30 செப்டம்பர் 2015

அமெரிக்காவில் கிச்சா - கிரேசி மோகன்

பாலஹனுமான் தளத்தில் கிரேசி மோகனின் பேட்டி (துக்ளக்கில் வந்தது என்று நினைக்கின்றேன்) இரண்டு பகுதிகளாக வந்துள்ளது. கிரேசி மோகனின் நாடகம் மட்டுமல்ல, பேட்டியும் ஒரே மாதிரிதான். புதிய பேட்டியை படித்தாலும் எங்கோ படித்தது போல இருக்கும். காரணம், அனைவரும் அவரை ஒரே மாதிரி கேள்வி கேட்பதுதான். அவரின் பதிலும் ரெடி மேடாக இருக்கும். அவரின் ஆனந்த விகட பக்தி, ஜானகி டீச்சர், நண்பர் ரவி, சேப்பு குழந்தை கருப்பு குழந்தை உதாரணம் என்று சொல்லலாம்

இந்த பேட்டியில் கொஞ்சம் புதிய தகவல்கள், அவரின் நாடகத்தை பார்த்துவிட்டு சொல்லப்பட்டது, 'ஒன்று நாடகம் ப்ளாப், ஊத்தி மூடிக்கும். இல்லை இனிமே இதுதான் நாடகம்'.இரண்டாவது பலித்து விட்டது. கிரேஸி மோகனின் பாணி நகைச்சுவை என்பது துணுக்கு தோரணம் என்றாலும், வார்த்தை விளையாட்டு, ஆள் மாறாட்ட குழப்பம், அதையும் மீறி சில இடங்கள் மிகவும் ரசிக்கும் படி இருக்கும். ஏதோ ஒரு நாடகத்தில் முடி திருத்துபவரை பார்த்து ஒரு பெண் 'உங்களை எங்கயோ பார்த்திருக்கிறேனே' என்று கூற, அவர் 'சே சே, ஐ அம் ஒன்லி ஃபார் மென்' என்பார். என்னதான் சொன்னாலும் இன்றைய தேதியில் ஒரு நல்ல நகைச்சுவை எழுத்தாளர் என்றால் இவரைத்தான் சொல்ல முடியும்

இவரால் வேறு வகை எழுத்து எழுத முடியும். இவரது படு சீரியசான கதை ஒன்றை ஒரு தீபாவளி மலரில் படித்திருக்கின்றேன். கவிதை (வெண்பா??) வேறு எழுதியிருக்கின்றார். கவிதைக்கு இன்ஸ்ப்ரேஷன் வாலி போல. விகடனில் இவருக்கு ஒரு ஆஸ்தான இடமுண்டு பல தொடர்களை எழுதியிருக்கின்றார். அதில் ஒன்று அமெரிக்காவில் கிச்சா

10 செப்டம்பர் 2015

உப்புவேலி - ராய் மாக்ஸிம்

வரலாற்று பாடம் என்பது எனக்கு எப்போதும் தலைவலியை தரும் ஒன்று. குறிப்பாக வருடங்கள். ஆறாம் வகுப்பிலோ, எட்டாம் வகுப்பிலோ, ஒரு பெரிய பகுதி. இந்திய வரலாற்றை முழுவதும் கரைத்து புகட்டும் ஆர்வத்தில் எவரோ தயாரித்தது. ஏகப்பட்ட வருடங்கள், காந்தி இர்வின் ஒப்பந்தம், மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம். தேர்வில் அப்படியே எழுதுவது என்பது, புத்தகத்தை வைத்துக் கொண்டு கூட சாத்தியமில்லாதது. என்னைப் பலரின் தூக்கத்தை கெடுத்த , பத்தாம் வகுப்பு வரை  படித்த வரலாற்றில் ஒரு வரி கூட இல்லாத ஒன்றை பற்றி பேசுகின்றது இந்த புத்தகம்.

ராய் மாக்ஸம் என்னும் ஆங்கிலேயேர் எழுதிய THE GREAT HEDGE OF INDIA என்னும் நூலின் தமிழாக்கம். தமிழில் சிறில் அலெக்ஸ் மொழி பெயர்த்துள்ளார். இப்புத்தகம் வெளிவந்த பொழுதே ஜெயமோகன் இதைப் பற்றி சிறந்த அறிமுகத்தை தந்திருந்தார். ஆங்கிலத்தை விட தமிழில் படிப்பது எனக்கு சுலபமாக இருந்தது.

இணையத்தில் கண்டதையும் படிக்க ஆரம்பித்த புதிதில் தன் விஷயங்கள் புரியாமல் இருந்தன. முக்கியமானது பலருக்கு இருக்கும் இந்திய வெறுப்பு. அவர்களை பொறுத்த வரை இந்தியா எப்போதும் சிறப்பாக இருந்ததே இல்லை. ஆங்கிலேயர்கள் வந்த பின்னால் தான் இந்தியா பல துறைகளில் முன்னேறியது. எப்படி சிலரால் அந்தளவிற்கு முட்டாள்த்தனமாக யோசிக்க முடியும் என்பது ஆச்சர்யமாகவும், பின்னர் வேடிக்கையாகவும் இருந்தது.

05 செப்டம்பர் 2015

வெண்முரசு - பிரயாகை - ஜெயமோகன்

கடந்த திங்களன்று மதுரை புத்தக கண்காட்சி செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதிகம் கண்ணில் பட்டவை இரண்டு. முதல் இடம் பொன்னியின் செல்வனுக்குதான். பெரும்பாலான அரங்குகளில் பொன்னியின் செல்வன். வித விதமான வடிவங்களில், படங்களுடன், படங்கள் இல்லாமல், பல வடிவங்களில். இரண்டாவது வெண்முரசு. நற்றிணையிலும், கிழக்கிலும் திரும்பிய பக்கமெங்கும் வெண்முரசு.

வெண்முரசு வரிசையில் ஐந்தாவது நாவல். முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம், பிரயாகை. இருப்பதிலேயே நீலம் சிறிய புத்தகம் என்றாலும், இரண்டு முறை முழுவதும் படித்திருந்தாலும் மனதில் அது முழுவதும் சென்று அமரவில்லை. பெரும்பாலும் அதை பயணத்தின் போது படித்ததால் வந்த விளைவாக இருக்கும். ஒரு நாள் முழுவதையும் முழுக்க முழுக்க செலவிட்டு படிக்கவேண்டும்.

பிரயாகை, பாஞ்சாலியின் கதை, அவளின் ஆளுமையை காட்டும் கதை, என்று கூறப்பட்டாலும், கதை முழுக்க அவளில்லை. அவள் வரும் நேரம் கொஞ்சம் என்றாலும் அவளின் பாத்திரம் விஸ்வரூபமடைந்து, தான் யார் என்று காட்டிவிடுகின்றாள்.

துருவனின் கதையுடன் ஆரம்பமாகின்றது பிரயகை. சிறுவயதில் கேட்ட கதை. சிறுவயதில் கேட்கும் போது, ஒரு பரிதாப சிறுவன் என்றுதான் தோன்றியிருக்கும். யாருக்கும் கிடைக்காத ஒரு இடத்தை பெற்றவன், என்றும் மாறா உறுதி கொண்டவன். அவனே இக்கதையின் ஆரம்பம்.

02 செப்டம்பர் 2015

ஆ - சுஜாதா

வெகு நாட்கள் கழித்து மீண்டும் புத்தகங்களை கையில் எடுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

வார்ம் அப்பிற்காக சுஜாதாவிலிருந்து.

ஆ - கணேஷ் - வசந்த் கதை. சும்மா வருகின்றார்கள்.

எதில் தொடர்கதையாக வந்தது என்று தெரியவில்லை. தலைப்பை வைத்துவிட்டு கதையை யோசித்தாரோ, இல்லை நினைத்த கதைக்கு கிடைத்த தலைப்பு என்று வைத்தாரோ. தலைப்பை ஆ என்று வைத்ததால் ஒவ்வொரு அத்தியாய முடிவிலும் ஆ. எரிச்சலாகவும், குழந்தைத்தனமாகவும் இருக்கின்றது. எவர் தந்த யோசனையோ!!!!

நன்றாக தினமும் அலுவலகம் சென்று, ரிசெசன், அப்ரைசல், எச் ஆர் தொந்தரவு ஏதுமின்றி, ப்ரொகராம் (தமிழில் என்ன? ஆ, நிரலி, பல்லில் சிக்கிய பருப்பை தேடும் நினைப்பு வருகின்றது) மட்டும் எழுத வேண்டியிருந்த பொற் காலத்தில் இருக்கும் ஒருவனுக்கு ஏற்படும் பிரச்சினை.