03 ஜனவரி 2013

அழிவற்றது - அசோகமித்திரன்

அசோகமித்திரனின் நாவல்களை விரட்டி விரட்டி படித்தபின் அவரது சிறுகதைகள் மேல் கவனம் திரும்பியது.  ஒரு எழுத்தாளனின் விஸ்வரூபம் அவரது சிறுகதைகளில் தான் தெரியும். தி. ஜா, சுஜாதா இவர்கள் இருவரின் சிறுகதைகள் அவர்களது நாவலைவிட அதிகம் சிறபபானதாக எனக்கு தோன்றுகின்றது.

அசோகமித்திரனின் அனைத்து சிறுகதைகளின் தொகுப்பை தேடித்தேடி களைத்துப் போனேன். மதுரையில் அசோகமித்திரனின் கதை என்றால் விற்பனைப் பெண் முழிக்கின்றார். பெங்களூர் புத்தக கண்காட்சியிலும் தேடினேன் இல்லை. காலச்சுவடில் அவரது சமீபத்திய சிறுகதைகள் என்று இரண்டு தொகுப்பு பார்த்தேன். வாங்கும் முன் சந்தேகம் வேறு, அண்ணே இது பெரிய தொகுப்பில் உள்ள கதைகளா? இல்லை புத்தம் புதுசா என்று கேட்டேன். சார் அப்படி எல்லாம் வராது, இது எல்லாம் புதிது என்று கூறி அனுப்பிவைத்தார். முழுத் தொகுப்பை பார்த்தால் தான் தெரியும்.

அவரின் ஒற்றன் நாவலே ஒரு சிறுகதை தொகுப்பு போலத்தான். நாவல்களிலேயே சுருங்கச் சொல்லி விரையும் அவரின் சிறுகதைகள் அதைப் போலவே கச்சிதம்.

ஒரு சில கதைகளைப் படித்தால் இது என்ன கதை என்று தோன்றாமல் இல்லை. இதை எழுத என்ன அவசியம், இதனால் நீவிர் சொல்ல வந்த சேதி என்ன என்று கேட்கத் தோன்றுகின்றது. சில கதைகள் குழந்தைகளுக்கான கதையாகவும் உள்ளது, நன்னெறி வகுப்புகளுக்கான கதைகள். ஒரு சில கதைகள் கதை என்று கூற முடியாதபடி ஒரு சம்பவத்தை கூறிச் செல்கின்றது முடிச்சுகளோ சிக்கல்களோ இல்லாமல் வாழ்வின் ஒரு பகுதியை முழுமையாக பார்க்கும் அனுபவம். சில கட்டுரையாக போக வேண்டியது, அவரின் திறமையால் கதையாக வாழ்வு பெற்றுள்ளது.

அழிவற்றது என்பது பவுதீகத்தின் ஒரு விதி. "ஆற்றல் அழிவற்றது".


அதை தலைப்பாக்கியிருக்கின்றார். அதில் உள்ள கதைகளைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம், என் கருத்துக்கள். விமர்சனமோ ஆராய்ச்சியோ அல்ல அவர் எதைச் சொல்ல வந்தார் என்பதையெல்லாம் விளக்க முற்படவில்லை (முழுவதும் புரிந்தால் தானே?).

நாவலையாவது விவரித்து பக்கம் பக்கமாக எழுத முடியும் சிறுகதைகளை அலசி ஆராயும் அளவிற்கு என் மூளை வேலை செய்வதில்லை. ஒரு கதையை படித்துவிட்டு அது என்ன சொல்ல வருகின்றது என்று ஆராய்ந்து, ஆசிரியருக்கே ஆச்சரியமளிக்கும் பல பரிமாணங்களை கண்டறிய என்னால் முடிவதில்லை. அது அளிக்கும் அனுபவம் எனக்கு மட்டும், அவ்வளவுதான். அதைக் கூட முழுவதும் எழுதிவிட முடிவதில்லை.

அசோகமித்திரனின் நாவலகளுடன் ஒப்பிட்டால் இப்புத்தகங்களில் உள்ள கதைகள் கொஞ்சம் சுமார் எனத் தோன்றுகின்றது. நான் அவரின் பழைய சிறுகதைகள் எதையும் படித்ததில்லை, இவை அனைத்தும் சமீபத்திய கதைகள்.

பிடித்த கதைகளுக்கு * 

1. அவரவர் தலையெழுத்து

       கர்ண பரம்பரைக் கதை. ஏற்கனவே கேள்விப்பட்ட கதையின் மாறுபட்ட வடிவம். எருமை மாட்டால்தான் வாழ்வு என பிரம்மனால் எழுதப்பட்ட ஒருவன், தினமும் எருமையை விற்கின்றான். தன்னால் எழுதப்பட்ட விதி பொய்க்காமல் இருக்க, தினமும் ஒரு எருமையை கொண்டு கட்டும் பிரம்மன். இது நான் படித்த வடிவம், இதில் முறை தவறி வாழும் பெண்ணின் விதியை நடத்த, பிரம்மன் முத்துக் குளிக்கின்றான். பிரம்மனின் தலையெழுத்து. கேட்ட கதை கூறும் விதத்தில் புதுமையாக தெரிகின்றது.

2. பழங்கணக்கு

       ஒரு கர்ண பரம்பரைக் கதை. ஜோசியர் தனக்கு பிறக்கும் பிள்ளைகளின் முன் ஜென்மத்தை கணிக்கின்றார். இரண்டு பிள்ளைகள் குடுத்த கடனை வசூலிக்க பிறக்கின்றன. அவை வளர்ந்து கடன் தீர்ந்ததும் இறக்கும் எனத் தெரிந்து உடனே கடனை தீர்த்து அனுப்புகின்றார். மூன்றாவது பிள்ளை கடனைத் தீர்க்க பிறந்தவன் என்பதால, கடனை தீர்க்காமல் வளர்க்கின்றார். விதி கடனைத் தீர்க்கின்றது. நம்பமுடியாத கதைதான், நம்புவதால் என்ன மோசம் நேரிடப் போகின்றது. நம்புவோம்.

3. முக்தி*

        பாவ மலையை கொண்ட அரசனின் பாவத்தை கரைக்க அவன் மீது அபவாதம் வரும்படி நடந்துகொள்ள அரசனை பணிக்கின்றான். அரசனும் அது போலவே, அவன் மகளை தனியாக வளர்த்து, அம்மாளிகைக்கு இரவில் சென்று வருகின்றான். இது ஊராரை அரசன் மீது அவதூறு கூற வைக்கின்றது, அவன் பாவமலையும் கரைகின்றது. கடைசியில் முனிவர் அப்பெண்ணை கண்டு அவர் மனதில் பாவத்தை ஏற்றிக் கொண்டு, அரசனின் மிச்ச பாவத்தையும் போக்குகின்றார். முனிவன் என்றாலும் அவர் மனமும் அழுக்கடையக் கூடும், பாவியானாலும் அவனால் ஒழுக்கமாக இருக்க கூடும்.

4. திருநீலகண்டர்*

      அனைவருக்கும் சிறுவயதில் தீடிரென்று எதன் மீதாவது ஒரு மோகம் வரும். இக்கதையில் வரும் சிறுவனுக்கு திருவோடு மீது மோகம் வருகின்றது. அதற்கு காரணம் திருநீலகண்டர். அது அவனுக்கு வெகு நாள் கழித்து கிடைக்கின்றது. இடைப்பட்ட நிகழ்வுகளை அ.மி அவருக்கே உரித்தான கிண்டல் நடையில் சொல்கின்றார். தி.க காரர்களை போகிற போக்கில் ஒரு கொட்டு கொட்டிவிட்டு செல்கின்றார். துலுக்கப் பேய் பிடித்த அக்கா, அவளிடமிருந்து போய் அத்தானை பிடிக்கும் பேய், அநேக சுவாரஸ்யம்.

5. அப்பாவின் கோபம்*

      வீட்டில் வயதானவர்கள் இருப்பது சிறந்தது என்றாலும், அவர்கள் படுத்த படுக்கையானால் அது சுற்றி இருப்பவர்களுக்கு சொல்ல முடியாத அவஸ்தை. என் பாட்டி கால் முறிந்து படுத்த படுக்கையாக இருந்த போது, நான் இங்கு பெங்களூரில் இருந்தேன். அம்மாவும் தங்கையும் பார்த்துக் கொண்டார்கள். அவர்களின் அவஸ்தை அப்போது புரியவில்லை. அவர்கள் பாட்டிக்கு சிஷ்ருஷை செய்வதைவிட, பாட்டியின் கோபத்தை சமாளிப்பதுதான் பெரிய விஷயமாகப் போனது. நான் ஊருக்கு போனாலும் அதற்கு பயந்து சீக்கிரமே ஓடி வந்துவிடுவேன், இப்பொது நினைத்தால் வெட்கமாகத்தான் இருக்கின்றது. என் தங்கைக்கு இருந்த தைரியம் அப்போது எனக்கு இல்லை.

இக்கதை எனக்கு அதை நினைவு படுத்துகின்றது. கீழே விழுந்து காலை உடைத்துக் கொண்ட அப்பாவை நினைத்து பயப்படும் மகன். கால் உடைந்த அப்பாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் முன் முதலில் தன் வயிற்றை கவனிக்கும் மகன், கீழே விழுந்த வலியை விட, விழுந்தை நினைத்து கோவிக்கும் தந்தை. பிரசவத்திற்கு சென்ற மனைவியை அதற்கு முன்னரே அழைக்க வேண்டிய நிலையில் அவனுக்கு வரும் பயம் நியாயமானதுதான்.

6. நகல்

        கல்லூரியில் படிக்கும் போது, பெரும்பாலான புத்தகங்கள் ஜெராக்ஸ்தான். அப்போது தேடிதேடி ஜெராக்ஸ் எடுப்போம். படித்தோமா என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம். சமயத்தில் ஒரே புத்தகத்தை இருவர் பிரித்து வைத்துக் கொண்டு பேராசியரை ஏமாற்றுவதும் உண்டு. வெளியே செல்ல அதை ஒளித்து வைத்து விட்டு, வலிய தண்டனை பெற்று சினிமா போவதுமுண்டு. இக்கதை அந்த ஜெராக்ஸ் கதையை நினைவு படுத்தியது. எங்கு முப்பது பைசா, எங்கு இருபந்தைந்து பைசா என்று அலைந்தது நினைவில் வருகின்றது. கல்லூரி மாணவி, ஒரு புத்தகத்தை நகலெடுக்க வருகின்றாள். வருபவளின் மனது எங்கெங்கோ அலைகின்றது. டிபிக்கல் நடுத்தரவர்க்க மனம். அழகாக அந்த மனவோட்டத்தை எழுத்தில் வடித்துள்ளார். கடைசிவரி சாத்தியம்தான்

7. கிணறு*

      ஒரு அமானுஷ்யக்கதை என்றுதான் சொல்ல வேண்டும். தண்ணீரில் கண்டம் என்று பெற்றவளால் எச்சரிக்கப்படும் ஒருவன் போகும் இடம் ராஜஸ்தான் . பாலைவனத்தில் எங்கு தண்ணீர் இருக்கும், அதுவும் உயிரை பறிக்கும் அளவிற்கு என்று எண்ணி போகின்றான். விதி அங்கு தேடி வருகின்றது.  அரண்மனை பற்றிய விவரிப்பு, அவனின் தண்ணீர் பற்றிய பயம், முடிவு என அனைத்தும் துல்லியம்.

8. ஒரு ஹீரோயின் ஒரு ஹீரோ

      சினிமா உலகில் எதுவும் நடக்கும். கோடிஸ்வரன் பிச்சைக்காரனாவான், பிச்சைக்காரன் கோடிஸ்வரானாவன். ஒருவனின் தலையெழ்த்து கண நேரத்தில் மாறும் உலகம். ஹீரோயின் சிபாரிசில் டம்மி ஹீரோவாக்கப்பட்ட பசுபதி, வெறுத்துப் போய் ஊர்ப்பக்கம் போய்ச் சேருகின்றான். இங்கு ஹீரோயின் தொந்தரவில், ஹீரோயின் சாகடிக்கப்பட்டு (படத்தில்தான், சீரியல்களுக்கு முன்னோடி போல), வேறு ஹீரோயினுடன் படம் முன்னேறுகின்றது. ஓடிப் போன ஹீரோவிற்கு வாழ்வு.

9. பிச்சிக்கட்டி

       பிச்சிக்கட்டி என்றால் என்ன? தாரா? எரிந்து போன கேபிளை சரி செய்யும் ஒரு நாள். கேபிளை சரிசெய்து அதில் பிச்சிக்கட்டியை உருக்கி ஊற்றி சரிசெய்வதுதான் கதை. மின்வாரிய அதிகாரிகளின் உரையாடல் கொஞ்சம் கூட செயற்கையில்லாமல், நிஜமாக இருப்பது. மற்றபடி பெரிதாக ஒன்றும் கவரவில்லை. 

10. வீட்டுமனை

       வீடு வாங்குவது என்பது அனைவரின் கனவு. இப்போது விரட்டி விரட்டி, லோன் தந்து, காலையிலும் இரவிலும் நம் வீட்டு வரவேற்பரைகே வந்து சென்னைக்கு மிக அருகில் மதுராந்தகத்தில் மனைவிற்கின்றார்கள். ஆனால் கனவை வெகு விரைவாக கலைக்கும் சக்தி வாழ்க்கைக்கு உண்டு. எதிர்பாராத செலவுகள் எப்போதும் காத்திருக்கும். மனை வாங்குவதை கனவாக வைத்திருக்கும் ராமுலு, அதற்கு லோன் எல்லாம் ஏற்பாடு செய்து வைத்து, கடைசியில் அப்பணத்தை தன் ஜுரத்திற்கு செலவு செய்யும் நிலைக்கு வருகின்றான். அவன் உயிரை திரும்பிக் கொண்டுவந்த அப்பாவுடன் அவன் உறவு அதே பாரமுகத்துடன் தொடர்கின்றது.

11. சிக்கனம்*

       என் முன்னாள் அலுவலகத்தில் மூன்று மாதங்களாக சம்பளம் தராமல் இருநத காரணத்தால் அதிலிருந்து விலகினேன். என் போல் சுமார் 500 பேர் இருக்கலாம். சிலர் எப்படியோ பெற்று விட்டனர். அது என்னால் முடியவில்லை, பலரால் முடியவில்லை. ஏதேதோ முயற்சி செய்தும் ஒன்றும் பெயரவில்லை. இப்போது அதை நினைக்கவே  வேண்டாம் என்றுதான் உள்ளது. நினைத்தால் தோல்வி நினைவிற்கு வரும், தோல்வி இழப்பை நினைவு படுத்தும், பண இழப்பு இன்னும் பல இழப்பை நினைவு படுத்தும். அதை மறந்தால் போதும் என்றாகிவிட்டது. 

இக்கதை அதை மீண்டும் நினைவு படுத்தியது. பல நிதிகளில் ஏமாறும் மக்கள் இன்னும் உள்ளனர். சேமிப்பை தொலைத்துவிட்டு கதறும் மக்கள், சில நாள் கழித்து என்ன ஆகின்றனர். மீண்டும் சேமிக்க ஆரம்பிக்கின்றனர். சிக்கனமாக இருந்து சேர்த்த பணம் போன பின் மீண்டும் சிக்கனமாக இருப்பதுதான் நடுத்தர வர்க்கத்தின் விதி. 

12. சகோதரர்கள்

      மீண்டும் ஒரு லான்ஸர் பாரெக்ஸ். பக்கத்து வீட்டு ஜாபர் அலியின் விருந்தாளி சையது. சந்துருதான் கதாநாயகன். சையது ஜாபர் அலிவீட்டிற்கு வரும் விருந்தாளி, கிரிக்கெட் வீரன். அவனின் கதை.

13. மணவாழ்க்கை

      பெண்ணிற்கு  புகுந்த வீடுதான் அவள் வீடு என்று சொல்லித் தந்து வளர்க்கப்படுகின்றதா? இல்லை நமது இந்தியப் பெண்களுக்கு ஜீன்களிலேயே ஊறிப் போய்விட்டதா? கொடுமைக்கார மாமியார், குழந்தையை கொன்ற கணவனுடன் போய் வாழத் தயாராகும் பெண். // ஒரு குழந்தை போனால் என்ன? இனிமேல் பிறக்காமலா போகப் போகின்றது//

14. அழிவற்றது*

     ஒற்றனின் மற்றுமொரு அந்தியாயம். அயோவா சிட்டியில் சந்தித்த ஒரு எழுத்தாளன். அவருடன் பேச முயற்சித்து தோல்வியடைகின்றார். கடைசியில் அவர் ஊருக்கு கிளம்பும் முன் கே மார்ட்டில் அவ்வெழுத்தாளரின் கோட்டை பார்த்து அவர் இறந்துவிட்டார் என்பதை தெரிந்து கொள்கின்றார். கடைக்காரர் அனைத்தும் அழிவற்றது என்கின்றார், பாவம் அந்த எழுத்தாளர் அழிவற்றவரா இல்லையா என்று தெரியவில்லை

15. முழுநேர வேலை

     வேலை தேடி சென்னைக்கு வரும் ஒரு சிறிய குடும்பத்தின் கதை. சென்னை நகரத்தில் வாழும் ஒரு நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கையை இதைவிட சிறப்பாக கூற முடியாது. வெளியூர்க்காரர்கள் இவ்வாழ்க்கையை ஜீரணிப்பது கடினம்தான். நான் இருந்த மூன்று வருடங்களை இப்போது நினைத்தால், எப்படி இருந்தோம் என்று ஆச்சரியமாகத்தான் இருக்கின்றது.

16. இரு முடிவுகள் உடையது

      ஒரு சாதரண சம்பவம். அ,மி திறமையால் கதையாகியுள்ளது. ஆந்திரா செல்லும் ஒருவன், சூட்கேஸ் சங்கிலியை மறந்துவிட்டதால், இன்னொருவனை அவனது சங்கிலியுடன் தன் பெட்டியை கட்டி வைக்க கேட்டுக் கொள்கின்றான். அடுத்த நாள் காலையில் பெட்டி போயிந்தி. சும்மா கடைசியில், இம்முடிவு பிடிக்காதவர்கள் வைத்துக் கொள்ள இன்னொரு முடிவை தருகின்றார்.  எது உண்மை என்று அவருக்கு எப்படித் தெரியும். சங்கிலி கட்டியவனுக்குத்தான் தெரியும்.

17. அடி

       குற்றவாளியிடமே வந்து குற்றம் செய்தது யார் என்று தெரியாமல் நியாயம் கேட்டாள் என்ன செய்வான். பள்ளியில் குழந்தையை யாரோ அடிக்க, அதற்கு நியாயக் கேட்கப் போகின்றாள் அம்மா. அந்த பிரின்ஸ்பாலின் சமாதான முயற்சி அவரைக் காட்டிக் கொடுக்கின்றது நமக்கு.

அனைத்து கதைகளும் ஒரு ஆரம்பம் ஒரு முடிவு என்று வரையரைக்குள் இல்லை. பிரதானம் ஒரு அனுபவத்தை நமக்குள் கடத்துவது. சிலவற்றை நமது யூகத்திற்கு விடுவது, பல புதிய மனிதர்களை அறிமுகப்படுத்துவது, இப்படியும் ஒர் உலகம் உள்ளது என்று நமக்கு உணர்த்துவதுதான் கதை செய்யும் வேலை. இத் தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும் அவர் சமீபத்தில் எழுதியவை. வெகு சாதரண வார்த்தைகளால், சிறிய வாக்கியத்தால் அனாயசமாக பெரிய விஷயங்களை சொல்லிச் செல்கின்றார். எங்கோ எப்போதோ பார்த்த மனிதர்களை, நமக்கு நடந்த விஷயங்களை வேறு கோணத்தில் பார்க்க வைக்கின்றார்.

அவரின் சிறுகதை உலகத்திற்குள் நுழைந்தவனை ஏமாற்றவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக