27 நவம்பர் 2015

சம்ஸ்காரா - யூ. ஆர். அனந்தமூர்த்தி

மோடி பிரதமரானால் நாட்டை விட்டு செல்வேன் என்று சூளுரைத்தவர் என்பதே இவரை பற்றிய அறிமுகம். நாட்டை விட்டு எல்லாம் செல்லவில்லை என்பது வேறு கதை. தேர்தல் சமயத்தில் கூறுவதை எல்லாம் சீரியசாக எடுத்து கொள்ளலாமா. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு மறைந்துவிட்டார். அவரின் புகழ் பெற்ற நாவல். பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

சம்ஸ்காரா என்றால் தகனம் என்றும் சொல்லலாம், ஆச்சார அனுஷ்ட்டானங்கள் என்றும் சொல்லலாம். இதில் இரண்டுமே இருப்பதால், அதற்கேற்ற தலைப்புதான். இதை ஒரு குறியீட்டு நாவல் என்கின்ற்னர்.

பழமைக்கும் அதை எதிர்த்து கிளம்பும் கலகத்தை பற்றியதுமானது எனப்படுகின்றது. இதை யாரும் அந்தளவிற்கு விளக்கமலே புரிகின்றது. குறியீட்டு நாவல் என்று தெரிந்து கொண்ட பின் எல்லாவற்றிலும் அதை தேட வேண்டாம் என்று முடிவு செய்து கொண்டு என் வழியில் படித்ததை பற்றி மட்டுமே இங்கே

17 நவம்பர் 2015

உயிர்த்தேன் - தி. ஜானகிராமன்

உயிர்த்தேன்.

தலைப்பு எதை குறிக்கின்றது என்பது கொஞ்சம் குழப்பமான விஷயம். கதையில் நாயகியையா இல்லை, கதையில் வரும் விவசாயத்தையா? ஏதோ ஒன்று, பெரும்பாலும் கதைக்கும் தலைப்பிற்கு சம்பந்தமிருப்பதில்லை.

தி. ஜாவின் சுமாரான கதை என்ற வரிசையில் தான் இதை என்னால் வைக்க முடியும். கதையமைப்பிலும் சரி, உள்ளடக்கத்திலும் சரி மிகவும் சாதரணமான கதை.

சொந்த ஊருக்கு வந்து வாழ நினைக்கும் பூவராகனுக்கு செங்கம்மாவின் அறிமுகம். தி. ஜாவின் நாயகர்களை போல அவளை மனதில் வைத்து போற்றும் பூவராகன் ஒரு பக்கம், அதே போற்றுதலை செய்யும் பழனி ஒரு பக்கம். திருமணம் ஆனவள் என்பதால், பூவராகனின் போற்றுதல், ஒரு வித பக்தியாகின்றது. பழனியின் தாபம், வெறியாகின்றது.

11 நவம்பர் 2015

நளபாகம் - தி. ஜானகிராமன்

நளபாகம். 
சமையலில் சிறந்தவர்கள் நளனும், பீமனும் என்பார்கள். இது ஒரு நளபாகம் படைக்கும் ஒருவனின் கதை.

தி. ஜானகிராமனின் வழக்கமான அனைத்து விஷயங்களும் உண்டு. 

ஆரம்பமே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கின்றது. யாத்ரா ஸ்பெஷல், ரயிலில் ஆரம்பிக்கும் கதை.

காமேச்வரன், யாத்ரா ஸ்பெஷெலில் யாத்ரீகர்களுக்கு வேண்டியதை வாய்க்கு ருசியாக சமைத்து போடும் தலைமை பரிசாரகன். அம்பாள் உபாசகன். அதே வண்டியில் வரும் ரங்கமணி என்னும் பெண் (வேறு பெயர் கிடைக்கலையா அய்யா) தன் மகனின் ஜாதகத்தை காட்டி, உடன் வரும் பெரிய  பண்டிதரிடம் கேட்க அவர் கூறும் பதில் விபரீதமாக இருக்கின்றது.

04 நவம்பர் 2015

மலர் மஞ்சம் - தி. ஜானகிராமன்

நீண்டநாள் கழித்து மீண்டும் தி. ஜானகிராமன்.

மதுரை புத்தக கண்காட்சியில், விடுபட்டு போன சில புத்தகங்களை வாங்கினேன்.  பெரும்பாலும் தி. ஜா.

தி. ஜானகிராமன், ஒரே கதையே திரும்ப திரும்ப எழுதுகின்றார் என்ற கருத்து சிலருக்கு உண்டு. எனக்கு அப்படி தோன்றவில்லை, பாத்திரங்களின் தன்மை அப்படி அமைந்துவிடுவதுதான் அதற்கு காரணமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். அவரின் பல பாத்திரங்கள், ஒரே சாயல் கொண்டதாக தோன்றும்.

மலர் மஞ்சம், மீண்டும் ஒரு தஞ்சாவூர் கதை. தி.ஜாவின் பெரும்பாலான கதைகளின் அடிநாதம் ஆண் - பெண் உறவு, அதுவும் கொஞ்சம் நடைமுறைக்கு மீறிய, அதே சமயம் சாத்தியமான ஒன்று. ஒரு ஆணிற்கு இரண்டு பெண்கள் மீது ஆசை வருமா என்று கேள்வியே கேட்க முடியாது. பலதார மணம் சாதரணமாக இருந்த இடம். இரண்டு பெண்களிடமும் ஒரே மாதிரியான அன்பு, காதல் இருக்குமா என்றால், அதுவும் சாத்தியம்தான். ஆணிற்கு சாத்தியமென்றால், பெண்ணிற்கு?

பல குடும்பங்களில் நடக்கும் முட்டாள்த்தனம், ஒரு பெண் பிறந்தவுடனே அதற்கு மாப்பிள்ளை நிச்சயிப்பது, அவர்கள் முன்னாலே அதை பேசி பேசி, அவர்களை உருவேற்றி, இறுதியில் வேறு வகையில் செல்லும் போது புலம்புவது. அது போன்ற கதைதான் இது.

பெண்ணிற்கும் இரண்டு ஆண்களின் மீது காதல் வரலாமா? வந்தால் என்னவாகும். இந்த முடிச்சை வைத்து கொண்டு, ஒரு பெரிய நாவலை எழுதியிருக்கின்றார். முடிச்சு விழுவது என்னவோ முக்கால் நாவல் முடிந்த பின்னர்தான், அது வரை கதையை, அவரது எழுத்து வன்மையால் அடித்து தூக்கிக் கொண்டு போகின்றார்.

02 நவம்பர் 2015

ஒரு கடலோர கிராமத்தின் கதை - தோப்பில் முகம்மது மீரான்

ஊரில் எனது வீட்டின் எதிரில் பள்ளி வாசல், பள்ளிவாசலில் ஒலிக்கும் பாங்கு ஒலி கணீரென்று கேட்கும். வேறு வேலையில் இருக்கும் போது கூட அவ்வொலி நேரத்தை காட்டிவிடும். மாலை நேரங்களில் கூட்டமாக குழந்தைகளுடன் பெண்களை காணலாம், மந்திரிக்க வருவார்கள். 

கொஞ்சம் வளர்ந்தபின் முதலில் ஆச்சர்யத்தை அளித்தது, இறந்தவர்களின் உடல் உள்ளேயே புதைக்கப்படும் என்பது. இரண்டாவது கொஞ்சம் பயத்தையும், உடன் படித்தவர்களின் கதைகள். உள்ளே ஒரு ஜின் இருக்கின்றது, அதை கைகளை கட்டி உள்ளே அடைத்து வைத்திருக்கின்றார்கள். ஜின் என்பது ஒரு பேய் என்றளவிற்கு விபரம் தெரியும். மாமா ஒரு இஸ்லாமியரிடம் வேலை செய்ததால், இன்னும் கொஞ்ச விபரங்களும் தெரிந்து கொண்டேன். 

எனக்கு எப்போதும் அவர்களின் பக்தியும், நம்பிக்கையும், ஆச்சர்யமூட்டுபவை. மார்கழி மாதம் ஏதாவது ஒரு நாள் காலையில் கோவிலுக்கு போவதே, பெரிய கொடுமையாக தோன்றும் எனக்கு. ஆனால் சின்ன சின்ன சிறுவர்கள், காலை தொழுகைக்கு தினமும் போவது என்பது மிகவும் போற்றக்கூடியது. அவர்களின் கடவுள், மார்க்கம், கட்டளை மீதான நம்பிக்கை மதிப்பிற்குரியது. 



பலர் கூறுவது போல இஸ்லாமியர்கள் ஒன்று ஒரு தனிப்பட்ட சமூகமாக வாழ்வது போன்று எனக்கு தெரிந்ததில்லை. பலர் அப்படி கூற என்ன காரணம் என்று தெரியவில்லை, ஒரு வேளை நான் சரியாக கவனிக்கவில்லையோ என்ற எண்ணம் தோன்றுவதுண்டு.