25 ஆகஸ்ட் 2016

காலந்தோறும் நரசிங்கம் - ஜடாயு


ஜடாயு பல ஆண்டுகளாக இணையத்தில் இயங்கி வருபவர். கம்பராமாயண ரசிகர். ஆர்.எஸ்.எஸ்க்காரர். (ஆமாம் முற்போக்குவாதிகள் / அறிவுஜீவிகள்  எல்லாம் கிளம்பலாம்). ஆழ்ந்த தமிழ் புலமை கொண்டவர். அவர் எழுதிய முதல் நூல் காலந்தோறும் நரசிங்கம்

ஹிந்துத்துவம் என்பதே ஒரு கெட்டவார்த்தை என்பது போன்ற தோற்றத்தை உண்டாக்க நமது போலி முற்போக்காளர்கள் முயன்றுவருகின்றனர். அவர்களுக்கு உதவ சில குழுக்களும் திரிகின்றன. ஸ்ரீராம் சேனா, அந்த சேனா என்று பல உதிரிகள் செய்யும் அடாவடித்தனங்களையும் ஹிந்துத்துவம் என்ற ஒரே குடையில் கொண்டுவர முயற்சிக்கின்றனர். எது உண்மையான ஹிந்துத்துவம்? கொஞ்சம் சிக்கலான கேள்வி. அதற்கு பதில் தர பல புத்தகங்கள் உள்ளன. ஜடாயுவின் புத்தகம் அதில் ஒன்று. 

ஹிந்துமதம் குறித்து பக்தி நோக்கில் எழுதப்படும் கட்டுரைகளுக்கோ, எழுதுபவர்களுக்கோ எவ்விதப்பிரச்சினையுமில்லை. ஹிந்துமதத்தை அரசியல், பண்பாட்டு, வரலாற்று ரீதியில் அணுகும் எழுத்தாளர்களுக்கு மட்டுமே பிரச்சினை. இந்த நிலையில் ஹிந்துமதத்தை பற்றி ஆராய்ச்சி பூர்வமாக கட்டுரை எழுதுபவர்கள் வெகு குறைவு. அவர்களில் ஒருவர் ஜடாயு.

தமிழ் ஹிந்து (ஒரிஜினல். தி ஹிண்டு இல்லை) தளத்தில் பல கட்டுரைகளை எழுதியிருக்கின்றார். காலைத்தேநீருடன் இந்துத்துவா என்று வரிசையாக பல கட்டுரைகளை எழுதினார். அக்கட்டுரைகளிலிருந்து சிலவும், வேறு தலைப்புகளில் அதே தளத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு காலந்தோறும் நரசிங்கம். இதில் வரும் பல கட்டுரைகளைப் பற்றியும் அதோடு தொடர்புடைய என் கருத்துக்கள், நினைவுகள், அனுபவங்கள் கீழே.

17 ஆகஸ்ட் 2016

வீரபாண்டியன் மனைவி - அரு. ராமநாதன்

சரித்திர நாவல்கள் என்றால் நினைவிற்கு வருவது கல்கி, சாண்டில்யன் மட்டுமே. இவர்களைத் தவிர இன்னும் பலர் எழுதியிருந்தாலும் இவர்கள் இருவர் அளவிற்கு புகழடைந்தவர்கள் எவருமில்லை. கல்கியின் கதைகளில் சரித்திரம் என்பது வெகு சொற்பமே. சரித்திர சம்பவங்களை ஒரு அடிப்படையாக வைத்துக் கொண்டு, முழுக்க முழுக்க தன் கற்பனையால் வாசகர்களை கவர்ந்தார். ஒரு ஃபேண்டசி வகையில்தான் சேர்க்க வேண்டும். கல்கி வெகு குறைவாகவே எழுதினாலும், ஒவ்வொன்றையும் வித்தியாசமாக எழுதியதால் எங்கும் அலுப்பு தட்டாத நாவல்கள். சாண்டில்யன், கல்கியை ஒட்டியே எழுதினாலும், இவர் வித்தியாசப்படுவது வர்ணனைகளால். சிருங்கார வர்ணனைகள், அமானுஷ்யமான கதாநாயகர்கள். இரும்புச் சலாகையால் உரசும் குரல் வில்லன்கள்.ஒரே டெப்ளேட். இருந்தும் ஒரு சில கதைகள் சுவாரஸ்யமானவை. தொடர்கதைகளுக்கேற்றவை. ஒரு நல்ல எடிட்டரை கொண்டு வெட்டி எறிந்தால், க்ரிஸ்ப்பான

பல நாவல்களும், பல சிறுகதைகளும் கிடைக்கும்.

இவர்கள் இருவரை தவிர மற்றவர்கள் எழுதிய சரித்திர கதைகள் பெரும்பாலும் அலுப்பூட்டுபவையாகவே இருக்கின்றது. பாண்டிமாதேவி, மணி பல்லவம் என்று இரண்டு நாவல்கள். தண்டத்திற்கு காசு கொடுத்து வாங்கியதற்கு இன்று வரை வருந்துகின்றேன். அவை என் கண்ணில் படக்கூடாது என்று ஊரிலேயே வைத்துவிட்டு வந்திருக்கின்றேன். சுஜாதா எழுதிய காந்தளூர் வசந்தகுமாரன் கூட ஒரு சுமாரான நாவலே. அகிலன், ஜெகச்சிற்பியன், உதயணன், என்று  பலர் பல சரித்திர தொடர்கதைகளை எழுதியுள்ளார்கள். ஆனால் அவற்றில் குறிப்பிடத்தகுந்தவை என்று எதையும் சொல்ல முடியவில்லை. அனைத்து கொஞ்சம் ஃபேண்டசி கதைகள். படிக்கவும் சுவாரஸ்யமற்ற மொக்கைகளே. ஆனால் வீரபாண்டிய மனைவியை அந்த வகையில் சேர்க்க முடியாது.

சரித்திரக் கதைகள் என்ற அளவில்லல்ல. சரித்திரத்தை அடிப்படையாக் கொண்ட, சுவாரஸ்யமான கற்பனை நாவல் (அ) தொடர்கதை ஆசிரியர் என்ற வகையில். கல்கி, சாண்டில்யனுக்கு அடுத்த வகையில் அரு. ராமநாதனை வைக்கலாம். அரு. ராமநாதன் பிரேமா பிரசுரத்தில் பணி புரிந்தார் என்று தகவல். உரிமையாளரா என்பதெல்லாம் தெரியவில்லை. பல புத்தகங்களை வெளியிட்டுள்ளார். வீரபாண்டியன் மனைவி அரு. ராமநாதனின் காதல் என்னும் பத்திரிக்கையில்  வெளிவந்த ஒரு தொடர்கதை. தொடர்கதைகளுக்குரிய பலவீனங்களை கொண்ட ஒரு நாவல். தியாக வினோதர் என்று பட்டம் பெற்ற குலோத்துங்கச்சோழன், பாண்டிய மன்னனான வீரபாண்டியனை வென்று அவன் சகோதரான் விக்கிரமபாண்டியனை அரியணை ஏற்றினான் என்ற சரித்திர சம்பவத்தை அடிப்படையாக கொண்ட ஒரு நாவல்.

11 ஆகஸ்ட் 2016

மிஸ்டர் வேதாந்தம் - தேவன்


தமிழின் சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்களில் ஒருவரான தேவனின் நாவல்.

முன்பு தொடர்கதை எழுத ஒரு டெம்ளேட் இருந்திருக்க வேண்டும். நல்லவன் ஒருவன், அவனுக்கு அடுத்தடுத்து துயரம், துக்கம், வேதனை, அழுகை. அவனுக்கு உபத்திரம் செய்ய ஒரு கூட்டமே வேலை செய்ய வேண்டும். அதே சமயம் அவனுக்கு உதவி செய்யவும் சில மாயாவிகள் வர வேண்டும். கதை முடிவதற்கு ஒரு மாதம் வரை துக்கப்பட்டு, துன்பப்பட்டு தொடர்கதை முடியப்போகின்றது என்று தெரிந்தவுடன், துக்கம் எல்லாம் மாயமாய் மறைந்து, துன்பம் செய்த தூர்த்தர்கள் எல்லாம் திருந்தி அல்லது அதற்கான தண்டனை அடைந்து, நல்லவன் வென்றான் என்று முடியவேண்டும்.

தேவன் பல நல்ல கதைகள் எழுதியிருந்தாலும் இது ஒரு டெம்ப்ளேட் கதைதான். லக்ஷ்மி கடாட்சம் என்று ஒரு தொடர்கதை உண்டு. அதே போன்ற ஒரு கதை. வேதாந்தம் ஒரே அந்தியாத்தில் தகப்பனாரை இழந்து, கடனுக்கு சொத்தை இழந்து, வீட்டையும் இழந்து, பி.ஏவும் தோற்று நிற்கின்றான். அதன் பின் ட்யூஷன் வாத்தியாரி, எழுத்தாளருக்கு உதவியாகி, டுபாக்கூர் பத்திரிக்கைக்கு ஆசிரியராகி, இதற்கெல்லாம் நடுவில் கதைகளும் எழுதி, இறுதியில் பத்திரிக்கை உதவியாசிரியராகி, அத்தை மகளை திருமணம் செய்து கொள்கின்றான். நடுவில் அவனுக்கு துரோகம் செய்த உறவினர்களின் நிலையை கண்டு வருந்தி .................

இத்தனையும் மீறி எதற்கு படிக்க வேண்டும் என்கின்றீர்களா, ஒன்று எதையும் படிக்கலாம் என்ற எண்ணம், இரண்டு இதையும் படிக்க வைத்த தேவனின் எழுத்து சாதுர்யம். விறுவிறுப்பான நடை. எதிர்பார்த்த அல்லது தெரிந்த முடிவு என்றாலும், அதைப் சுவாரஸ்யமாக்கும் எழுத்து.

அங்கங்கு வரும் நகைச்சுவை. தேவன் உண்டாக்கும் பாத்திரங்கள் கொஞ்சம் தனித்துவமானவை. இதிலும் அதுமாதிரி பல பாத்திரங்கள்.

வாங்கி படியுங்கள். படுபயங்கர செறிவான, கடினமான, இலக்கியமான நாவல்கள் படித்தாலும், அவ்வப்போது அதிலிருந்து வேறுபட்டு கொஞ்சம் எளிதாக்கிக் கொள்ள இது போன்ற புத்தக்ங்களும் தேவை. குழந்தைகளுக்கு கொடுங்கள். வேகமாக படிக்கும் வழக்கத்தை இது போன்ற புத்தகங்கள் எளிதாக உண்டாக்கும்.

இங்கே கிடைக்கின்றது.

09 ஆகஸ்ட் 2016

பருவம் - எஸ்.எல்.பைரப்பா

மகாபாரதத்தின் தனித்தன்மையே, அதை நம்மால் பல்வேறு தளங்களில் வைத்து வாசிக்க முடியும் என்பதுதான். பல்வேறு முடிச்சுகள் கொண்ட ஒரு சுவாரஸ்யமான கதையாகவும் வாசிக்க முடியும், தர்ம - அதர்ம விவாதங்களை காட்டும் ஒரு தர்ம நூலாகவும் படிக்க முடியும், முழுக்க முழுக்க ஒரு அரசியல் நூலாக, அரசுகளுக்கிடையிலான விவகாரங்கள், அரசியல் சதிகள் என்று ஒரு அரசியல் நூலாகவும் படிக்க முடியும். அனைத்தையும் விட்டு விட்டு, வெறும் மனிதர்கள், அடிப்படை மனித உணர்ச்சிகள், உறவுகள், அது காட்டும் வித்தைகள் என்று வாசிக்கலாம். அக்கால குடிமுறைகளை கூறும் நூலாகவும் படிக்கலாம். 

மகாபாரதத்தை பலர் பல கோணங்களில் எழுதியிருக்கின்றார்கள். ராஜாஜியின் எளிய சுருக்கம், சோவின் மகாபாரதம் பேசுகின்றது, அதை ஒரு தர்ம - அதர்ம விவாத நூலாகவும், அரசியல் நூலாகவும் பார்க்கின்றது. வெண்முரசு மகாபாரதத்தை பல வித கோணங்களில் காட்டும் ஒரு நூல். பாரதியாரின் பாஞ்சாலி சபதம், வில்லி பாரதம், இரண்டாம் இடம், இனி நான் உறங்கலாமா,காண்டேகரின் யயாதி, இ.பாவின் கிருஷ்ணா கிருஷ்ணா என்று இன்னும் பல ஆக்கங்கள் உள்ளன. சுமார் 300 மகாபாரத ஆக்கங்கள் இருப்பதாக கூறுகின்றனர். நண்பர் ஆர்.வி பலவித மகாபாரதக்கதைகளை தொகுத்து இங்கு அளித்துள்ளார். (அவரே பல மகாபாரத சிறுகதைகளையும் எழுதியுள்ளார்) இவற்றில் முக்கியமான ஆக்கங்களில் ஒன்று பர்வா. ஜெயமோகனும் பலவித மகாபாரத வடிவங்களை பற்றி இங்கே கூறுகின்றார்

பைரப்பா ஒரு புகழ் பெற்ற கன்னட எழுத்தாளர். அவரைப்பற்றிய ஒரு சிறப்பான அறிமுகத்தை ஜெயமோகன் எழுதியிருக்கின்றார். ஆர்வியும் சிலிக்கான் ஷெல்பில் எழுதியிருக்கின்றார்.