18 நவம்பர் 2012

ஜீரோ டிகிரி - சாரு நிவேதிதா

சாரு நிவேதிதாவின் பத்திகளை விகடனில் படித்ததுண்டு. அவரின் தளத்திலும் படிப்பதுண்டு. அவரின் எழுத்து நடை, சொல்வதை மிக எளிமையாக சொல்வதும் எனக்கு பிடிக்கும். உள்ளடக்கம் சில சமயம் எரிச்சலாக இருக்கும், ஆனாலும் சுவாரஸ்யமான நடைக்கு சொந்தக்காரர். சில சிறுகதைகள் மிகச் சிறப்பாக இருக்கும்.

ஜீரோ டிகிரி புத்தகத்தை பலரும் ஆஹோ, ஓஹோ என்று பாராட்டுகின்றார்களே என்று வாங்கினேன். பல முறை படித்து விட்டேன். ஒரு எழவும் புரியவில்லை. இதைப் பாராட்டுபவர்கள் இதைப் பற்றி எழுதுவது அதைவிட குழப்பமாக உள்ளது. //முதலில் படித்தேன் புரியவில்லை சனிகிழமை மட்டும் புரியும், இருவது வயதில் புரியவில்லை, இருபத்திரண்டு வயதில் புரிகின்றது//. கடவுள், இசை, ஆன்மீகம் என அனைத்தையும் அதனுடன் சம்பந்தப்படுத்தி பேசுகின்றனர். அப்புத்கத்தின் ஒவ்வொரு அந்தியாயத்திற்கும் பிண்ணனி இசை அமைக்கின்றனர். இது ஏதோ பல்கலை கழகத்தில் பாடபுத்தகமாக உள்ளாதாம்!

நான் லீனியர் புத்தகம் என்பதால் நாமும் நான் லீனியராக படிக்க வேண்டும் போல என்று, கையில் கிடைத்த பக்கங்கள், கடைசி அந்தியாயத்திலிருந்து முதல் அந்தியாயம் வரை (நம்புங்கள், நிஜமாகவே செய்து பார்த்தேன்) படித்து பார்த்தாகி விட்டது. அப்படி ஏன் படிக்க வேண்டும் என்று கேட்பவர்களுக்கு; என் மூளைக்கு இதை புரிந்து கொள்ளும் சக்தி இல்லையா என்று எனக்கு சந்தேகம வந்து விட்டது. எனக்கான சவாலாக தோன்றியது. கடைசியில் தோல்வியை ஒத்துக் கொள்ள வேண்டிய நிலைதான் வந்துள்ளது.

மெமெண்டோ பாணியில் படிக்க வேண்டுமோ என்னவோ அது ஒன்றுதான் பாக்கி.

இப்புத்தகத்தை பற்றி "கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்" என்னும் கதைதான். அனுபவித்தால்தான் புரியும் என்கின்றனர்.

ஒழுக்கமானவர்களுக்குதான் ராஜாவின் உடை கண்ணிற்கு தெரியும் என்பது போல ஆகிறதோ என்ற சந்தேகம். ஜெயமோகன் இதை தமிழின் முக்கிய முயற்சி என்கின்றார். அவரின் விஷ்ணுபுரம் கூட என்றாவது ஒரு நாள் முழுவதும் புரியும் என்ற நம்பிக்கை உள்ளது, ஆனால் இது .....

உண்மையில் இதை யாராவது விளக்க முடியுமா?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக