23 அக்டோபர் 2013

மரப்பசு - தி. ஜானகிராமன்

மரப்பசு. தலைப்பை பார்த்தவுடன் என்ன மாதிரியான கதை என்று யூகிக்க முடியாமல் தி. ஜானகிராமன் என்ற பெயரை பார்த்து வாங்கியது. மோகமுள்ளை பற்றி கேள்விபட்டு அதை தேடி அது இல்லாததால் இதை வாங்க நேர்ந்தது. அதோடு சற்று விலை குறைவாகவும் இருந்தது. இது நான் படித்த தி.ஜாவின் முதல் புத்தகம். வழக்கமான தி. ஜாவின் தஞ்சாவூர் பிண்ணணியில் ஆரம்பிக்கும் கதை எங்கெங்கோ போகின்றது.

அம்மிணி - கோபாலி. அம்மிணி ஒரு கல்லூரியில் படிக்கும் பெண், கோபாலி ஒரு பெரிய பாடகர். கோபாலியிடம் ஒரு தேங்காய் மூடி கச்சேரிக்காக வரும் அம்மிணியை கோபாலி மடக்கி போடுகின்றார். இது வரை ஏதோ ஒரு வகையில் கோப்பாக சென்ற கதை பின் தறிகெட்டு பாய்கின்றது. பார்ப்பவர்களை எல்லாம் தொட்டு பேச விரும்பும் அம்மிணி, அவளின் வெளிநாட்டு பயணம், அங்கு விளையாடும் விபச்சார விளையாட்டு, சந்திக்கும் ஒரு போர்வீரன், கோபாலியின் உறவினன், வேலைக்காரி. என்ன சொல்ல விரும்புகின்றார் என்பதே குழப்பம்தான். கடைசியில் தலை வெள்ளையாய் போய் அமர்கின்றாள். 

அக்கால கட்டத்தில் ஒரு பெரிய அதிர்ச்சியை தந்திருக்கலாம், ஒரு வேளை அதுதான் தி.ஜாவின் விருப்பமோ என்னவோ? கதையை இழுத்து பிடித்து படிக்க வைப்பது தி ஜாவின் எழுத்து நடைதான். சிலுசிலுப்பான அந்த நடைதான் கதையை படிக்க வைக்கின்றது. நான் படித்த தி.ஜாவின் முதல் கதை என்பதால் முதல் முறை படிக்கும் போது என்றாக இருந்தது, நான் படித்துவந்த மற்ற நடையிலிருந்து மாறுபட்ட நடை, வித்தியாசமான பாத்திரங்கள், உரையாடல்களில் கதையை நகர்த்தும் பாணி எல்லாம் மிகவும் கவர்ந்தது மற்ற புத்தகங்களையும் வாங்க தூண்டியது. மோகமுள்ளையும், அம்மா வந்தாளையும், அவரின் சிறுகதைகளையும் படித்த பின் இது அவரின் இரண்டாம் வரிசைக் கதைகளில்தான் சேர்க்க தோன்றுகின்றது.

நான் எழுத நினைப்பதை ஏற்கனவே ஆர்.வி எழுதிவைத்துவிட்டார் இங்கு.

2 கருத்துகள்:

  1. மோகமுள், அம்மா வந்தாள், செம்பருத்தி தவிர தி.ஜாவின் பிற நாவல்கள் பொருட்படுத்தத் தக்கது அல்ல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செம்பருத்து கூட ஒரு மாற்று கம்மிதான். எப்படி முடிப்பது என்ற குழப்பத்தில் சிக்கியது போல தோன்றுகின்றது. அவரது மற்ற நாவலகளை படித்ததில்லை.

      நீக்கு