08 அக்டோபர் 2012

ஜனகணமன - மாலன்

காந்தியைப் பற்றி மக்களின் பார்வை பலவித காரணங்களைப்  பொறுத்து மாறுகின்றது. சிலருக்கு மாபெரும் மனிதர், வழிகாட்டி, சிறந்த அரசியல்வாதி, நல்ல தலைவர், சுதந்திரம் பெற்றுத் தந்தவர், மக்களிடம் அஹிம்சையை பரப்பியவர், எளிமையானவர் என்று அவரைப் பற்றி போற்றுவோரும் உள்ளனர், அதே சமயம் அவர் இந்து மதவாதி, இந்துக்களுக்கு துரோகம் செய்தவர், இஸ்லாமியர்கள் மீது கரிசனம் காட்டியவர், தலித்துகளுக்கு எதிரானவர், தன் முடிவை மற்றவர்கள் மீது திணித்தவர், உண்ணாவிரதம் என்ற பெயரில் மற்றவர்களை மிரட்டியவர் என்று கூறுவோரும் உள்ளனர். பெரும்பாலான கருத்துக்கள் மற்றவர்களால் உருவாக்கப்பட்டு ஒருவர் மீது திணிக்கப்பட்டதாகத்தான் இருக்கும்.

இது போன்ற பல விமர்சனங்களே அவர் ஒரு பெரிய ஆள் என்பதற்கு போதுமான சாட்சி. காந்திமீது பலவித விமர்சனங்கள் இருந்தாலும் அவரை யாரும் ஒரு மோசமான மனிதர் என்று கூறியதில்லை. ஆனால் இன்றைய சிந்தந்தப்படி ஒருவரின் கருத்து பிடிக்காவிட்டால் அவரையே பிடிக்காமல் போகவேண்டுமே, அதனால் பல இளைஞர்களுக்கு அவர் மோசமானவர். 


காந்தியைப் பற்றி பேசும்போது யாராலும் கோட்சேயை பற்றி பேசாமல் / நினைக்காமல் இருக்க முடியாது. காந்தியின் வாழ்வின் தவிர்க்க முடியாத ஒரு அந்தியாயம்; இறுதி அந்தியாயம். காந்தியின் மீது மிகுந்த மரியாதை கொண்டு, அவரின் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்ட கோட்சே அவரைக் கொல்ல என்ன காரணம்?

ஜனகணமன அந்த காரணத்தை ஆராய முற்படுகின்றது.

"கோட்சே என்கிற மனிதனை ரத்தமும் சதையும் உயிரும் உணர்வுமாக இந்நாவல் படம்பிடிக்கும் அளவுக்கு வேறு எந்தப் படைப்பும் செய்த்ததில்லை" என்ற வரிகளுடன் வரும் ஜனகணமன நாவல், முழுவதும் படம் பிடித்திருக்கின்றதா என்றால் இல்லை. ஆனால் காந்தியின் கொலைச் சம்பவத்தை முழுவதும் ஆராய்ந்து அதை ஒரு நாவலாக எழுதியுள்ளார் மாலன். கோட்சேயின் நியாயத்தை ஒரு வரியில் கூறிவிட்டு செல்கின்றார். காந்தி பாகிஸ்தானுக்கு தரவேண்டிய ரூபாயை தரச்சொல்லி உண்ணாவிரதம் இருக்க ஆரம்பிக்கின்றார், அதனால் வெறுப்பின் உச்சத்திற்கு சென்ற கோட்சே, ஆப்தே, மதன்லால், கர்க்கரே முதலியவர்களின் கூட்டு சதி.

ஒரே ஒரு கற்பனை கதாபாத்திரம் ரமணன், மற்ற அனைவரும் உண்மையானவர்கள். ஒரு வரலாற்று சம்பவத்தை விறுவிறுப்பான கதையாக்கியதில் வெற்றி பெற்றுள்ளார். ஒரு மணி நேரத்தில் படித்து முடித்து விடக்கூடிய கதைதான். அவரின் முன்னுரையில் அனைத்து சம்பவங்களும் சரிபார்க்கபட்டவை, சம்பாஷணைகள் மட்டும் கற்பனை என்கின்றார் மாலன். 

இன்று வரை காந்தியின் கொலையைப் பற்றி பேசும் போது பேசப்படும் ஒரு விஷயம் அரசின் அலட்சியம். முதலில் அவரைக் கொலை செய்ய ஒரு முயற்சி நடந்திருக்கின்றது, அதன் பின்னும் அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் படவில்லை, எளிதாக வந்து கொலை செய்ய முடிந்திருக்கின்றது. அரசு காட்டிய அலட்சியத்தையும் பதிவு செய்துள்ளார். சுதந்திரம் முன்பு வரை இருந்த கடமையுணர்ச்சி அலட்சியாமாக மாறிபோகியுள்ளது. 

கொலை முயற்சியை முழுமையாக ஆராய்ந்திருந்தால் அதைத்தடுத்திருக்கலாம். அரசுக்கே அவரின் செயல்பாடுகள் வெறுப்பைத் தந்திருக்குமோ என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது. காந்தியின் யோசனைகளின் படி நாட்டை ஆண்டிருந்தால் இன்னும் மோசமாகத்தான் போயிருக்கும். காந்தி மிக நல்லவர், நேர்மையானவர் ஆட்சி நடத்த அது மட்டும் போதாது. காந்தியின் உதாரண புருஷன் ராமன் த்ரேதாயுகத்தில் செய்ததை அவனின் பின் வந்த கிருஷ்ணனே செய்ய முடியவில்லை. கிருஷ்ணன் கலியுகத்திற்கு என்ன தேவையோ அதைச் செய்தான். காந்தி கிருஷ்ணரை அரசியலுக்கும், ராமரை தனி ஒழுக்கத்திற்கும் முன்னுதாரணமாக கொண்டிருக்கலாம்.

கோட்சேயின் முழு சித்திரத்தையும் காட்டவில்லை அதே சமயம் அவனை முழுக் கெட்டவனாகவும் காட்டவில்லை. கோட்சே காந்தியை கொல்லக் காரணம் அவர்  பாகிஸ்தானுக்கு வாங்கிக் கொடுத்த ரூபாய் மட்டுமல்ல, பிரிவினைக்கே காந்திதான் காரணம் என்ற எண்ணம் முழுதும் அவனிடம் இருந்திருக்கின்றது. அதோடு காந்தி பிரிவினையால் அவதிப்பட்ட இந்துக்களை விட, இஸ்லாமியர்களிடம் அதிக கருணை காட்டினார் என்பதும் அவனின் காந்தியை கொல்ல முடிவு செய்ய வைத்துள்ளது. காந்தி இல்லாத தேசம் தன் முடிவுகளை தானே எடுக்கும், தண்டிக்கத்  தண்டிக்கும் என்று எண்ணி அவரைக் கொன்றுள்ளான். இதில் அவர் சேர்த்திருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பது, ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கும் இதற்கும் சம்பந்தமுள்ளதாக திரிக்கப்படும் கயிறு பற்றி, சாவர்க்கரின் பங்கு, கோட்சே தன் கையில் இஸ்லாமிய பெயரைப் பச்சை குத்திக் கொண்டு சென்றாதாக கூறப்படும் தகவல். 

காந்தியின் கொலைச் சம்பவத்தை படிக்கும் போது ஒரு சொட்டு கண்ணீர் கண்ணில் வந்தது. கண்டிப்பாக மாலனின் எழுத்தால் அல்ல காந்தியால். அவர் மேல் எனக்கும் விமர்சனங்கள் இருந்தாலும் அவர் ஒரு மகாத்மா என்பதில் சந்தேகமில்லை. உண்மையில் சொல்லப்போனால் இயற்கையாக அவர் மரணம் அடைந்திருந்தால் அது அவருக்கு பொருத்தமாக இருந்திருக்காது. அவரும் சாதரணராகியிருப்பார், அவரது மரணமே அவரது அரசியல் வாழ்வின் ஒரு பகுதியாகியுள்ளது.

இதோடு தொடர்புடைய மற்றொன்று "ஹே ராம்", கமலும் உண்மைச் சம்பவங்களையே அப்படத்தில் பயன்படுத்தியுள்ளார். ஒற்றைக் கண் வாட்ச்மேன், காந்தியின் மேடைக்கு பின்னார் இருந்த அறையை கொலைகாரர்கள் பயன்படுத்த் நினைத்தது, அதன் உயரம், அங்கிருந்த உடைந்த கட்டில், கொலைகாரர்கள் தங்கியிருந்த ஹோட்டல், சிகரெட்டினால் குண்டினை பற்ற வைத்தது. 

வழக்கம் போல புத்தகத்தை படித்து, அதைப் பற்றி எழுதிவிட்டு தேடினால்  இது  கிடைத்தது . சந்திரமெளளீஸ்வரன் அவரது தளத்தில் இதை பிரித்து அலசியுள்ளார். இதிலுள்ள சொற்குற்றம் பொருட்குற்றம் அனைத்தையும் பட்டியலிட்டு மாலனுக்கும் அனுப்பியுள்ளார் , மாலனும் வந்து என் கதையிலா குறை கண்டீர் என்று அவர் தரப்பையும் கூறிச் சென்றுள்ளார்.

கதையில் தகவல் பிழைகள் இருக்கலாம், அதற்காக இதை மோசமான நாவல் எனக்கூற முடியாது. 32 வருடங்களுக்கு முன்பு கிடைத்த தகவல்களை வைத்து அவர் எழுதியது பாராட்டத்தக்கது. அவர் முன்னுரையில் கூறியதைப் போல் அனைத்தும் சரிபார்க்கப்பட்டது என்பது ஒத்து போகவில்லை என்றாலும் இது நல்ல முயற்சிதான். இன்று இணையத்தில் அமர்ந்து கொண்டு அனைத்தையும் ஒரு தட்டில் பார்த்து விட்டு 50 வருடம் முன் அவர் தப்பாக எழுதினார், இவர் தவறாக எழுதினார் என்று கூறுவதில் அர்த்தமில்லை. அவர் அவருக்கு கிடைத்த தகவலகளின் அடிப்படையில் அவற்றை உண்மை என்று நம்பியே முன்னுரையிலும் அவ்வளவு வலுவாக கூறியிக்கின்றார் என்றே எண்ணுகின்றேன். மெளளிஸ்வரனும் தி மேன் ஹூ கில்டு காந்தி என்னும் நூலைத்தான் ஆதாரமாக காட்டுகின்றார். 

ஏற்கனவே காந்தியின் மரணம் பற்றி பல புத்தகங்கள் படித்தவர்களுக்கு ஒன்றும் புதிதாகத் தோன்றாது, ஆனால் முதன் முறை படிப்பவர்களுக்கு பல விஷயங்களை தெரிந்து கொள்ள உதவும்.

1 கருத்து:

  1. நான் படிக்க ஆரம்பித்த காலத்தில் மிகவும் சிலாகித்த நாவல்.இப்போதும், அப்போது படித்த நினைவிலேயே எனக்குப் பிடித்த புத்தகமாக இருக்கிறது. இப்போது மறுவாசிப்பில் அது என்னுள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை.
    நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு