01 நவம்பர் 2014

காவல் கோட்டம் - வெங்கடேசன்

மதுரை நகரை பற்றி எப்போதும் ஒரு ஆச்சர்யம் உண்டு. பல நூறு ஆண்டு வரலாறு கொண்ட நகரம். இன்றும் உயிர்ப்போடு இருக்கும் நகரம். பாண்டியர்களின் தலைநகரம். பல முறை பலரால் வெற்றி கொள்ளப்பட்டு மீண்டும் மீண்டும் எழுந்த நகரம். கோவிலை மையமாக கொண்டு திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரம். மதுரையை பற்றிய நாவல் என்ற காரணத்தால் மட்டுமே வாங்கினேன். கோம்பை பற்றிய சில விபரங்களையும் தெரிந்து கொள்ள முடிந்தது. (கோம்பை எனது சொந்த ஊர்)

ஆனால் உண்மையில் இது மதுரையின் வரலாறு அல்ல. தாதனூரின் கதை. கள்ளர்களின் கதை. காவலர்களின் கதை. மதுரை நாகமலை புதுக்கோட்டை பக்கம், கீழக்குயில்குடி என்று ஒரு ஊர் இருக்கின்றது. அந்த ஊரின் கதை என்று கூறப்படுகின்றது. குற்றப்பரம்பரை என்று ஆங்கிலேயர்களால் முத்திரை குத்தப்பட்ட பரம்பரையினரின் கதை. அவர்களின் வாழ்வு மதுரையுடன் பிணைக்கப்பட்டுள்ளது, அவர்களின் வரலாறு மூலம் மதுரையின் வரலாறு சொல்லப்படுகின்றது.

வரலாறு என்பது பெரும்பாலும் மன்னர்களின் வரலாறு என்பதாகவே இருந்து வருகின்றது. எந்த மன்னர் எங்கு சென்றார், எத்தனை போர் செய்தார். மக்களின் வரலாறு சொற்பமே. வரலாற்று நாவல்கள் என்றால் கல்கியிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டியிருக்கின்றது. அவரின் கதை வரலாறு எண்ணும் வண்ணத்தை கொஞ்சம் தொட்டு கொண்டு அவரது கற்பனையை முழுக்க முழுக்க கலந்து தந்த ஓவியங்கள். சாண்டில்யன் கதைகளில் வரலாறு என்பது அதில் வரும் மன்னர் பெயர்கள் மட்டுமே என்பது என் எண்ணம்.