27 நவம்பர் 2013

புலிநகக் கொன்றை - பி.ஏ.கிருஷ்ணன்

ஓரு குடும்பத்தின் ஐந்து தலைமுறையை சேர்ந்தவர்களை பற்றிய கதை. படிக்கும் போது முதலில் நினைவில் வந்தது அசோகமித்திரனின் யுந்தங்களுக்கிடையில் நாவலும், பாலகுமாரனின் அப்பம் வடை தயிர்சாதமும். பாலகுமாரனின் நாவல் ஒரு குடும்பத்தின் / சமூகத்தின் வெற்றியை பற்றியது, அசோகமித்திரனின் நாவல் முழுக்க முழுக்க குடும்பத்தின் மாறுதல்கள், அதன் விளைவுகள். இக்கதை குடும்பத்தில் அரசியல், சமூகத்தின் தாக்கத்தை பற்றி பேசும் நாவல். ஒரு குடும்பக்கதையாக ஆரம்பித்து ஒரு அரசியல் கதையாக முடிகின்றது. 

பொன்னா என்னும் ஒரு பாட்டியின் இறுதி நாட்களில் ஆரம்பிக்கும் கதை, முன்னும் பின்னும் போகின்றது. பொன்னாதான் மையம். பொன்னாவின் தாத்தாவின் கதையில் ஆரம்பித்து, பொன்னாவின் எள்ளு பேத்தி பிறக்கும் வரை போகின்றது. மிகப்பெரிய நாவலாக போயிருக்க கூடிய அபாயம் இருந்தும், சுருக்கமாக தாவி தாவி செல்கின்றது.

கதை நேர்கோடாக செல்வதில்லை. முன்னும் பின்னும் நடக்கின்றது. பொன்னாவின் தாத்தா ஒரு ஜோசியர், அப்பா ஒரு சமையல்க்காரர், கணவன் ஒரு சாப்பாட்டு ராமன். குடும்பத்தின் ஒரு சாபக்கேடு, அகால, துரித மரணம். பொன்னாவின் பிள்ளைகள் நம்மாழ்வார், பட்சிராஜன், ஆண்டாள். நம்மாழ்வாரின் மனைவி ஒரு குழந்தையை பெற்று இறக்க, ஆழ்வார் எங்கோ போகின்றார். ஆண்டாளின் கணவன் கலியாணம் ஆன வேகத்தில் இறக்கின்றான். ஆண்டாளுக்கு துணை மதுரகவி; நம்மாழ்வாரின் மகன். அவனும் அகாலத்தில் இறக்க, அவனின் மகன் நம்பி, பட்சியின் மகன் திருமலையால் வளர்க்கப்படுகின்றான். நம்பி, திருமலையின் பிள்ளைகள் கண்ணன், ராதா, நம்பியின் மனைவி ரோசா, மகள் இந்து, கண்ணனின் காதலி உமா இவர்கள் கதையில் வரும் இறுதி தலைமுறையினர். நம்பி இறப்பதுடன் கதை முடிகின்றது.

17 நவம்பர் 2013

ஒரு நதியின் மரணம் - மிஷல் தனினோ

முகம்மது பின் துக்ளக்கில் வரும் ஒரு காட்சி
"உங்களுக்கு தமிழ் தெரியும்ன்னு சரித்திரத்துல இல்லையே"
"உங்கள் சரித்திரம் எல்லாம் பேத்தல்"
"எங்க பசங்க படிக்கின்றதெல்லாம் பேத்தலா"
"அது உங்கள் பிள்ளைகளை பார்த்தாலே தெரியுமே"

சரித்திரம் என்பது அன்றைய தேதிக்கு கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு புனையப்படுவது. ஒரு விஷயத்தை அறிந்து கொள்ள பல வழிமுறைகள் உண்டு என்பார்கள். நேரில் பார்ப்பது, அனுமானிப்பது என்று பல வழிகள். சரித்திரத்தில் பாதி அனுமானம்தான். கல்வெட்டுகள் மட்டுமே ஒரளவு நம்பகமானது என எண்ணலாம், ஆனால் அக்கல்வெட்டுகள் இன்றைய ஆட்சியாளர்கள் தம் சாதனைகளை அடித்து விடுவது போல இருந்திருந்தால்? புலவர்களின் பாடல்கள் என்பது, இன்றைய சினிமாக்காரர்கள் முதல்வர்களை பற்றி பேசுவதை போல இருந்திருந்தால்? சரித்திரம் என்பது இது போன்று ஒன்றிரண்டு விஷயங்களை கொண்டு அறியப்படுவதில்லையே? அதே போல் முழுமையான ஆதாரங்கள் இல்லை என்பதால் மட்டும் ஒரு விஷயம் நடக்கவில்லை என்றும் கூறமுடியாது.

நமது சரித்திரம் என்பது முழுக்க முழுக்க ஆங்கிலேயர்களால் பல உள் நோக்கங்களை கொண்டு எழுதப்பட்டது. அது இங்குள்ள பலரின் பிழைப்புக்கு வசதியாக இருந்ததால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது.

அன்றைய தேதிக்கு சரித்திரம் உண்மை, நாளை அது மாறலாம். பள்ளியில் அனைவரும் படித்த ஒரு விஷயம் ஆரிய படையெடுப்பு. ஆரியர்கள் கைபர் போல கணவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தனர் என்பது. பின்னர் படையெடுப்பு ஆரியர் இடப்பெயர்வாகியது. நாளை என்னவாகும் யாருக்கு தெரியும்.

சரஸ்வதி நமது புராணங்களிலும், வேதங்களிலும், இதிகாசங்களிலும் போற்றப்படும் நதி. திரிவேணி சங்கமத்தில் கங்கையுடனும் யமுனையுடனும் கண்ணிற்கு தெரியாமல் கலக்கும் நதி என்று நம்பப்படும் சரஸ்வதியின் சரித்திரத்தை பற்றிய புத்தகம்.

09 நவம்பர் 2013

கலங்கிய நதி - பி. ஏ. கிருஷ்ணன்

கலங்கிய நதி. பி. ஏ கிருஷ்ணனின் இரண்டாவது 'தமிழ்' நாவல். ஆங்கிலத்தில் மட்டி ரிவர் என்ற பெயரில் எழுதப்பட்டு, அவரே மீண்டும் தமிழில் எழுதிய கதை. அஸ்ஸாம் மாநிலத்தில் கடத்தப்பட்ட ஒருவனை மீட்க செல்லும் ஒருவனின் கதை . சினிமா மாதிரி காட்டிற்குள் தலையில் டார்ச் லைட் அடித்துக் கொண்டு சென்று அல்ல. இங்கு கடத்தல் என்பது ஒரு சின்ன முடிச்சு. அதை சுற்றி ஏகப்பட்ட முடிச்சுகள். அனைத்திற்கும் மேலே இப்புத்தகம் பேசுவது அதிகாரத்தை பற்றி, நமது அரசியலை பற்றி, அரசாங்கத்தை பற்றி, அதிகாரிகளை பற்றி.

முதலில் கவர்ந்தது கதை சொல்லும் முறை. கதையின் நாயகனான ரமேஷ் சந்திரன் ஒரு நாவல் எழுதுகின்றான், அதை அவன் நண்பர்களுக்கு படிக்க அனுப்புகின்றான். அவர்களின் பதில், அவன் மனைவியின் பதில். இப்புத்தகமே ஏதோ ஒரு உண்மை சம்பவத்தி அடிப்படையில் எழுதப்பட்டதோ என்னவோ? ரமேஷ் சந்திரன் கடத்தலை பற்றி எழுதுகின்றான். உண்மை சம்வத்தை கொஞ்சம் மாற்றி அவன் எழுதுகின்றான். உண்மையில் நடந்தது என்ன என்பதை அவன் மனைவி, நாவலை பற்றி பேசும் போது கூறுகின்றாள். சந்திரன் உண்மை என்று நம்பியதை அப்படியே எழுத, அதன் பின்னால் இருந்த உண்மையான உண்மையை மனைவி கூறுகின்றாள். குழப்பமாக இருப்பது போல தோன்றினாலும், படிக்கும் போது ஒன்றும் தோன்றவில்லை.

கடத்தல்தான் மைய இழை போல தோன்றினாலும், அதைச் சுற்றி பல கதைகள். அஸ்ஸாமில் நடக்கும் தீவிரவாதம், கம்யூனிசம், அஸ்ஸாம் பூர்வீக குடிகளுக்கும் பங்களாதேஷ் முஸ்லீம்களுக்குமான பிரச்சினை, காந்தி, சந்திரனின் சொந்த வாழ்க்கை, அரசாங்க திட்டங்களில் நடக்கும் முறைகேடுகள் என பல விஷயங்களை தொட்டு செல்கின்றது. சந்திரன் கம்யூனிசத்தால் ஈர்க்கப்பட்டு மெதுவாக காந்தியை வந்தடைகின்றான். அதுதான் கதையின் உச்சம்.

01 நவம்பர் 2013

ஒரு பார்வையில் சென்னை நகரம் - அசோகமித்திரன்

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

சென்னை எனக்கு பிடிக்காத நகரம். படிப்பிற்காகவும், வேலைக்காகவும் அங்கு சுமார் 2.5 ஆண்டுகள் இருந்தேன். இப்போது மாமனார் ஊர் வேறு ஆகிவிட்டது. முழுமுதல் காரணம் சென்னையின் வெப்பம் (இரண்டு வரிகளுக்கு நடுவில் ஒரு முற்றுப்புள்ளி உள்ளது, சேர்த்து படித்துவிட வேண்டாம்) . என்னுடைய ஊர் மலையடிவாரம். வருடத்தில் மூன்று மாதங்கள் கடும் வெயில் இருந்தாலும், வெக்கை தெரியாது. மற்ற மாதங்களில் சாரல் அல்லது குறைவான வெயில். அதை விட்டு சென்னையில் ஒரு அடுக்குமாடியில் ஒரு வீட்டில், புழுக்கத்தில் தங்குவது ஒரு தண்டனைதான். அடுத்தது அந்த நெரிசல், அவசரம். மரங்களை பார்ப்பது என்பதே அரிதான ஒரு விஷயமாகிப் போன அவலம். 

சிலருக்கு சென்னை சொர்க்கலோகம். பா.ராவிற்கு சென்னை சத்தம் ஒரு பாதுகாப்பை தருகின்றது. என் பாதுகாப்பிற்கு இப்பொதைக்கு பெங்களூரு சத்தமும், எங்களூரின் அமைதியான சத்தமுமே போதுமானதாக இருக்கின்றது. இனி தலைப்பிற்கு சம்பந்தமாக :

அசோகமித்திரன் ஒரு சென்னைவாசி. ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்து, பல ஆண்டுகளாக சென்னையில் வாழ்ந்துவருபவர். ஒரு காலத்திய சென்னையை பற்றிய ஒரு சித்திரம் இப்புத்தகம். சென்னையின் பல பகுதிகளை பற்றிய சின்ன சின்ன குறிப்புகள். அக்காலத்தில் எப்படி இருந்தது,எப்படி மாறியுள்ளது என்பதை அவருக்கே உரிய நடையில் எழுதியுள்ளார்.

தகவல்களை திரட்டுவது எளிது, அதை எழுதிவைப்பதும் எளிது. வெறும் தகவல்கள் என்பது வாய்ப்பாடு மாதிரி. அதை சுவாரஸ்யமாக்குவதுதான் திறமை. பாடபுத்தகத்தில் இருக்க கூடிய தகவல்களை, சுவாரஸ்யமான கட்டுரையாக்குவது எப்படி என்பதை இப்புத்தகத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். "எப்படி" என்பதை விட, அது சாத்தியம் என்பதுதான் அறிந்து கொள்ள முடிவது. எப்படி என்று தெரிந்தால், அசோகமித்திரனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?