கின்றேன் என்று ஒரு பக்கச்சார்புடன் எதுவும் எழுதப்படவில்லை. 

சொக்கன், கே.ஜி.பி என்று ரஷ்ய உளவுத்துறையை பற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கின்றா. இதோடு ஒப்பிடுகையில் அது கொஞ்சம் வெண் பொங்கல், இளையராஜாவின் மெல்லிசை பாடல்கள் வகையறா. படித்தவுடன் தூக்கம் வந்துவிடும். இப்புத்தகம் உங்களை தூங்க விடாது, வேகமாக படிக்க வைக்கும். 

11 ஏப்ரல் 2017

ஒரு கதை


ஸ்ரீராம் ”எங்கள் ப்ளாக்” என்ற பெயரில் ஒரு சுவாரஸ்யமான தளத்தை நடத்தி வருகின்றார்.  அவர் நீங்கள் கதை எழுதுவீர்களா என்று கேட்டார், கதை என்று சிலவற்றை எழுதியிருந்தேன். அதில் ஒன்றை அவருக்கு அனுப்பி வைத்தேன். இன்று அவர் தளத்தில் அது வெளியாகியிருக்கின்றது. அதன் இணைப்பு.

முதலில் இருந்த படத்தை பார்த்து நானும் கொஞ்சம் குழம்பிவிட்டேன் :)

படித்தபின் கதையின் தலைப்பிற்கும் படித்ததற்கும் தொடர்பு இருப்பதாக நினைத்தால், தலைப்புதான் பதில்

http://engalblog.blogspot.com/2017/04/blog-post.html

Veerappan: Chasing the Brigand

பிரபலமன முகம். சும்மா ஒரு மூக்கையும் அதற்கு கீழே ஒரு பெரிய மீசையையும் வரைந்தால் போதும், அட இவரா என்று அடையாளம் கண்டுவிடலாம். பல திரைப்பட கருக்களுக்கு சொந்தக்காரர். வீரப்பன், சே வீரப்பர் என்று சொல்ல வேண்டும் என்று கருணாநிதி கூறியிருந்தார். பாவம், அன்பழகருக்கு கூட கிடைக்காத பெருமை வீரப்பருக்கு கிடைத்தது. இருக்கட்டும் நாம் வீரப்பன் என்றே அழைப்போம். நமக்கு ஓட்டு பிச்சை தேவையா என்ன?

சுமார் 169 மனிதர்கள், ஏராளமான யானைகள், கணக்கில்லாத சந்தன மரங்களை அழித்த வீரப்பன் வேட்டையைப் பற்றி, வீரப்பனை ஒருவழியாக சுட்டு கொன்ற படைக்கு தலைவராக இருந்த விஜயக்குமார் எழுதிய புத்தகம். தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்ட ஒரு புத்தகம். ஒரு சாகசநாவலுக்கு இணையாக இருக்கின்றது. என்ன, முடிவு நமக்கு ஏற்கனவே தெரிந்தது. அதேசமயம் இதில் வீரப்பன்தான் சாகச நாயகனாக இருக்கின்றான். எல்லா ஆட்டங்களையும் தொடர்ந்து ஜெயித்து கொண்டே வந்திருக்கும் ஒருவனாகத்தான் இருந்திருக்கின்றான். கண் பார்வை கோளாறு மட்டுமிருந்திராவிட்டால் இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாம், ஆனாலும் இன்றைய டெக்னாலஜி சாத்தியங்களுக்கு தாக்கு பிடித்திக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.

விஜயக்குமாரை அதிரடிப்படைக்கு பதவியேற்க ஜெயலலிதா சொல்வதில் ஆரம்பிக்கும் கதை, நிகழ்காலத்திற்கும் கடந்தகாலத்திற்குமாக போய் வருகின்றது. நல்ல யுக்தி. இறுதிப்பகுதிகள் செம பரபரப்பு.

06 ஏப்ரல் 2017

இந்தியப்பிரிவினை உதிரத்தால் ஒரு கோடு - மருதன்

இந்தியப்பிரிவினை பற்றி ஏராளமான புத்தகங்கள் வந்திருக்கின்றன். தமிழில் என் கண்ணில் பட்டது இது, இதற்கு முன் குஷ்வந்த் சிங் எழுதிய பாகிஸ்தானுக்கு போகும் ரயில், மொழிபெயர்ப்பை படித்து முழி பிதுங்கியதை நினைவில் கொண்டுவந்துவிட்டது இப்புத்தகம். வரலாற்றை எழுதுபவனின் அரசியல் அவன் எழுதும் வரலாற்றி கலக்கும், ஆனாலும் மிகவும் ஒரு பக்க சார்ப்பாக எழுதினால் அது வரலாறு அல்ல. இந்தியப்பிரிவினை பற்றிய வரலாற்றை எழுதும் போது தன்னுடைய அரசியலையும் கலந்து எழுதியிருக்கின்றார்.

நான் லீனியர் முறையில் வரலாற்றை எழுதும் யோசனையை அவருக்கு யார் தந்தது என்று தெரியவில்லை. அனுகூல சத்ரு. எங்கெங்கோ அலைகின்றது. படிப்பவர் மனதில் ஒரு ஆழ்ந்த பாதிப்பை உண்டாக்க கூடிய சம்பவம், பிரிவினை. ஒரு கொசு கடித்த உணர்வை கூட ஏற்படுத்தாத அளவில் எழுதப்பட்டுள்ளது. அனைத்தும் துண்டு துண்டாக இருக்கின்றது. பிரிவினையின் போது நடந்த துயரஙக்ளை பற்றி சும்மா இரண்டு மூன்று பக்கங்களில் அடித்துவிட்டு விட்டு போக எதற்கு ஒரு புத்தகம்.

படிக்க வேண்டியதில்லை என்று பரிந்துரைக்கின்றேன்

05 ஏப்ரல் 2017

வந்தார்கள் வென்றார்கள் - மதன்

சரித்திரம் எப்போதும் சுவாரஸ்யமானது, அதை முடிந்தவரை கடினமாக்குவது அதை எழுதும் ஆசிரியர்களின் திறமையில் இருக்கின்றது. நமது பாட நூல் ஆசிரியர்கள் அந்த வகையில் மிகவும் கை தேர்ந்தவர்கள். வினாத்தாள் தயாரிப்பவர்கள் சரித்திரத்தை மாணவர்கள் எண்களாக புரிந்து கொண்டால் போதும் என்றே நினைக்கின்றார்கள். வருடங்களை சரியாக எழுதினால் போதும்.  சரித்திரத்தை படு சுவாரஸ்யமாக எழுத முடியும் என்று தமிழ் தொடர்கதை ஆசிரியர்கள்தான் முதலில் கண்டு கொண்டார்கள். ஆனால் பிரச்சினை அதிலிருக்கும் சரித்திரம்தான். முழுக்க முழுக்க சரித்திரத்தில் நடந்த சம்பவங்களை சுவாரஸ்யமாக, கொஞ்சம் நடுநிலையோடு தர முடியும் என்று காட்டியது மதனின் இந்த தொடர்தான். இதன்  பின்னரே பல தொடர்கள் பல்வேறு இதழ்களில் வெளிவந்தன.

தைமூரின் படையெடுப்புடன் ஆரம்பித்து கடைசி மன்னர் நாடுகடத்தப்படுவது வரை அனைவரையும் பற்றி சுவாரஸ்யமாக எழுதியிருக்கின்றார். சில புதிய விஷயங்களை தெரிந்து கொள்ள வைக்கின்றது.  முகலாய சாம்ராஜ்ஜியத்திற்கு முன்பே இஸ்லாமிய மன்னர்களின் ஆட்சி இங்கு ஆரம்பித்துவிட்டது. அதற்கு காரணம் ஒரு காதல் என்பது சோகமான விஷயம். முகம்மது கோரியின் படையெடுப்பிற்கு பின்னரே இங்கு அவர்களின் ஆட்சி என்பது வலுவாக காலூன்றியிருக்கின்றது. பிருத்திவிராஜனின் மனைவி சம்யுக்தை, அவர்களின் காதலை ஏற்று கொள்ளாத சம்யுக்தையின் அப்பா, காலை வாரிவிட பிருத்திவிராஜன் தோல்வி அடைகின்றான். அதுவே இங்கு அன்னியர் காலூன்ற அனுமதித்திருக்கின்றது. ராஜபுத்திர மன்னர்களின் ஒற்றுமையில்லாத தன்மையின் விளைவு பல நூறு வருடங்களுக்கு அன்னிய ஆட்சி.

முகம்மது கோரிக்கு முன்பு வந்த கஜினியின் படையெடுப்பை விரிவாக பேசுகின்றது. தோல்வியடைந்தவனுக்கு உதாரணமாக சொல்லப்படும் கஜினியின் அனைத்து படையெடுப்புமே வெற்றி என்பதுதான் உண்மை என்கிறார். சோமநாதர் ஆலய உடைப்பு போன்ற சரித்திர சம்பவங்கள் இன்று மதவாத பேச்சாகிவிட்டது. 

ஏகப்பட்ட குட்டி குட்டி ரசமான தகவல்கள் புத்தகத்தை சிறப்பாக்குகின்றது. அடிமைகள் வம்சத்தில் ஒரு பெண் ஆட்சி புரிந்தது (ரஸியா) மிக ஆச்சர்யமானது. துக்ளக்கிற்கு ஒரு சூஃபி கொடுத்த சாபம், விடாமல் துரத்தப்பட்ட்ட ஹுமாயூனின் மசக்கை மனைவிக்கு பாலைவனத்தில் கிடைத்த மாதுளை, பாபர் தன்னுயிரை இறைவனிடம் தந்து மகனின் உயிரை காத்தது போன்றவையெல்லாம் நம் சரித்திரப்பாடங்கள் சொல்லிதருவதில்லை.

நடுநிலைமை என்ற பெயரில் வழக்கமாகச் செய்யப்படும் ஒற்றைப்படைத்தன்மை இதிலில்லை. முடிந்தவரை அனைத்து பக்கங்களையும் காட்டியுள்ளார். இஸ்லாமிய மன்னர்கள் கோவில்களை மட்டுமல்ல மசூதிகளையும் இடித்துள்ளனர் என்ற தகவலும் கிடைக்கின்றது. ஒரு வேளை ஷியா,ஸுன்னி பிரச்சினையோ என்னவோ. 

நல்ல புத்தகம். சுவாரஸ்யமான புத்தகம்.

25 மார்ச் 2017

மாவோயிஸ்ட் - பா ராகவன்

கிழக்கு பதிப்பகம் சில வருடங்களுக்கு முன்பு ஏகப்பட்ட புத்தகங்கள் வெளியட்டது. நான் கூட எங்கே இன்னொரு மணிமேகலை பிரசுரமாகிவிடுமோ என்று கூட யோசித்தேன். அப்போதே விமர்சனங்களையும் சந்தித்தது. இணையத்திலிருக்கும் தகவல்கலை திரட்டி புத்தகமாக்குகின்றார்கள் என்று. காரணம், அவர்களின் புத்தக வரிசை அப்படி, பெரும்பாலான புத்தகங்களின் உள்ளடக்கம் நீங்கள் தேடினால் கிடைக்கும் அல்லது அதைப்பற்றி ஏகப்பட்ட புத்தகங்கள் வெளியாகியிருக்கும். ஆனால் அவையனைத்தையும் ஒன்று திரட்டி தேவையானதை மட்டும், சுவாரஸ்யமாக தருவதே நல்ல ஆசிரியரின் திறமை. அந்த வகையில் பாரா ஒரு நல்ல ஆசிரியர். ஆனால் அனைத்து புத்தகங்களும் ஒரு தலை பட்சமாகவே இருக்கும் . நமது புராண மரபையொட்டி பாட்டுடை தலைவனை விதந்தோதும் மரபை அவர் உடைப்பதில்லை. அல்கொய்தா பற்றி எழுதினாலும் சரி, மாவோயிஸ்ட் பற்றி எழுதினாலும் சரி.

மாவோயிஸ்ட் என்பது இடதுசாரி தீவிரவாத கள் இருக்கும் மொந்தையின் தற்போதைய பெயர். 

நக்ஸலைட் வரலாற்றை சுருக்கமாக சொல்லும் ஒரு புத்தகம். அதே சமயம் வாசக சுவாரஸ்ய புல்லறிப்பு சொறிதலுக்கென்று ஏகப்பட்ட சாகசங்களையும் கலந்து எழுதப்பட்ட ஒரு வீர(!!) வரலாறு. சீனப்புரட்சியை கண்டு நாக்கில் நீர் ஊற இங்கும் அதே புரட்சியை நடத்த கிளம்பியவர்களின் நோக்கம், மக்கள் விடுதலை. சில சமயம் அந்த விடுதலையை அவர்களை கொல்வதன் மூலமும் தரலாம் என்ற நிலைக்கு இன்றுறு வந்து நிற்பதன் காரணம், அதிகாரப்பசி. அதை பற்றி பேசாமல் புத்தகம் முழுவதும் அவர்களை ஒரு விடுதலை வீரர்களாக, ஒரு கதாநாயக பிம்பத்தை காட்டி செல்கின்றது. 

சாரு மஜூம்தாரின் இயக்கம், மக்கள் யுந்தக்குழு போன்றவற்றின் தோற்றத்தின் காரணம் சரிதான். அடக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழும் கதாநாயகர்கள். ஆனால் கண்ணிவெடி வைப்பது, சிறைக்கைதிகளை விடுவிப்பது போன்றவை தீவிரவாதம் என்ற பெயரில்தான் அழைக்கப்படவேண்டும்.  ஆனால் புத்தகம் முழுவதும் அவர்கள் செய்வது அனைத்தும் ஒரு சாகச செயல் போல காட்டியிருப்பது எரிச்சலாக வருகின்றது. காவல்துறையினரின் அத்துமீறல் போன்றவற்றை அப்படியே நேரில் கண்டது போல எழுதும்போது, தீவிரவாகள் மக்களை மிரட்டி ஆள்வதை மட்டும் யாரோ எவரோ தூத்துக்குடி பக்கம் சொன்னாங்க என்பது போன்று எழுதுவதை ஏற்க முடியவில்லை. 

ஆசிரியர் "அவர்களின் நியாத்தையும் கூறவேண்டும் " என்பதாக தீவிரவாதிகளைப் பற்றி எங்கோ எழுதியிருந்ததை படித்தேன். மிகச்சரி. அவர்களின் நியாயம் என்பது அவர்ள் ஆயுதம் ஏந்துவதற்கான காரணம் மட்டுமே. ஆயுதத்தை ஏந்திய பின் அவர்கள் செய்யும் தவறுகளை எல்லாம், அரசின் செயல்களுக்கு எதிர்வினை என்று புரிந்து கொள்வது அல்லது விளக்குவது சரியாகாது. அவர்கள் தொடுப்பது இந்திய அரசின் மீதான யுத்தம் என்றால் அவர்களை அழிப்பதற்கு இந்திய அரசு செய்வது எதையும் தவறு என்று கூறமுடியாத நிலைக்கு அவர்கள்தான் காரணம் என்பதையும் சொல்ல வேண்டும். பல கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாததன் காரணமே அவர்களை ஆயுதம் ஏந்த வைக்கின்றது என்ற உண்மையை சொல்லும் போது, அதே அரசு அமைதிக்காக அங்கு செய்ய முற்படும் வளர்ச்சிப் பணிகளை தடை செய்வதும் அவர்களே என்பதையும் ஒத்துக்கொள்ள வேண்டும். இப்போது அரசு அவர்கள் பகுதிகளில் செய்யும் அனைத்தையும் தடுப்பது அவர்கள்தான். வெளிநாட்டிலிருந்து உதவிகள் இல்லை என்று புத்தகம் கூறுகின்றது. மாவோயிஸ்ட்டுகளை வளர்ப்பதே சீனாதான் என்று அரசு சொல்வதையும் காற்றில் விட முடியாது. 

அடக்குமுறைக்கு எதிராக எழுந்ததுடன் புரட்சி வேகம் எல்லாம் முடிந்துவிடுகின்றது. அதன் பின்னால் இருப்பது வெறும் வன்மம். அறத்தை விட்டுவிட்ட புரட்சி வெறும் தீவிரவாதம். அதை புரட்சி என்று  விதந்தோதுவது மக்களுக்குத்தான் ஆபத்து. 

24 மார்ச் 2017

அசோகமித்திரன்

பெரும்பாலான ஆத்மாக்களை போல, சிறுவர்மலரில் ஆரம்பித்து ராஜேஷ்குமார் வழியாக கல்கி சுஜாதா என்று படித்துக் கொண்டிருக்கும் போது, திஜாவின் எழுத்து ஒரு தட்டி தட்டி தூக்கிப் போட்டது. என்ன ஒரு எழுத்து என்று வியந்த பொழுது, ஆர்வியின் தளத்தில் ஒற்றன் பற்றி படித்தேன். யார்ரா இந்த அசோகமித்திரன் திஜாவை விட பெரிய ஆளா என்றுதான் படித்தேன். சே, இந்தாளை இவ்வளவு நாள் படிக்காமல் விட்டுவிட்டோமே என்று வெட்கப்படவைத்தது. பெரிய பெரிய வாக்கியங்கள் கிடையாது, அலங்கார வர்ணனைகள் கிடையாது ஆனாலும் மிகப்பெரிய தாக்கத்தை தந்துவிட்டு போய்விட்டார். பின்னர் தேடி தேடி படித்தேன். கரைந்த நிழல்கள், மானசரோவர், தண்ணீர், ஆகாயத்தாமரை, விழாமாலைப்பொழுதில், யுந்தக்களுக்கிடையில் என்று ஓவ்வொன்றும் எனக்கு மிகப்பிடித்தமானதாகிவிட்டது. பதினெட்டாம் அட்சக்கோடு மேலும் அவரை எனக்கு மிகவும் நெருக்கமானவராக்கியது. அவரது பழைய புகைப்படங்கள் கண்ணில் பட்டது, அவரின் தோற்றம் எனது மாமாவை நினைவு படுத்தியது. எனக்கு புத்தகங்களை அறிமுகம் செய்தவரும், பல புத்தகங்களை வாங்கி தந்தவரும், வீட்டிற்கு தெரியாமல் சேர்த்து வைத்த காசில் சிவகாமியின் சபதம் வாங்க ரகசியமாக உதவியவரும் அவர்தான். அவரைப் போலவே இருந்த அவரது தோற்றமும், அவரை ஏதோ எனக்கு மிகத்தெரிந்த ஒரு சொந்தக்காரர் போல நினைக்கவைத்தது. நேற்று அவர் இறந்ததும் ஏதோ நெருங்கிய சொந்தம் ஒன்றை இழந்தது போலத்தான் இருந்தது. அவரது பேட்டிகள் எல்லாம் கூட பலவற்றை கற்று தந்தன. வாழ்க்கை தரும் எந்த கசப்பையும் மனதில் ஏற்றி வைத்துக் கொள்ளாத அந்த மனம். அதுதான் பலருக்கு தேவை.

இவரின் சில சிறுகதைகள் பிடிபடவில்லை என்றாலும், பெரும்பாலனவை மனதிற்கு நெருக்கமானவை. பிராயணம், ரிஷ்கா, புலிக்கலைஞன், ஐநூறு கோப்பை தட்டுகள்,அம்மாவுக்காக ஒரு நாள், என்று ஒரு லிஸ்ட் இருக்கின்றது. அவரை படிக்கும் பலருக்கு அவர் இணையம் மூலமே அறிமுகமாகியிருக்க கூடும் என்னைப் போல. ஜாதி காரணமாக ஆட்சியாளர்களின் பார்வை அவர் மீது பட்டதில்லை.  அவர்களுக்கு ஆனாவுக்கு ஆனா, கானவுக்கு கானா போட்டு எழுதும் எழுத்துக்களே போதும். உண்மையான எழுத்து எப்படியும் அதற்கான பெருமையை அடையும்.

அஞ்சலிகள். 

மனிதனும் மர்மங்களும் - மதன்

ஏதோ  ஒரு பத்திரிக்கையில் தொடராக வந்திருக்கும் போல. மதன் ஒரு நல்ல கார்ட்டூனிஸ்ட், எழுத்தாளர். சுவாரஸ்யமான எழுத்தாளர். ஆனால் எதைப்பற்றி அவர் எழுதுகின்றார் என்பதை பொறுத்தே அதை படிக்கலாமா வேண்டாமா என்று நாம் முடிவு செய்ய வேண்டும். இது அவர் படித்த பல புத்தகங்களில் எக்ஸ்ட்ராக்ட். சாறு.

இன்றும் சுவாரஸ்யமான ஒரு விஷயம் பேய்கள். அந்த பேய்களை பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள். வழக்கம்போல அனைத்தும் வெளிநாட்டு பேய்கள். விதவிதமான பேய் அனுபவங்கள். பல வித சக்தி கொண்ட மனிதர்களை பற்றிய தகவல்கள். மீன் மழை, தவளை மழை, பெரிய ஐஸ் கட்டி மழை. ஏலியன்கள் பற்றிய கட்டுரைகள்.

அனைத்து கட்டுரைகளும் சுவாரஸ்யமான நடையில் எழுதியிருக்கின்றர். ஜாலியாக பக்கத்தில் அமர்ந்து கொண்டு பேசும் எழுத்து நடை. அப்புறம் அந்த பேய் வந்து ஒரே அடி, சே என்ற மாதிரி எழுதிக் கொண்டு போகும் போது படிக்க நன்றாகத்தான் இருக்கின்றது. இந்தியப்பேய்களை பற்றி ஒன்றுமே காணோம். ஒரு வேளை எழுத ஆரம்பித்தால் பக்கம் பத்தாது என்று விட்டு விட்டு போய்விட்டார் போல.

சுவாரஸ்யமான புத்தகம்.

23 மார்ச் 2017

கிமு கிபி - மதன்

மதனின் பிரச்சினை அவர் படிக்கும் வரலாறு அனைத்து பாரதக்கண்டத்திற்கு வெளியேதான் இருக்கும். கில்காமேஷ் வரலாறு, ராமாயணம் புராணம் என்ற வகையில் தான் அவர் பார்வை போகின்றது. இந்தியப்புராணங்கள் பற்றி அவர் எங்கும் எதுவும் பேசுவதில்லை. அதை வெறும் கதை என்று மட்டும் ஒதுக்க முடியுமா என்ன? ஒரு முறை விகடனில் ஹாய் மதனில், பூமாதேவிக்கும் இரண்யகசிபுவிற்கும் பிறந்தவன் நரகாசுரன் என்று எழுதியிருந்தார். இன்னும் சில பல தவறுகளும் தொடர்ந்து வெளியாகி கொண்டிருந்த நினைவு. 

கிமு கிபி என்ற பெயரில் மனித குல வரலாற்றை சொல்லும் புத்தகம் என்றே முன்னுரை சொல்கின்றது. மனிதன் எவ்வாறு தோன்றினான், நாகரீகம் எப்படி வளர்ந்தது என்பதை பற்றியெல்லாம் வெகுவிரிவாக பேசுவதாக் குறிப்பு சொல்கின்றது. நாகரீகம் போன்றவை என்றாலே அவை இந்தியாவிற்கு வெளியில்தானே இருக்க வேண்டும். பாபிலோன், கில்காமேஷ் என்று மந்திய ஆசிய புராண வரலாறுகளை பற்றி விரிவாக பேசுகின்றது. கிமுவிற்கு முற்பட்ட காலத்தில் பாபிலோனில் நாகரீகம் செழித்து வளர்ந்த காலத்தில், இந்தியாவில் ஒன்றுமே கிடையாது. சிறு சிறு கூட்டங்கள் மட்டுமே இருந்தன என்று கூறப்பட்ட பகுதிகள் வந்தவுடன் படித்து கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு அடுத்த வேலையை பார்க்க சென்றுவிட்டேன். மேற்கொண்டு புத்தகம் எப்படி இருக்கும் என்பது தெரிந்துவிட்டது. 

மேற்கொண்டு ஏதும் சொல்வதற்கில்லை.

யாராவது படித்தவர்கள் உருப்படியாக ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் கேட்டுக் கொள்கின்றேன்

16 மார்ச் 2017

டாலர் தேசம் - பா ராகவன்

குமுதம் ரிப்போர்ட்டரில் சுமார் இரண்டு  வருடங்களாக வெளிவந்த தொடர். அமெரிக்காவின் வரலாறு. 

அமெரிக்காவை கண்டுபிடித்தவர் கொலம்பஸ் என்று பாடப்புத்தகத்தில் படித்த வரலாறு அதோடு நின்று போகின்றது. மார்ட்டின் லூதர் கிங், கருப்பர்களுக்காக போராடினார் என்று படித்திருப்போம். "தாடி வைத்திருப்பது என்பது முகத்திற்கு நாம் செய்யும் மரியாதை" என்று ஆபிரகாம் லிங்கன் சொன்னார் என்று யாராவது ஃபேஸ்புக்கில் பரப்பியதை படித்திருப்போம். அனைத்து துண்டு துண்டாக வேறு வேறு காண்டெக்ஸ்டுகளில். அமெரிக்காவின் முழு சரித்திரமும் தெரிந்திருக்குமா என்றால் தெரியாது. அதை தெரிந்து கொள்ள இதைப் படிக்கலாம்.

அமெரிக்கா என்பது இன்று பக்கத்து ஊர் மாதிரி ஆகிவிட்டது. அமெரிக்காவின் பெப்ஸியை எதிர்ப்போம் என்று ஐபோனில் ஸ்டேட்டஸ் போட்டு கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் பொருட்கள் எங்கும் நிறைந்திருக்கின்றது. எப்படி இந்த வளர்ச்சி சாத்தியமானது? உலகில் எது நடந்தாலும் அமெரிக்க சதி, அமெரிக்க ஆக்கிரமிப்பு என்று ஆரம்பிக்கின்றார்கள். கூடங்குளத்திலிருந்து, நெடுவாசல், தேவாரம் நியூட்ரினோ வரை அமெரிக்கா வசை பாடப்படுகின்றது. அதே சமயம் அவர்களின் பணமும், தொழில் நுட்பமும் தேவையாக இருக்கின்றது. இதற்கு காரணம் என்ன? உலகத்தின் எந்த மூலையிலிருக்கும் இஸ்லாமியர்களில் கொஞ்ச பேரையாவது அமெரிக்க எதிர்ப்பாளர்களாக எளிதில் மாற்ற முடிவதன் காரணம் என்ன? எங்கிருந்து அமெரிக்கர்களுக்கும் பணம் கொட்டுகின்றது? என பல கேள்விகளுக்கு பதிலளிக்கின்றது.

அமெரிக்காவின் காலனி குடியேற்றங்களில் தொடங்கி, அவர்களின் விடுதலைப் போர்கள் வழியாக அனைத்து அதிபர்களை பற்றியும் அறிந்து கொள்ளலாம். பெரும்பாலும் போர்களை பற்றியே பேசுகின்றது. வியட்னாம், க்யூபா (கூபா என்றுதான் சொல்ல வேண்டுமாம்), ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான் என்று அவர்கள் நடத்திய யுத்தங்கள் பற்றிதான் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. பல விஷயங்கள் ஏற்கனவெ இதே ஆசிரியரின் "நிலமெல்லாம் ரத்தம்", "மாயவலை", சதாம் உசேன், ஹிட்லர் புத்தகங்களில் வந்த அதே தகவலகள்.. சில இடங்களில் வார்த்தை அமைப்பு கூட மாறவில்லை. 

அமெரிக்காவை பற்றி மறுபடியும் ஒற்றைப்படையான பார்வையையே தருவதாக தெரிகின்றது. வெளிநாட்டில் அமெரிக்கா ரெளடிதான். உள்ளூரில் எப்படி அந்த வளர்ச்சி சாத்தியமானது. இன்றைய தகவல் தொழில் நுட்ப புரட்சியில் அமெரிக்காவின் முக்கிய பங்கு, அவர்களின் கல்வித்தரம், அவர்களின் இப்போதிருக்கும் வாழ்க்கைமுறை, குடும்ப அமைப்புகளின் சிதைவு, ஆன்மீக ஏரியா, போதை கலாச்சாரம், ஹிப்பிகள் போன்ற பல ஏரியாக்கள் தொடப்படவில்லை அல்லது சும்மா கொஞ்சம் எட்டி பார்த்துவிட்டு போயிருக்கின்றார். 

அமெரிக்காவை பற்றி ஒன்றும் தெரியாததற்கு இது எவ்வளவோ பரவாயில்லை

10 மார்ச் 2017

போக புத்தகம் - போகன் சங்கர்

போகன் சங்கர் என்ற பெயர் ஃபேஸ்புக்கில்தான் பரிச்சியம். அவ்வப்போது அவர் எழுதும் மூன்று நான்கு வரி கட்டுரைகள் கண்ணில் படும். சான்றோர்கள் கவிதை என்றார்கள். அவ்வப்போது சின்ன சின்ன சம்பவங்கள், கட்டுரைகளையும் எழுதுவார். சின்னஞ்சிறு கதைகள் எனலாம். அவற்றை தொகுத்து போக புத்தகம் என்ற பெயரில் தொகுத்திருக்கின்றார்கள். பெயரை மட்டும் கேட்டால் கொஞ்சம் தயக்கம் இருக்கும். வீட்டம்மா என்ன நினப்பார்களோ, வீட்டிற்கு வருபவர்கள் கண்ணில் பட்டால் என்ன நினைப்பார்களோ என்றெல்லாம் தோன்றும். ஆனால் நல்ல புத்தகம். 

அட்டை எப்படி இருக்கின்றது என்று சரியாக தெரியவில்லை. ப்ளாஸ்டிக்காக இருக்காது என்று நம்புவோமாக.

நாவலை விட சிறு கதை மிகவும் கடினமானது. இரண்டு மூன்று பக்கங்களில் சில திறப்புகளை உண்டாக்குவது மிகக்கடினம். வடிவம் குறைய குறைய அது கடினமாகிக் கொண்டே செல்லும். ஆனால் அது முழுக்க முழுக்க கற்பனை செய்து எழுதும் போதுதான். நிஜவாழ்விலிருந்து நாம் பெறும் அனுபவங்களை எழுதும் போது, அதை பெரிய சிறு கதையாக மாற்றுவதுதான் கடினம். உதாரணம் அசோகமித்திரனின் ரிஷ்கா. அதைப் படிப்பவர்கள், அது போன்ற அனுபவத்தை வாழ்வில் ஒருமுறையாவது அடைந்திருப்பார்கள். அது போன்ற சில தருணங்களை, பட்டென்று ஒரு புகைப்படம் போல ஓவியம் போல காட்சிப்படுத்தி மனதில் வைத்துக் கொள்ள பயன்படுவது இந்த குட்டி வடிவம். அதை வளர்த்தி எழுதினால் வளவளவென்றுதான் போகும்.

07 மார்ச் 2017

மாயவலை - பா ராகவன்

நிலமெல்லாம் ரத்ததிற்கு பின் அதன் பின்னால் இருக்கும் மாயவலை பற்றிய புத்தகம். உலகளவில் அழிச்சாட்டியம் செய்து கொண்டிருக்கும் சில ரெளடி இயக்கங்கள் பற்றிய நூல். தீவிரவாதத்தால் வெகுவாக பாதிக்கப்பட்ட நாடுகளில் நாமும் ஒன்று. ஆனால் நமக்கு அண்ணன்கள் எல்லாம் இருக்கின்றார்கள். தினமும் அடிவாங்கிக் கொண்டு பதிலுக்கு அடித்து, அழுது என்று. அந்தளவிற்கு அனைவரையும் இம்சை படுத்தும் தீவிரவாத இயக்கங்களை பற்றி விரிவாக எழுதப்பட்ட ஒரு தொகுப்பு. ஹிஸ்புல்லா, ஹமாஸ், ஜமா இஸ்லாமியா, அல் கொய்தா, லஷ்கர் ஈ தொய்பா என்று ஒரேடியாக் இஸ்லாமிய இயக்கங்களை பற்றி மட்டும் எழுதினால் மதச்சார்பு தீட்டு வந்துவிடும் என்று ஒரு ஜப்பானிய இயக்கம், ஓம் என்று ஆரம்பிக்கும் அந்த இயக்கத்தின் பெயரே வாயில் நுழையவில்லை, ஈடிஏ என்னும் இடதுசாரி இயக்கம் பற்றியும் எழுதப்பட்டுள்ளது.

அனைத்து இஸ்லாமிய இயக்கங்களுக்கும் பொதுவான எதிரி அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா. இதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. இஸ்ரேல், இந்தியாவும் அவர்களின் மதத்திற்காகவே எதிர்க்கப்படுகின்றது. அகண்ட இஸ்லமிய தேசத்க்கனவிற்கு பாதகமாக இருப்பது இவையே என்ற எண்ணம் அவர்களிடையே வலுவாக இருக்கின்றது. ஆனால் அவர்களின் சரித்திரத்தை பார்த்தால், அவர்களுக்கான விரோதிகள் வெளியில் எல்லாம் கிடையாது. அவர்கள்தான். 

கிறிஸ்துவத்தில் ஜாதிகள் உண்டு, அங்கும் பிரச்சினைகள் உண்டு. எங்களூரில் கிறிஸ்துவ நாடார் உறவின்முறை என்ற பதத்தை கேட்டு குழம்பியிருக்கின்றேன். என்னாங்கடா, ஜாதியில்லைன்னுதானடா அங்க போனீங்க, அங்கயும் போயுமா? பின்னர் தலித் கிறிஸ்துவத்தில் ஆரம்பித்து கிறிஸ்துவ பிராம்மணர்கள் வரை வந்தாகிவிட்டது. இஸ்லாமில் ஏற்றத்தாழ்வு கிடையாது, அனைவரும் ஒன்று, கடவுளின் முன் அனைவரும் சமம் என்பதே பொதுவான சித்திரம். அதுவும் தவறு தம்பி என்கிறது இப்புத்தகம். இனக்குழுக்களின் சண்டை என்பது ஜாதிச்சண்டையை விட மோசமானது. ஷியா - சுன்னி பிரிவு சண்டை, இன்னும் பல உயிர்களை குடித்து வருகின்றது. பிறகு என்ன சமத்துவ பொங்கல் வேண்டியிருக்கின்றது.

உலகளாவிய தீவிரவாதிகளின் வலைப்பின்னல், அவர்களின் இயக்கங்களின் நிர்வாக அடுக்குகள், வருமானம், போன்ற நிழலுகத்தை காட்டுகின்றது. சிங்கம் புலிகளைகூட வேட்டையாடிவிடலாம். எலிகளையும், கரப்பான் பூச்சிகளையும் கொல்வதுதான் கடினம் இவர்கள் அந்த வகைதான். வளைகளுக்குள் ஒளிந்து கொண்டும் தாக்கும் இவர்களை போராளிகள் என்று அந்த பகுதி மக்கள் வேண்டுமென்றால் கூறிக் கொள்ளலாம். 

இந்த சரித்திரங்களை எல்லாம் படிக்கும் போது இஸ்லாமியர்கள் வேறு எந்த நாட்டைவிடவும் இந்தியாவில்தான் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் இருக்கின்றார்கள் என்று கூற முடியும். மேடை போட்டு பெரும்பான்மை மதத்தை திட்டும் வாய்ப்பு எங்கு கிடைக்கும். மற்ற நாடுகளில் செய்தால் ஒட்ட நறுக்கிவிடுவார்கள்.

புத்தகத்தில் எரிச்சலூட்டும் விஷயங்களும் இருக்கின்றன. முதலில் தீவிரவாதிகளுக்கு கொஞ்சம் கதாநாயக அந்தஸ்து தருவது. இரண்டாவது, ஜனரஞ்சகமாக எழுதுவது என்ற பெயரில், ஒட்டத நடைக்கு பாய்வது. ஐயன்மீர் என்று ஆரம்பித்து ஆசிரியர் குறுக்கே புகுவது, எங்கோ அரபு நாட்டில் நடக்கும் விஷயங்களை நம்மூர் ஸ்டைலில் தரும் போது பீட்சாவில் பெங்களூரு சாம்பாரை ஊற்றி தின்பதை போல இருக்கின்றது. 

சினிமாவில் மொக்கை பாட்டு வரும் போது போய் ஒரு காபி குடித்துவிட்டு வருவது போல, மொக்கை பகுதிகளை தாண்டி போனால் ஒரு சுவாரஸ்யமான புத்தகம்

06 மார்ச் 2017

ஆர் எஸ் எஸ் - மதம் மதம் மதம் - பா ராகவன்

ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் என்ற பெயரில் ஹெட்கேவரால் ஆரம்பிக்கப்பட்டு, குருஜி என்றழைக்கப்படும் கோல்வாக்கரால் வளர்க்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பற்றி பா ராகவன் எழுதியுள்ள வரலாற்று புத்தகம். 

ஆர்.எஸ்.எஸ்ஸை பற்றி புத்தகம் என்றவுடன், அதனை பற்றி முழுமையாக எழுதப்பட்ட புத்தகம் என்று நினைத்தது என் தவறுதான். ஆர்.எஸ்.எஸ் பற்றி தமிழக மக்களுக்கு அந்தளவிற்கு பரிச்சியம் கிடையாது. ஏதோ ஒரு ஹிந்திக்கழகம் என்று பலர் நினைத்து கொண்டிருக்கலாம். அதைப் பற்றி எழுதப்பட்ட புத்தகம் என்பது நமக்கு ஆர்.எஸ்.எஸ் பற்றி முழுமையான் சித்திரத்தை தருகின்றது என்றால் இல்லை. இல்லவே இல்லை. விமர்சனம் என்பது தேவைதான்.ஆர்.எஸ்.எஸ் ஒன்றும் தவறே செய்யாத இயக்கமல்ல, ஆனால் மதத்தின் பெயரால் தவறை மட்டுமே செய்கின்ற இயக்கம் என்னும் சித்திரத்தை இந்நூல் தருகின்றது.

காந்தி படுகொலையில் ஆரம்பித்து குஜராத் கலவரம் வரை பல விஷயங்களில் ஆர்.எஸ்.எஸ் பெயர் அடிபட்டு எதையும் நிரூபணம் செய்ய முடியாமல் போனது. அதே வேலைதான் இப்புத்தகமும் செய்கின்றது. ஆர்.எஸ்.எஸ் மதத்தை மட்டும் கட்டிக் கொண்டிருக்கும் இயக்கம் என்று பேசும் ஆசிரியர், ஆர்.எஸ்.எஸ் செய்யும் பல நல்ல விஷயங்களை பற்றி எவ்வித அறிமுகமும் செய்யவில்லை. முழுக்க முழுக்க மக்கள் அமைதியை கெடுக்கும் ஒரு இயக்கம் என்ற தோற்றத்தையே தர முயற்சி செய்கின்றார். அவர்களின் சேவையை குறிப்பிடும் சில இடங்களில் கூட அதற்கு ஒரு உள்நோக்கம் உள்ளது போன்றே குறிப்பிடுகின்றார்.

ஆர்.எஸ்.எஸ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவர்கள் தவிர்க்க வேண்டிய முக்கிய புத்தகம். காரணம் விமர்சனமல்ல, விமர்சனம் செய்யக்கூடாத இயக்கம் என்று ஒன்றுமில்லை. ஹிஸ்புல்லா, ஹமாஸ் போன்ற இயக்கங்களையே போராளிகள், மக்கள் ஆதரவு பெற்றவர்கள் பாலஸ்தீனத்தில் பல நல்லது செய்பவர்கள் என்றெல்லாம் எழுதும் அதே ஆசிரியர், ஆர்.எஸ்.எஸ்ஸின் சேவைகளில் ஒன்றை கூட பாராட்டி எழுத மாட்டேன் என்பது அவர் உரிமை. அப்புத்தகத்தை தவிர்ப்பதும் நம் உரிமை. 

03 மார்ச் 2017

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன்

கிண்டில் கையில் கிடைத்ததும் பல புத்தகங்களை படிக்க வாய்ப்பு கிடைக்கின்றது. பல புத்தகங்களை படிக்க ஆர்வமிருந்தும் விலை காரணமாக வாங்காமல் விட்டிருந்தேன். கிண்டில் அன்லிமிட்டடில் இலவசமாக படிக்க முடிகின்றது. நன்றாக இருந்தால் வாங்கிக்கொள்ளலாம். நல்ல டீல்.

இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினையின் வயது நமது சுதந்திர இந்தியாவின் வயதைவிட மிக அதிகம். அடிக்கடி பேப்பரில் வரும் குண்டுவெடிப்புகள், பதில் தாக்குதல்கள் என்ற அளவில் மட்டுமே பரிச்சியம். அந்த பிரச்சினையில் அடி வேரில் ஆரம்பித்து அலசும் ஒரு புத்தகம் இது. குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக ஒரு வருடம் வந்திருக்கின்றது. பா. ராகவனின் எழுதியிருக்கின்றார்.

இஸ்ரேல் - பால்ஸ்தீன பிரச்சினை இரண்டு நாட்டிற்கான பிரச்சினை என்பதை விட இரண்டு இனங்களுக்கிடையிலான பிரச்சினை என்பதுதான் சரி. சிங்கள - தமிழர் பிரச்சினை போல. யூத - அரேபிய இனத்தவர்களுக்கிடையிலான மோதல் இன்று யூத - இஸ்லாமிய மோதலாக பரிணமித்துள்ளது.  எழுதியிருப்பவர் இரண்டு மதத்தை சாராதவர், அதனால் நடுநிலையாக எழுதியிருப்பார் என்று நம்பியிருந்தால் மன்னிக்கவும். இல்லை.  வெகு திறமையாக எழுதப்பட்டு,  ஒரு வேளை நடுநிலையாக, பக்கச்சார்பில்லாமல் தான் எழுதப் பட்டிருக்கின்றதோ என்ற தவறான தோற்றத்தை தரும் புத்தகம்.

01 மார்ச் 2017

ஒரு கூர்வாளின் நிழலில் - தமிழினி


ஒரு இனம் இன்னொரு இனத்தை எதிர்த்து போரிடுவது என்பது உலகில் தொடர்ந்து நடைபெறும் நிகழ்வு. பல சமயம் இந்த இன வேற்றுமையை செய்வது மூன்றாவது இனமாக இருக்கும், அவர்கள் குளிர் காய ஒரு வாய்ப்பு.
இலங்கையில் நடந்த பிரச்சினைகளுக்கு மூல காரணத்தை தேடும் போது அது ஆங்கிலேயர்களிடமே போய் நிற்கின்றது. மெதுவாக ஆரம்பித்த இன வேற்றுமை உச்சகட்டமாக தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்த, பிரச்சினை வெடித்தது. பல போராட்ட குழுக்கள் தோன்றினாலும், புலிகளுக்கு இந்திய ஆதரவு பலமாக இருந்தது. இந்திராகாந்தி மற்றும் எம்.ஜி.ஆரின் வலுவான ஆதரவு அவர்களை பலமாக்கியது. ஆனால் கடைசியில் அவர்களுக்கு கிடைத்தது தோல்வி. அதற்கு அவர்கள் தந்த விலை மிக அதிகம். இந்தியாவும் அவர்களால் ஒரு தலைவரை இழந்தது. 

சிறிய ஆயுத குழுவாக  இருந்த இயக்கம் வளர்ந்து முப்படையும் வைத்திருக்க முடிந்தது. கடல், வான், தரை என்று மூன்று வழிகளிலும் தாக்குதல் நடத்த முடிந்த இயக்கம் அடைந்த தோல்வியை ஆராய்கின்றது இந்த புத்தகம். தமிழினி புலிகளின் அரசியல் பிரிவில் பணியாற்றியவர். இறுதிப்போரில் சரண்டைந்து, பின்னர் புற்றுநோய் தாக்குதலில் காலமானார். அவர் நோயுடன் போராடிக் கொண்டே எழுதிய புத்தகம். ஒரு வகையில் மரண வாக்குமூலம் என்றே கொள்ளலாம்.

புலிகள் நடத்தியது ஒரு தனி அரசாங்கம், பல பிரிவுகளை கொண்ட மிகப்பெரிய அமைப்பு. இளவயதில் இயக்கத்தில் சேர்ந்த தமிழினி, அரசியல் பிரிவில் பணியாற்றியிருக்கின்றார். இரண்டு மூன்று போர்களிலும் பங்கு பெற்றிருக்கின்றார். ஆனால் இப்புத்தகம் முக்கியத்துவம் பெற முக்கியகாரணம், அவர் பணியாற்றிய பிரிவு. மக்களையும் இயக்கத்தின் தலைவர்களையும் இணைக்கும் கண்ணியாக இருந்திருக்கின்றார். 

24 பிப்ரவரி 2017

உடையும் இந்தியா? - ராஜீவ் மல்ஹோத்ரா, அரவிந்தன் நீலகண்டன்

எச்சரிக்கை - 1
பெரிய பதிவு. கொஞ்சம் சுய புராணமும், அந்நிய மதவிமர்சனமும் கலந்திருக்கின்றது. 
எச்சரிக்கை - 2
இது புத்தகத்தைப் பற்றிய முதல் பதிவு, இரண்டாம் பாகம் விரைவில்.

ஆங்கிலத்தில் Breaking India என்ற பெயரில் வெளிவந்த நூல், மூல நூலின் ஆசிரியர்களில் ஒருவரான அரவிந்தன் நீலகண்டனால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. வெளிவந்த போதே வாங்க நினைத்த புத்தகம், எப்படியோ தவறிவிட்டது. கிண்டல் அன்லிமிட்டடில் கிடைக்கின்றது.

நம்மில் பெரும்பாலனவர்கள் தினசரி செய்திகளில் பார்க்கும் பல நிகழ்வுகளை போகின்ற போக்கில் படித்துவிட்டு போய்விடுவோம். நம் வாழ்க்கையில் அது என்ன பெரிய தாக்கத்தை உண்டாக்கி விடப் போகின்றது என்பதே நம் எண்ணமாக இருக்கும். ஆனால் பல சமயம், அதன் பின்னால் மிகப் பெரிய சர்வ தேச சதி இருந்தால் கூட ஆச்சர்யப்பட முடியாது. ஜல்லிக்கட்டிற்கு தடை என்பது நம் தினசரி வாழ்வில் எந்த தாக்கத்தை உண்டாக்க போகின்றது. ஒன்றுமில்லை. ஆனால் அதன் பின்னால் இருக்கும் வலை மிகப்பெரியது என்பதை இன்று பலர் அறிந்திருக்கின்றார்கள். அதுவும் அதன் ஒரு பகுதியைத்தான். நாட்டு மாட்டை ஒழிக்க முயற்சி என்பதாகத்தான் அதைப் பார்க்கின்றார்கள், ஆனால் அதனோடு இந்து மதம் சார்ந்த , நமது மண்ணின் பாரம்பர்ய, நிகழ்வை அழிக்க செய்யும் முயற்சி என்பது மறைக்கப்படுகின்றது. ஒருவேளை அதை மறைக்கவே நாட்டுமாட்டினம் என்பதை கூட பெரிதாக்கியிருக்கலாம். ஃபேஸ்புக்கில் ஒருவர் ஒரு செய்தியை பகிர்ந்திருந்தார் "இன்று ஜல்லிக்கட்டு கொண்டாடக்கூடாது என்று சொல்பவர்கள் நாளை பொங்கல் வைக்கக் கூடாது என்பார்கள்" என்று, மிகத்தாமதம். அது ஏற்கனவே நடந்துவிட்டது. நமது பாரம்பர்யமுறைப்படி வீட்டு வாசலில் பொங்கல் வைப்பதை பிற மதத்தவர்கள் எதிர்க்கின்றார்கள் என்ற காரணத்திற்காக தடை செய்ய காவல்துறையே வந்தது. ஆனால் இது எல்லாம் நமக்கு தெரிவதில்லை. 

07 பிப்ரவரி 2017

உன்னைப் போல் ஒருவன் - ஜெயகாந்தன்

ஜெயகாந்தனின் குறுநாவல், விகடனில் வந்து பின்னால் அவரால் திரைப்படமாகவும் எடுக்கப்பட்ட நாவல்.  

பெரும்பாலும் முன்னுரைகள் என்பவை அப்புத்தகத்தை பற்றிய சிறு குறிப்பாக அமையும், ஆனால் ஜெயகாந்தனின் முன்னுரைகள் பெரும்பாலும் ஒரு கட்டுரை போலவே அமையும். நூலையொட்டிய அவரது பல கருத்துக்கள், நாவல் என்னும் சட்டகத்தில் அடைக்க முடியாத எண்ணங்களை அவர் முன்னுரையில் எழுதுகின்றாரோ என்றும் தோன்றும். சில சமயம் அது ஒரு விளக்கம் போலவும், நாவலை படிக்க ஒரு கோனார் நோட்ஸ் போலவும் இருக்கும். அந்த காரணத்திற்காகவே அவரது முன்னுரைகளை படிப்பதில்லை. நாவலை படித்து முடித்த பின் அதை படிப்பது வழக்கம். "வாழ்வின் இருண்ட பக்கங்களை மட்டுமே காட்டுபவன்" என்ற பெயர் தனக்கிருப்பதாக அவரே மற்றொரு புத்தகத்தின் முன்னுரையில் கூறுகின்றார். அதற்கான பதில் இப்புத்தகத்தின் முன்னுரையில் கிடைக்கின்றது. ஒளிமிகுந்த நகரத்தில்தான் இருளடைந்த குடிசைகளும் இருக்கின்றன. இரண்டும் சேர்ந்ததுதான் நம்முலகம். ஏதாவது ஒன்றை மட்டும் பற்றிக் கொண்டு கூவுவது முட்டாள்த்தனம். அதைத்தான் முன்னுரையில் கொஞ்சம் பெரிய நடையில் விளக்குகின்றார்.

ஜெயகாந்தனை பற்றி பலர் கூறும் விமர்சனம், அவரது கதைகளின் இன்றைய தேவை. அக்னிபிரவேசம், சில நேரங்களில் சில மனிதர்கள், பாரீஸுக்கு போ போன்றவை இன்று கொஞ்சம் காலாவதியான விஷயம் போல இருக்கலாம். ஆனால் எங்கோ ஒரு மூலையில் அதற்கான தேவையிருக்கின்றது என்பது செய்திதாள்கள் காட்டும். இந்த நாவல், என்றைக்கும் தேவையிருக்கும் நாவல். நாவலில் பாத்திரங்கள் ஒரு சேரிப்பகுதி வாழ் மக்கள். ஆனால் நாவலில் வரும் அதே பிரச்சினை பங்களாவிலும் வரலாம்.

03 பிப்ரவரி 2017

வலவன் - சுதாகர் கஸ்தூரி

முதலில் வளவன் என்பதைத்தான் தவறாக வலவன் என்று படித்துவிட்டேனோ என்று நினைத்தேன். இல்லை, வலவன்தான். வலம் வருபவன் வலவன். அப்படித்தான் நினைத்து கொண்டிருந்தேன்.  வலம் வர உதவுபவன் வலவன். ஓட்டுனர். "வலவன் ஏந்தா வானூர்தி" என்று ஒரு சங்கப்பாடல் இருப்பதாகவும், அது ஓட்டுனர் இல்லாத வான ஊர்தி பற்றியது என்றும், தமிழர்கள் அக்காலத்திலேயே செவ்வாய் கிரகத்திற்கு சென்றார்கள், என்று "உண்மையான் தமிழனாக இருந்தால் 'சேர்' செய்" கோஷ்டிகளில் ஒன்று எழுதியிருந்தது. சங்ககால வலவன்களை பற்றி எழுத எங்கு போக, இந்தக்கால வலவன்களான கார் ஓட்டுனர்கள் பற்றிய கதைகள்.

நாம் சந்திக்கும் ஓவ்வொருவரிடமும் கதைகள் ஏராளமாக இருக்கும். கற்பனையாசிரியர்கள் கற்பனை செய்வதை விட நிஜத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். சிலருக்கு என்னை மாதிரி பல புதிய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பது அரிது. தினமும் அதே மனிதர்கள். ஆனால் பயணம் செய்பவர்களுக்கு, ஏகப்பட்ட மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். பயணத்தை தொழிலாக கொண்டவர்களுக்கு எழுதவும் தெரிந்தால், நமக்கும் அந்த மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆசிரியர் சுதாகர் கஸ்தூரி, தொழில் முறையில் அதிக பயணம் செய்பவர் என்று நினைக்கின்றேன். அந்த பயணங்களில் சந்தித்தவர்களை கதைகளாக்கியிருக்கலாம் என்பது அனுமானம். ஆனால் நம்மால் அவர் சந்தித்த மனிதர்களை, நம மனதிற்குள் சந்திக்க முடியவில்லை.

02 பிப்ரவரி 2017

டர்மரின் - 384

சுதாகர் கஸ்தூரியின் புதிய நாவல். இதற்கு முன் இரண்டு நாவல்கள் எழுதியிருக்கின்றார். படித்ததில்லை. இதுதான் முதல். விஞ்ஞானத்தை பின்புலமாக வைத்து பலர் பல கதைகள் எழுதியிருக்கின்றார்கள். சுஜாதா, ஜெயமோகன், மாலன் என்று. அவை வேறு வகை. இக்கதைக்கும் விஞ்ஞானத்திற்கும் சம்பந்தம் கிடையாது.  இதை அந்த வகையில் சேர்க்கமுடியாது.  இது விஞ்ஞான ஏரியாவில் நடக்கும் குற்றங்களை பற்றிய கதை. இந்த வகையில் ராஜேஷ்குமார் ஏகப்பட்ட கதைகளை எழுதிதள்ளியிருக்கின்றார். 

இது உயிரியல் ஆராய்ச்சியின் பிண்ணனியில் எழுதப்பட்ட கதை. தாஸ் எண்ணும் விஞ்ஞானி, தன் ஆராய்ச்சி தகவல்களை அபிஜித் என்பவனிடம் தருகின்றார். தாஸ் காணாம்ல போகின்றார், தகவல் அடங்கிய 'எழுதுகோல் ஓட்டியும்' (பென்ட்ரைவ் :-) ) காணாமல் போகின்றது. போலிஸ் வேட்டையில் இதன் பின்னால் இருப்பது டர்மரின் என்னும் மூலக்கூறு அதனுடன் ஒரு எண் என்பது கண்டுபிடிக்கப்படுகின்றது. காப்புரிமை, அந்நிய நாட்டு சதி என்று கதை நடக்கின்றது

களம் பெரிய களம், நன்றாக அடித்து ஆடியிருக்க வேண்டும். சறுக்கி விழுந்திருக்கின்றார் என்றுதான் சொல்ல வேண்டும். முதலில் ஒரு சிறிய பரபரப்புடன் ஆரம்பிக்கும் கதை பின்னால் டொய்ங்ங் என்று போகின்றது. படிக்கும் வாசகனை கொஞ்சம் கூட உள்ளிழுக்காத நடை . உயிரியல் ஆராய்ச்சி என்பதை எளிதாக புரியவைக்க வேண்டும் என்று நினைப்பது சரிதான், ஆனால் அதை எளிமையாக சொல்லியிருக்க வேண்டும். சில தொழில்நுட்ப ரீதியான வார்த்தைகளை தமிழில் மொழிபெயர்க்கும் போது அது சுத்தமாக புரியாமல் போகத்தான் வாய்ப்பிருக்கின்றது. மின்கடத்தி, அயனி என்பதெல்லாம் தமிழ், சரிதான், ஆனால் அது முழுக்க அறிவியல் விஷயங்களை தமிழிலேயே படிக்கும் தலைமுறைக்குத்தான் சரியாகும். அனைவரும் +2விற்கு பிறகு அனைத்தையும் ஆங்கிலத்திலேயே படிக்கும் போது இவையெல்லாம் புரியாது. அதை அப்ஸ்ட்ராக்ட்டாக சொல்லியிருந்தால் கூட போதுமானது. கொஞ்சம் ஆழமாக விளக்க போகி அது விலக்கத்தைதான் தருகின்றது.

01 பிப்ரவரி 2017

எக்ஸைல், ராஸ்லீலா , தேகம் - சாருநிவேதிதா

சாருநிவேதிதா ஒரு சுவாரஸ்யமான பத்தி எழுத்தாளர். ஆனால் அவர்து நாவல்கள் எனக்கு அலர்ஜ்ஜியையே தருகின்றன. ஜீரோ டிகிரி வாங்கி படித்து, ஒரு எழவும் புரியாமல் கட்டி பரணில் வைத்துவிட்டேன். அடுத்ததாக பாதிவிலைக்கு கிடைக்கின்றதே என்ற அல்ப ஆசையில் எக்ஸைல் என்ற நாவலை வாங்கி, அதையும் ஜீரோ டிகிரியுடன் துணைக்கு வைத்துவிட்டேன். இந்தமுறை எந்த செலவுமில்லை, தைரியமாக கிண்டில் அன்லிமிட்டடில் இரண்டையும் இறக்கி படித்து பார்த்தேன். 

தேகம் புத்தக வெளியீட்டு விழாவில், இந்த புத்தகத்தை மிஷ்கின் சரோஜாதேவி புத்தகம் என்று கூறி வாங்கி கட்டிக்கொண்டார். அது எல்லாம் கொஞ்சம் ஓவர். அந்தளவிற்கு மோசமாக எல்லாம் இல்லை. ஆனால் படிக்கும் போதே ஒரு ஆயாசம் ஏற்படுகின்றது. அவரை தொடர்ச்சியாக படித்துவருபவர்களுக்கு மறுபடியும் அதே கதையா என்றுதான் தோன்றும். வாதையை பற்றிய கதை, வதையில் ஆரம்பித்து காமத்தின் வழி சென்று கடவுளை அடையும் கதை என்று ஒரு உபாசகர் இந்த நாவலை பற்றி எழுதியிருந்தார். உபாசகர்கள் அப்படி பாஷ்யம் எழுதாவிட்டால்தான் அதிசயம். ஒரு பக்தர், ஜீரோ டிகிரியை அடிக்கடி வாங்குவாராம். பாவம் ஏதாவது ஒரு பிரதியிலாவது அது புரிந்து விடாதா என்ற எண்ணமோ என்ன எழவோ?

ராஸலீலா அவரது அஞ்சல்துறை அனுபவங்களோடு ஆரம்பித்து எங்கெங்கோ போகின்றது. எக்ஸைலும் அதே. 

27 ஜனவரி 2017

ஒரு நடிகை நாடகம் பார்க்கின்றாள் - ஜெயகாந்தன்

ஜெயகாந்தனின் சிறந்த நாவல்களில் ஒன்றாகக் கூறப்படும் நாவல். பீம்சிங் இயக்கத்தில் திரைப்படமாகவும் வந்துள்ளது. ஜெயகாந்தன கதைகளின் பிரச்சினை, அது பேசக்கூடிய பொருளின் காலம். சிலவற்றின் தேவை இன்று இல்லை. இந்நாவல் அது போன்ற தோற்றத்தை தரும் நாவல்.  கதை சுருக்கம், கல்யாணி நாடக நடிகை, ரங்கன் பத்திரிக்கை ஆசாமி. இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். பின்னர் விவாகரத்து செய்ய விண்ணப்பிக்கின்றனர். ஆனால் கல்யாணியின் உடல்நலக்குறைவு அம்முடிவை சோதிக்கின்றது. 

சிறிய நாவல். கிண்டில் அன்லிமிட்டடில் படித்தது. கல்யாணியை ஒரு குற்றங்குறையில்லாத பெண்ணாக படைத்துவிட்டார். ரங்கனின் மீது அவளுக்கு இருப்பது எதிர்ப்பார்ப்புகளற்ற காதல். அது ஒரு பருப்பொருளாக் இருந்திருந்தால் ஏதாவது மியூசியத்தில் வைத்து காத்திருக்கலாம். கடைசியில் பைனரியாக வைத்து காக்கவேண்டியதுதான். சரி. ரங்கனின் மீது இருக்கும் இருப்பு அவளை அவன் பக்கம் இழுத்தாலும், திருமண என்பதை எதிர்பார்க்காததால், அவன் விலகிச்செல்லும் போதும் அதே மகிழ்ச்சியுடன் அவளாள் சிரிக்க முடிகின்றது என்று நாம் புரிந்து கொள்ள முடிகின்றது.

ரங்கன் என்றைக்குமான ஆண். அவனுக்கு அவனது பாசங்கற்ற உள்ளம் திருமணம் செய்யதூண்டுகின்றது. அதுவே அவனை விவாகரத்திற்கும் செலுத்துகின்றது. சில உறவுகள் எட்ட இருந்தால் மட்டுமே இனிக்கிம். அருகில் சென்றால் அது தொடர்வது கஷ்டம். உண்ணும் உணவிலிருந்து அரசியல் வரை எங்காவது உரசி தொலையும். திருமணம் என்பது கொஞ்சம் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. திருமணம் கிட்டத்திட்ட ஒரு கட்டு. ஒரு ஒப்பந்தம், அதில் ஆரம்பிப்பது மெதுவாக மலர்ந்து ஒரு கடினமான பந்தமாக நிலை பெறுகின்றது. முதலில் அந்த ஒப்பந்தத்தை மதிப்பது அவசியம். ஒருவருடன் வாழும் போது, விட்டு கொடுத்தலும், அன்பும் தேவை. அந்த அன்பே அடிநாதம் என்பதையே நாவலும் காட்டுவதாக தோன்றுகின்றது. ஏதேதோ காரணங்களால் பிரிந்து சென்றாலும், இறுதியில் கல்யாணியின் உடல்நிலை காரணமாக அவளுடன் வாழுவதற்கு காரணம் அன்பேயன்றி ஜெயகாந்தனே கூறுவது போல மனிதாபிமானமாகது என்று தோன்றுகின்றது.

பாத்திரங்கள் வழக்கமான ஜெயகாந்தன் பாத்திரங்கள். பேசிக்கொண்டே அல்லது சிந்தித்துகொண்டே இருக்கின்றன. எதையும் ஆழக்கீறி ஆராய்ந்து பார்க்கின்றனர். வளவளவென்று பேசுவதும், அவர்கள் சிந்திப்பதை படிப்பது இந்நாவலில் மிகவும் சோர்வூட்டுகின்றது. அதுதான் எனக்கு பட்ட குறை.

மற்றபடி ஒரு நல்ல நாவல். ஆனால் எழுதப்பட்டமுறையும் நடையும் இன்றைக்கு எனக்கு அந்நியமாக தோன்றுவதால் ஒரு சிறந்த நாவலென்று கூற முடியாது.

17 ஜனவரி 2017

இந்திரா செளந்திரராஜன் நாவல்கள்

சீரியஸ் புத்தகங்களாக் படித்து படித்து மண்டை காய்ந்து போயிருந்தது. ஜாலியான, விறுவிறுப்பான கதைகளை படிக்க வாய்ப்பில்லை. அது போன்ற கதைகளை ஒருதடவை அல்லது இரண்டு தடவை படிக்கலாம். பணம் கொடுத்து வாங்க மனமில்லை. என்ன செய்ய என்று யோசித்த போது கண்ணில் பட்டது கிண்டில் அன்லிமிட்ட. மாதம் 199 மட்டும், கிண்டில் அன்லிமிட்டட் வகையில் வரும் புத்தகங்கள் அனைத்தையும் இலவசமாக படிக்கலாம். நல்ல சான்ஸ். கிண்டில் வாங்க வேண்டும் என்றும் நீண்டநாள் ஆசை. இரண்டையும் சேர்த்ததில் ஏராளமான புத்தகங்கள் கையில். வகையாக மூன்று நாள் பொங்கல் விடுமுறை வேறு. படித்து தள்ளிவிட்டேன். உண்மையில் சொல்லப்போனால், சிறு வயதில் படித்த அந்த வேகம் மீண்டும் கிடைத்த குஷி. சும்மா சொல்லக்கூடாது கிண்டில் சூப்பர்தான். கண் வலி, கை வலி ஏதுமில்லை. புத்தகத்தில் படிப்பது போன்ற பிரமையும் தருகின்றது. என்ன சைஸ் தான் கொஞ்ச சிறியது.

முதலில் படிக்க நினைத்தது மசாலா கதைகள்தான். சிறுவயதில் விகடனில் தொடராகவந்த ரகசியாமாய் ஒரு ரகசியம். விகடனை வாரா வாரம் எதிர்பார்க்க வைத்த ஒரு தொடர். ஒரு கச்சிதமான மர்ம நாவல். அதில் ஆரம்பித்து இந்திரா செளந்திரராஜனின் பெரும்பாலான நாவலகளை படித்து முடித்தேன். மூன்று நாட்கள் போனது தெரியவில்லை. 

க்ரைம் கதைகள் எழுதுவது ஒரு வகை.சில பல கொலைகள், அதற்கு சில காரணங்கள். பணம், புகழ், பதவி. இவை பெரும்பாலும் நவீன யுக கதைகள். அதில் கொஞ்சம் அமானுஷ்யத்தை சேர்த்தால், இவரின் கதைகள். ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிராபகர், சுபா இவர்களின் கதைகள் ஒரு வகை. இந்திரா செளந்திரராஜன் பாணி தனி பாணி. இவரை போன்று எழுதும் மற்ற எழுத்தாளர்கள் மிகக்குறைவு. கலாதர் என்று ஒருவரின் சில கதைகள் படித்திருக்கின்றேன், பிறகு தெலுங்கு எழுத்தாலர் எண்டமூரி வீரேந்திரநாத். இவர்களின் எழுத்து நமது பாரதத்திலிருக்கும் பல அமானுஷ்ய, பழைய விஷ்யங்களை நவீன குற்றங்களுடன் கலந்தளிப்பது. முடிவில் எது உண்மை என்பதை வாசகர் யூகத்திற்கே விட்டுவிட்டு போவது. உதாரணம் எண்டமூரி வீரேந்திரநாத்தின் துளசி. சைக்கியாட்ரிஸ்ட், மந்திரவாதி, டாக்டர் மூவருமே தன் வெற்றி என்பதாக கதை முடியும். 

12 ஜனவரி 2017

Scion of Ikshvaku - Amish Tiripathi

அமிஷ் திரிபாதியின் அடுத்த நாவல். ராம் சந்திரா சீரீஸ் என்ற தலைப்பில் ஆரம்பமாகியுள்ளது. 

ராமாயணத்தை முந்தயை நாவல் பாணியில் எழுத ஆரம்பித்துள்ளார். ராமாயணத்தை மாற்றி எழுதுவது கொஞ்சம் சுலபமானதுதான். ஏனென்றால் ஏற்கனவே பல ராமாயணங்கள் வழக்கில் இருக்கின்றன. புத்திசாலியான எழுத்தாளர் அனைத்தையும் கலந்து கட்டி ஒரு புதிய ராமாயணத்தை உண்டாக்கிவிடலாம். ராவணன் சீதையை கடத்துவதுடன் நாவல் ஆரம்பமாகின்றது. ஏன்? அப்பொழுதுதானே வாசகன் முதல் அந்தியாத்திலேயே எழுந்து உட்காருவான். பிறகு மெதுவாக முப்பது ஆண்டுகளுக்கு பின்னால் கதை செல்கின்றது.

தசரதனுக்கும் ராவணனுக்குமான் போரில் கதை ஆரம்பிக்கின்றது. சரியாகத்தான் எழுதியிருக்கின்றேன். தசரதன் தோற்கின்றான். ராமன் பிறக்கின்றான். ராமனை தோல்விக்கு காரணமானவாக கருதி தசரதன் வெறுக்கின்றான். நான்கு சகோதரர்களுக்கான குணங்களை சமைப்பதில் மகாபாரதத்தை கடன் வாங்கிக் கொண்டிருக்கின்றார். ராமன் சத்தியசீலன், விதிகளை கண்டிப்பாக பின்பற்றுபவன் தர்மபுத்திரனின் சாயலை அதிகமாக புகட்டியுள்ளார். பரதன் ஜாலியான் ஆள், பெண்கள் விஷயத்தில் அர்ஜ்ஜுனன். லக்ஷ்மணன், பீமன் சாயல் நல்ல உணவு, பலசாலி. சத்ருக்கணன் - சகாதேவன். படிப்பாளி.  தசரதனின் ஆட்சியில் அயோந்தியின் நிலை பரிதாபமாக இருக்கின்ற நிலையில், ராமன் நாட்டின் பாதுகாப்பை பொறுபேற்று கொண்டு சிறப்பாக செயல்படுகின்றான். மந்திரை ஒரு பணக்கார வியாபாரியாக வருகின்றாள். ராமனின் மீதான அவள் வன்மத்திற்கு வேறு ஒரு காரணத்தை காட்டுகின்றார். இருபுறமும் தவறில்லாமல் பேலன்ஸ் செய்யும் வகையில் அமைத்து தன் ஐஐடி புத்திசாலித்தனத்தை காட்டுகின்றார்.

09 ஜனவரி 2017

வெக்கை - பூமணி

கரிசல் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவர். அஞ்ஞாடி நாவலுக்கு விருது பெற்றவர். அஞ்ஞாடி வாங்க ஆசைதான், முதலில் ஒரு சாம்பிள் பார்ப்போம் என்று வெக்கை நாவலை வாங்கினேன். ஜெயமோகன் எழுதிய ஒரு கதையை நினைவு படுத்தியது. தன் நிலத்தை ஆக்கிரமிக்க நினைத்த ஒருவனை வெட்டிவிட்டு சிறைக்கு செல்லும் ஒருவரை பற்றிய கதை. அதே மாதிரியான ஒரு கதை. நிலத்தை ஆக்கிரமிக்க நினைத்து அது முடியாமல், தன் அண்ணனை கொன்ற வடக்கூரானை கொன்று விட்டு தலைமறைவாக இருக்கும் செலம்பரத்தின் நினைவுகளாக, அவனுக்கும் அவன் தந்தைக்குமான உரையாடல்களாக செல்கின்றது.

முதல் பாராவிலேயே கதை ஆரம்பித்து விடுகின்றது. எவ்வித ஆர்ப்பாட்டமும், வர்ணனைகளும் இல்லாத ஆரம்பம். கரிசல் மண் சார்ந்த கதை என்று சொல்வதற்கில்லை. எங்கும் நடந்திருக்க கூடிய கதை. 

தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்று கொஞ்சம் யூகிக்க முடிகின்றது. அவ்வளவே, எங்கும் ஜாதி பற்றிய குறிப்புகள் இல்லை. வடக்கூரானை சிதம்பரம் கொல்வதில் ஆரம்பிக்கும் கதை அவர்கள் காவல்துறையில் சரணடைய செல்வதில் முடிகின்றது. பெரும்பாலும் உரையாடல்களாகவே கதை நகர்கின்றது. சிதம்பரத்தின் தந்தையும் இதே காரணத்திற்காக ஒருவனை கொன்ற கதை, தலைமுறைகள் மாறினாலும் பிரச்சினைகள் மாறுவதில்லை என்பதை சிறிய கோடாக காட்டிவிட்டு போகின்றது.