24 ஜூலை 2014

கரையெல்லாம் செண்பகப்பூ - சுஜாதா

சுஜாதாவின் மற்றுமொரு பெயர் பெற்ற நாவல்.

சிறு வயதில் பக்கத்து வீட்டு மாடியில் குப்பைக்கு நடுவில் கண்டெடுத்து படித்தது. மீண்டும் படிக்கலாம் என்று வாங்கினேன். சின்ன நாவல். ஒன்றிரண்டு மணி நேரத்தில் படித்துவிடலாம். 

கதை. மர்மக்கதை. துப்பறியும் கதை விதிப்படி ஒவ்வொரு அந்தியாயத்தின் முடிவில் ஒரு சின்ன சஸ்பென்ஸ். கொஞ்சம் அமானுஷ்யம். இரவில் சத்தம். பழைய வீடு. ஒரு கொலை, கொலை செய்தவனை விட்டு விட்டு யாரையோ பிடிக்கும் போலிஸ், கடைசியில் கொலைகாரன் தானே மாட்டி கொண்டு சுபம்.

நாட்டு பாடல் சேகரிக்கவரும் கல்யாணராமன் தங்குவது ஒரு பழைய ஜமீன் மாளிகையில். அடுத்தநாளே ஜமீன் பேத்தியும் ஆஜர். ஜமீன்ந்தார் மனைவி மரணமடைந்து ஆவியாக அலைவதாக பேச்சு. கிராமத்து பெண் வெள்ளி, அவளது முறைமாமன் மருதமுத்து. வெள்ளி மீது கல்யாணராமனுக்கு ஒரு ஈர்ப்பு, வெள்ளிக்கு மருதமுத்து என்றால் உயிர், மருதமுத்திற்கு சினேகலதா மீது ஒரு ஆசை. சினேகலதா, கல்யாணராமனை சீண்டி விளையாடுகின்றாள், கடைசியில் தலையில் அடிபட்டு செத்து போகின்றாள். வெள்ளி காணமல் போகின்றாள். கல்யாண ராமன் அடி வாங்குகின்றான், மருதமுத்து அடி கொடுக்கின்றான். போலிஸ் வேடிக்கை பார்க்கின்றது. கொலைகாரன் மாட்டிக் கொள்கின்றான். போலிஸ் பிடித்து செல்கின்றது. முடிந்தது.

22 ஜூலை 2014

அப்புசாமி சீதாப்பாட்டி

பெரிது பெரிதாக இரண்டு புத்தகங்களை படித்த களைப்பில் குட்டியாக படிக்கலாம் என்று தேடிய போது கிடைத்தது அப்புசாமியும் 1001 இரவுகளும். படு பயங்கர தீவிர வீர இலக்கியவாதிகள் கொஞ்சம் எட்ட நின்று பார்த்துவிட்டு விலகுங்கள், இல்லாவிடில் கெட்ட கனவுகள் வரலாம்.  

அப்புசாமி சீதாப்பாட்டியை, குமுதத்தில் நடுப்பக்கத்தை தவிர உள்ளடக்கத்தையும் (முன்பு அது போன்ற ஒரு வஸ்து குமுதம், விகடனில் இருந்தது, இதை படித்துவிட்டு இப்போது போய் தேடி ஏமாந்து என்னை திட்ட வேண்டாம்) படிக்கும் பலருக்கும் தெரிந்திருக்கும்.  நான் குமுதத்தில் படித்ததில்லை, எங்கள் ஊர் நூலகத்தில் படித்தது. அப்போது மிகவும் பிடித்து ரசித்து படித்த வரிசை. அந்த பழைய நினைவில் வாங்கியிருந்தேன். இப்போது பிடிக்குமோ பிடிக்காதோ என்று நினைத்து படித்து பார்க்கலாமே என்று வாங்கியது. மோசமில்லை. படிக்க முடிந்தது.   

பாக்கியம் ராமசாமி, ஜ.ரா.சுந்தரேசன். குமுதத்தின் மும்மூர்த்திகளில் ஒருவர். நகைச்சுவை இலாகா. பல நகைச்சுவை கதைகளை, கட்டுரைகளை எழுதியுள்ளார். அடிக்கடி நான் ரா.கி.ரவுடன் குழப்பிக் கொள்வேன். இவருடைய நகைச்சுவையல்லாத கதைகளில் கொஞ்சம் புஷ்பா தங்கதுரை எட்டி பார்ப்பார்.  விகடனில் கொஞ்ச நாள் நகைச்சுவை கட்டுரைகள் எழுதி வந்தார், ஓரளவிற்கு சுமாராக இருந்தது.

15 ஜூலை 2014

கொற்கை - ஜோ டி குரூஸ்

முதற்கனல் முடித்த பின்னால் அடுத்து கையில் எடுத்தது கொற்கை.

வாங்கி வைத்து பல மாதங்கள் ஆகிவிட்டது. இரண்டு முறை ஆரம்பித்து படிக்க முடியாமல் வைத்துவிட்டேன். இந்த முறை விடவில்லை, நீயா நானா என்று பார்க்கலாம் என்று அமர்ந்துவிட்டேன். முதலில் படிக்க முடியாமைக்கு காரணம் ஆழி சூழ் உலகை படித்த கையோடு இதை எடுத்ததுதான். அதே நினைவில் இதை படிக்க முற்பட்டது, கதைக்கு உள்ளே நுழைய விடாமல் அடித்துவிட்டது.

ஆழி சூழ் உலகு, பரதவர்களின் கதை. இதுவும் அதேதான் ஆனால் வேறு வகை. பரதவர்கள் மீன் பிடித்தொழிலுடன், தோணித்தொழிலும் உள்ளார்கள். அவர்களின் வாழ்க்கையோடு, கொற்கையின் சரித்திரத்தை சொல்லுவதே இக்கதை. சுமார் 70 வருடக்கதை. 

கதை யாரையும் மையமாக கொண்டு அமைந்ததல்ல. கொற்கை நகரை அச்சாக கொண்டது. கொற்கை நகரின் மாற்றங்களே கதை. கொஞ்சம் தப்பினாலும் தூர்தர்ஷன் டாக்குமெண்டரி மாதிரி ஆகியிருக்கும். ஜோ.டி. குருஸின் திறமையால் சுவாரஸ்யமாகியுள்ளது. சில இடங்களில் தொய்வுண்டாகிறது, அலுப்பும் தட்டுகின்றது. நல்லவேளை அம்மாதிரியான பக்கங்கள் அதிகமில்லை.