25 டிசம்பர் 2015

தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில்நாடன்

சொல்ல மறந்த கதை. அழகி படம் பார்த்த ஹேங் ஓவரில் என் நண்பன் என்னை இழுத்துக் கொண்டு போனான். அழகியே என்னை பொருத்தவரையில் ஒரு குப்பை படம்தான். இளையராஜா இல்லாதிருந்தால் படம் பப்படமாகியிருக்கும். டைட்டில் போடும் போது தலைகீழ் விகிதங்கள் என்னும் நாவலை அடிப்படையாக கொண்டது என்று போட்டிருந்தது. முணுக் முணுக்கென்று அழுகும் சேரன் படத்தையே ஒவ்வாததாக செய்திருந்தார். படத்தை பார்த்து நொந்து வந்த பின் நாவலாசிரியர் மீது ஒரு எரிச்சலே இருந்தது. நாவலாசிரியர் யார் என்று தேடினால், நாஞ்சில்நாடன். பெரிதாக படிக்கும் ஆர்வம் வரவில்லை.

ஜெயமோகனின் தளத்தில் அவரை பற்றி ஒரு பெரிய கட்டுரை எழுதியிருந்தார். தாடகை மலையடிவாரத்தில். அவரை பற்றிய ஒரு பெரிய அறிமுகத்தை கொடுத்தது. அதன் பின் ஜெயமோகன் அவரை பற்றி பல இடங்களில் எழுதியிருந்தார். ஜெயமோகன் எழுத்துக்கள் மூலம் அவர் ஏதோ மிகவும் தெரிந்தவர் போல ஆகிவிட்டார். அவரின் முதல் நாவல் இப்புத்தகம்.

ஐ.டி பூம் என்று சொல்லப்படும் வஸ்து வருதற்கு முந்தைய காலகட்டத்தை பற்றிய ஒரு இளைஞனின் கதை. நான் படிக்கும் போது கூட இந்தளவிற்கு கேம்பஸில் வந்து அழைத்து போகும் அளவிற்கு வேலை வாய்ப்புகள் இருக்கவில்லை. இருந்தும், அப்போது எனக்கு பயமும் அவ்வளவு இல்லை. ஒன்று கடவுள்  நம்பிக்கை, இரண்டு படித்த படிப்பு கைவிடாது என்ற நம்பிக்கை. ஆனால் எனக்கு முந்திய தலைமுறைக்கு வேலை கிடைப்பது என்பது பெரிய விஷயம். அக்கால திரைப்படங்கள் வேண்டிய அளவிற்கு காட்டிவிட்டன. 

ஆணுக்கு வேலை பிரச்சினை என்றால் பெண்ணிற்கு திருமணம். இன்று ஆணுக்கு வேலையை விட திருமணம் தான் பெரிய பிரச்சினையாக இருக்கின்றது என்பதாக தோன்றுகின்றது.

வேலையில்லாமல் திருமணம் என்பது ஒரு சமரசம். அதிலும் வேலைக்கு பெண் வீட்டையே நம்ப வேண்டும் என்பது சமரசத்திலும் ஒரு படி கீழே. ஒருவன் நம்மை நம்பி இருக்கின்றான் என்றால் அவனை போஷிப்பது ஒரு வகை, அதே சமயம் அவனி பற்றி ஒரு சிறிய கீழெண்ணம் வந்துவிடும். மதிப்பில் ஒரு படி குறைந்துவிடும். 

வேலையில்லாமல் திருமணம் செய்து கொண்டு, மாமனார் வீட்டில் வாழும் ஒரு இளைஞன். இருபது வயதில் எவ்வித முதிர்ச்சியிமில்லாத மனைவி, மாமியார், கவுரவம் பார்க்கும் மாமனார். சிக்கியவன் செத்தான். 

எப்போதும் நாவல் சினிமாவுகும் போது அது கொத்தி கொதறப்பட வேண்டும் என்பது மரபு. இந்த நாவல் திரைக்கதை வடிவிலின்றி, நடிகர்களின் மிகை நடிப்பால் கொல்லப்பட்டிருந்தது.  அதோடு பாத்திர வார்ப்பும். சிவதாணு இயாலமையும், கோபமும் கொண்ட ஒரு இளைஞன். படத்தில் வருவது இயலாமை மட்டும் கொண்டிருக்கும் ஒரு அழுமூஞ்சி. அவனின் மாமனார், படத்தில் ஒரு கொடுரமான வில்லனாகவே காட்சி தந்தார். 

நாவலின் கதை மிகச்சாதரணமானது. அக்கதையை அவர் சமூகத்தின் மீதான தன் விமர்சனத்தை வைக்கவும்,  ஒரு காலகட்டத்தை பதிவு செய்யவும் பயன்படுத்திக் கொண்டுள்ளார். இக்கதையை ஒரு மாத நாவலில், கண்ணீர் மல்க படிக்கும் படி எழுதமுடியும். டீவி சீரியல் போல செய்யமுடியும். ஆனால் இங்குதான் வித்தியாசம் வருகின்றது. 

நாவலில் வரும் தமிழ் ஒன்று அந்தளவிற்கு கடுமையாக இல்லை. புரிந்து கொள்ளும் பேச்சு மொழிதான். ஆங்காங்கே சிரிக்க வைக்கும் உரையாடல். 

கதையில் உரையாடல்கள் மிகவும் குறைவு. பெரும்பாலும் ஆசிரியரே பேசுகின்றார். நாவலுக்கும் அது தேவைதான். ஏனென்றால் பெரும்பாலும் சிவதாணு இருப்பது தனிமையில், அவனது உள்ளத்திலிருப்பது ஆசிரியர் மூலமே வரும். இருந்தும் அங்காங்கு வரும் சமூக விமர்சனங்களில் சிவதாணுவை பின் தள்ளிவிட்டு ஆசிரியர் வந்து அமர்கின்றார். அவ்விடங்கள் மட்டும் அந்நியமாக தோன்றுகின்றது, ஒரே நாவலில் அனைத்தையும் கொட்டி விடும் முயற்சியோ என்று தோன்றுகின்றது.

தவற விடக்கூடாத படைப்பாளியின் முதல் புத்தகம். 

அவரது தளம் 

1 கருத்து: