17 பிப்ரவரி 2013

ராமானுஜர் - இந்திரா பார்த்தசாரதி

தமிழகத்தை பொறுத்தவரை சீர்திருத்தவாதி என்றவுடன் அனைவரும் கூறுவது ஈ.வெ.ராவைத்தான். அதற்கு முன்னால் செயல்பட்ட அனைவரும் மிகச்சுலபமாக மறக்க (மறக்கடிக்கப்) பட்டுள்ளனர். ராமானுஜர் அப்படிப்பட்ட மறக்கடிக்கப்பட்ட சீர்திருத்தவாதி. ராமானுஜர் விசிஷ்டாத்தைவத்தை நிலைநிறுத்தியவர், வைஷ்ணவ சம்பிராதயத்தை வழிமுறைப் படுத்தியவர் என்ற அளவிலேயே நினைவில் நிறுத்தப்படுகின்றார். மறக்கப்பட்டது அவரின் சீர்திருத்தக் கருத்துக்கள். 


எனக்கும் சோவின் புத்தகத்தை படிக்கும்வரை ராமானுஜரைத் பற்றி அதிகம் தெரியாது. எங்கோ அவர் கோபுரத்தில் ஏறி கூறிய கதையை படித்த நினைவு. அவர் அவ்வாறு கூறியதின் பின்னால் உள்ள தைரியம், அதன் நோக்கம் எல்லாம் தெரியாது. அவர் செய்த சீர்திருத்தங்கள், அனைத்து மக்களையும் அரவணைத்த பண்பு, ஆழ்வார் பாசுரங்களை பரப்பியது எல்லாம் தெரிந்து கொண்டது வெகு பின்னால்.


ராமானுஜர் இந்திரா பார்த்தசாரதி எழுதியுள்ள ஒரு நாடகம். ஆனால் இது நாடகமல்ல. ஒரு கதை வடிவில் ராமனுஜரைப் பற்றி எழுதியுள்ளார். கதையுமல்ல ஒரு வாழ்க்கை குறிப்பு. அவரின் வாழ்வில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களை கோர்த்து எழுதியுள்ளார்.

முதலில் ஆழ்வார்களைப் பற்றியும் ராமானுஜருக்கு முன்னால் இருந்த வைஷ்ணவ ஆச்சார்யகளைப் பற்றிய ஒரு சிறு குறிப்புடன் ஆரம்பிக்கின்றார். 1017ல் ஸ்ரீபெரும்புதூரில் ஆளவந்தாரின் சீடர் திருமலை நம்பியின் சகோதரிக்கு பிறந்தவர் ராமானுஜர். ராமானுஜன் என்றால் ராமனுக்கு சகோதரன் என்று அர்த்தம். யாதவபிராகசரிடம் கருத்துமாறுபாடு கொண்டு அவரின் சதியிலிருந்து தப்பி, திருக்கச்சி நம்பிகளிடம் மாணவனாக இருக்கும் ராமானுஜரை ஆளவந்தார் சந்திக்க ஆசைப்படுகின்றார். ஆனால் ராமானுஜர் வரும் முன் அவர் மறைகின்றார்.

ராமானுஜர் வாழ்வில் முக்கிய சம்பவம் இது, ஆளவந்தாரின் ஆசையை நிறைவேற்ற பெரியநம்பிகளிடமும், திருக்கச்சி நம்பிகளிடமும் கல்வியை தொடர்கின்றார். திருக்கச்சி நம்பி பிராமணர் அல்லர், அதனால் அவரிடம் தீண்டாமை பாராட்டிய மனைவியை விட்டு துறவறம் மேற்கொள்கின்றார்.

துறவறம் கொண்டபின்பே அவரின் சீர்திருத்தங்கள் பெரிதாக ஆரம்பிக்கின்றன. கோவில்களில் வழிபாட்டு முறைகளை சரிபடுத்தி அதற்கு சட்டதிட்டங்களை செய்து வைத்தார். திருவிழாக்கள், உற்சவங்களை நெறிப்படுத்து வைஷ்ணவ இயக்கத்தை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்கும் பணியை செய்தார். மக்களிடமும் வைஷ்ணவம் பரவ ஆரம்பித்தது.

திருக்கோஷ்டியூர் நம்பி தனக்கு சொன்ன ரகசியத்தை கோபுரத்தில் நின்று ஊரறிய சொன்னவர், அதனால் தனக்கு நரகம் கிடைத்தாலும் பராவாயில்லை, பலருக்கு அது நற்கதி தரும் என்ற எண்ணம் அவரை குருவிற்கு கொடுத்த வாக்கையும் மீற வைத்தது. வாக்கு தவறுவது என்பது பாபம் என்றாலும் பிறருக்காக அதை ஏற்கவும் துணிந்தார்.

சாதிவேறுபாடின்றி அனைத்து மக்களையும் வைஷ்ணவர்களாக்கினார். காஷ்மீரம் வரை சென்று வந்தவர். சோழனால வெளியேற்றப்பட்ட கோவிந்தராஜரை திருப்பதியில் இருத்தி, திருமலையை மீண்டும் வைஷ்ணவர்களிடம் சேர்பித்தவர். பிரம்மசூத்திரத்திற்கு உரை எழுதியவர், ஆழ்வார்களின் பாடலை மக்களிடம் பரப்ப முக்கியகாரணமாக இருந்தவர். தனது 120 வது வயதில் மறைந்தார்.


இ.பா வின் கிருஷ்ணா கிருஷ்ணா படித்து, அவரின் சில புத்தகங்கள் வாங்கி முழுவதும் படிக்க முடியாமல் வைத்திருக்கின்றேன். அவரது கதாபாத்திரங்கள் முழுவதும் தொண தொண வென பேசிக்கொண்டே இருக்கின்றன, அதுவும் ஏகப்பட்ட தத்துவங்கள், சிந்தாந்தங்கள். யாருடா பெரிய மண்டையாட்டம் பேசிட்டே இருக்கான் என்ற எரிச்சல் வந்து மூடி வைத்து விட்டேன். 


இது சிறுவர்களும் படிக்கும் அளவிற்கு அழகாக உள்ளது. சுருக்கமாகவும் அதே சமயம் சாரம் குறையாமலும் ராமானுஜரை பற்றி விளக்கியிருக்கின்றார். கடைசியில் அவரது தத்துவங்களைப் பற்றிய குறிப்பும் உள்ளது. ராமானுஜருக்கு பின் வைஷ்ணவம் எப்படி இரண்டாக பிரிந்தது, வடகலை தென்கலை பிரிவு எப்படி வந்தது என்பதை பற்றிய சிறு குறிப்பு.

கடைசி பகுதியாக அவரது சிந்தாத்தின் சாரம். வெகு எளிமையாக அவரது தத்துவத்தை விளக்கியுள்ளார். 

அட்டைப் பட ராமானுஜர் வடகலை நாமம் தரித்துள்ளார். அக்காலத்தில் அதுதான் வழக்கமோ? ஆனால் திருப்பதி பெருமாள் தென்கலை நாமம் தரித்துள்ளாரே. குழப்பம்.

இப்புத்தகம் ராமானுஜ்ரைப் பற்றி முழு சித்திரத்தை அறிந்து கொள்ள  உதவுமா என்பது சந்தேகம். ஆனால் அவரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய ஆர்வத்தை தூண்டும். ராமானுஜரைப் பற்றிய நல்ல அறிமுகம் இந்நூல். குழந்தைகளுக்கு அறிமுகப் படுத்துங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக