25 செப்டம்பர் 2013

பிரிவோம் சந்திப்போம் - சுஜாதா

விகடனில் வந்த தொடர்கதை. அந்த காலத்தில் பலரையும் கவர்ந்த கதை. ஆனந்த தாண்டவம் என்ற பெயரில் சினிமாவாகவும் வந்திருக்கின்றது.

மதுமிதா, ரகுபதி, ரத்னா, ராதா கிஷண். இவர்களை மையமாக வைத்து ஓடும் கதை. ரகுபதிக்கு நிச்சயம் செய்யப்பட்ட மதுமிதாவை புயல் போல கடத்திக்கொண்டு அமெரிக்கா போகும் ராதாகிஷண். அந்த தோல்வியினால் தூண்டப்பட்டு படிக்க அமெரிக்கா போகும் ரகுபதி, அங்கு அமெரிக்காவால் ஜீரணம் செய்யப்பட்ட மதுமிதாவை மீண்டும் சந்திக்கின்றான். மதுமிதாவால் அறிமுகம் செய்யப்பட்ட ரத்னாவை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்யும் போது, மதுமிதாவின் மறு பிரவேசம். கடைசியில் அமெரிக்கா மதுமிதாவை ஒரு பெட்டியில் அடக்கி இந்தியாவிற்கு அனுப்பி வைக்கின்றது.

கதை ஒரு சாதாரண கதை. அதை சொல்லும் விதத்தில்தான் கதையின் முழு வெற்றியும் அடங்கியுள்ளது. சுஜாதாவின் கதை சொல்லும் திறன் கதைக்குள் நம்மை இழுக்கின்றது. அழகான வர்ணனை, சின்ன ட்விஸ்டுகள், சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள், சுவாரஸ்யமான சம்பவங்கள் என்று அடுத்தடுத்து இழுத்து கொண்டு போய்விடுகின்றார். முதல்பாகத்தில் பாபநாச சிலுசிலுப்பில் இருக்கும் கதை, அடுத்த பகுதியில் அமெரிக்க வேகத்தில் பறக்கின்றது.

அமெரிக்காவை பற்றிய சின்ன சின்ன குறிப்புகள், கதையை விட்டு துண்டாக தெரியாமல் ஒட்டியே தந்துள்ளது அவரது புத்திசாலித்தனம். வலிய புகுத்தப்பட்டதாக இல்லை. அனைத்தையும் விட கதையை படிக்கும் போது நம்முள் அதை ஒரு படமாக ஓட்டி பார்ப்பது போல இருப்பதுதான் சிறப்பு. வழவழ வர்ணனைகள் இல்லை, ஒன்றிரண்டு வரிகளில் ஒரு காட்சியை முழுப்பரிமாணத்துடன் சித்தரிப்பதில் சுஜாதா மாஸ்டர்.

இந்த மதுமிதா பலருக்கு பிடித்த பாத்திரம் போல, எனக்கு என்னவோ பிடிக்கவில்லை. என்னடா சரியான லூசு போல என்றுதான் தோன்றுகின்றது. ரகுபதியும் சரியான சடைப் பையன் என்றுதான் தோன்றுகின்றது.

அமெரிக்க வாழ்க்கை எதை எதை இழக்க வைக்கின்றது என்று காட்டுகின்றார். உண்மையில் அப்படித்தானா என்று தெரியாது. ஆனால் நம்மவர்கள் அமெரிக்கா போனாலும் அங்கும் இந்திய வாழ்க்கையைத்தான் வாழ விரும்புவார்கள். அவர்களுக்கு இதை விடவும் மனம் வராது, அதை விடவும் மனம் வராது.

காஸினோ பற்றி படிக்கும் போது, தென்னாப்பிரிக்காவில் நான் பார்த்த கஸினோ நினைவில் வந்தது. அது ஒரு போதைதான், நான் அங்கு நமது ஊர் மதிப்பில் ஒரு 1000 விட்டேன். கதையில் வருவது போல ஏகப்பட்ட மாமிகள் ஆடிக்கொண்டிருந்ததையும் பார்த்தேன். ஒரு தமிழ் பெண் சீட்டாட்ட டேபிளில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தாள், பக்கத்தில் அவளது கணவன் அதை பெருமையாக பார்த்துக் கொண்டிருந்தான். சாதரணர்களின் கண்ணில் படும் இது போன்ற நிகழ்வுகள், எழுத்தாளர்களின் கண்ணில் பட்டு வேறு விதமாக பேப்பரில் வருகின்றது.

கதை கடைசியில் கொஞ்சம் நாடகத்தனமாக போகின்றது. கிளைமாக்ஸுக்கு பின்னால் இன்னொரு கிளைமாக்ஸ். திரைப்படத்தில் இதை கொஞ்சம் மாற்றி இருந்தார்கள். கடைசிக்காட்சி மட்டும் பார்த்தேன். (ஹீரோயின்கள் இருவரும் ஒரளவு பொருத்தம்தான்).

ரகுவின் அப்பா கேரக்டர், நல்ல வடிவமைப்பு. சுஜாதா கதைகளில் கணேஷும் வசந்தும் வெவ்வேறு வடிவங்களில் வருவார்கள். கணேஷின் ஒரு வடிவம் அந்த அப்பா. வசந்த் வேறு கேரக்டரில் வந்து எட்டி பார்க்கின்றான்.

தொடர்கதைக்காகவும் (கடைசி அந்தியாய ட்விஸ்டுகள்) விகடனுக்காகவும் (கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட மதுமிதா) செய்யப்பட்ட சிலவற்றை ஒதுக்கிவிட்டால் மிக சிறந்த கதை. (இலக்கியம் என்று ஜல்லியடிப்பவர்கள் கொஞ்சம் எட்டி நிற்க)  சில கதைகள் இரண்டாம் முறை படிக்கும் போது போரடிக்கும், ஆனால் இது பல முறை படித்தாலும் கட்டிப் போடுகின்றது. சுஜாதா ரசிகர்களுக்கு மறக்க முடியாத கதை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக