22 நவம்பர் 2017

மகாத்மா காந்தியின் கொலை வழக்கு - சொக்கன்

காந்தியை கொன்றவன் யார்? கோட்சே. பள்ளி சரித்திரம் கற்று தருவது அவ்வளவுதான். காந்தியின் கொள்கைகள் பிடிக்காமல் கோட்சே என்பவன் சுட்டு கொன்றான் என்ற அளவிற்கு மேல் நமக்கு சொல்லி தருவதில்லை. சமூக வலைதளங்களில் வரும் பிதற்றல்களுக்கு அளவில்லை. காந்தி கொலையைப் பற்றி ஒரு முழுமையான சித்திரத்தை அறிந்து கொள்ள உதவும் ஒரு நல்ல புத்தகம் இது.

காந்தி கொலை செய்யப்பட்டார், குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர் என்று இரண்டு வரிகளில் முடிகின்ற விஷயமல்ல. காந்தியை கொல்ல நினைக்கும் அளவிற்கு ஒருவன் செல்லக் காரணம் என்ன? தேசம் முழுவதும் மதித்த ஒருவரை ஒருவன் கொல்ல நினைக்கும் போது அவனின் தரப்பு என்ன, எந்த ஒரு வலுவான காரணம் அவனை அங்கு தள்ளுகின்றது. பள்ளியில் குண்டுவைக்கும் ஒருவனுக்கே, அவனுக்கும் காரணம் இருக்கும் என்று அனுதாபத்தோடு பார்க்க வேண்டும் என்று பல முற்போக்காளர்கள் கூறுகின்றார்கள்.

கோட்சேவிற்கான காரணம் என்ன?
என்ன?
கோட்சேவிற்கு காரணம் கேட்க கூடாதா?
ஏன்?
அவன் சிறுபான்மை சமூகத்தவன் இல்லையா?
ம்ம்ம், சரி நான் முற்போக்கு வாதியில்லையே அதனால் பரவாயில்லை, காரணம் என்னவென்று பார்ப்போம் என்று படித்தேன்.

14 செப்டம்பர் 2017

சூல் - சோ. தருமன்

ஆசிரியரைப்பற்றி ஒரு சிறிய அறிமுகம். சோ. தருமன் கோவில்ப்பட்டி அருகிலிருக்கும் உருளைக்குடி கிராமத்தை சேர்ந்தவர். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த தருமன், அவரின் சமுதாய மக்களின் வரலாற்றை தூர்வை, கூகை என்னும் இரண்டு நாவல்களில் பதிவு செய்திருக்கின்றார். தன்னை ஒரு தலித் எழுத்தாளர் என்று குறுக்குவதை விரும்பாதவர். கரிசல் காட்டு கிராமத்து வாழ்வை பதிவு செய்த ஒரு சிறந்த எழுத்தாளர். 

தருமனின் எழுத்துக்களில் என்ன வித்தியாசம்? அவர் காட்டும் தலித் சமுதாயம்தான். தலித் மக்களை ஒரு வித அனுதாபத்துடன் அணுகும் மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுகின்றார். தலித் சமுதாயம் இப்படியும் இருந்தது என்பதை அவரது தூர்வை நாவலில் காட்டுகின்றார். பெரிய சம்சாரிகள், நிலம் வைத்து விவசாயம் செய்தவர்கள், பிற ஜாதியினரிடம் சகஜமாக பழகியவர்கள். கூகை நாவலில் தலித் மக்களுக்கும் பிராமணர்களுக்குமிருந்த உறவைப் பற்றி காட்டுகின்றார். பல போராளிகளுக்கு இது போன்ற விஷயங்கள் உவப்பாக இருக்காது. எரிச்சலாகக் கூட இருக்கும், ஆனால் எழுத்தாளன் என்பவன் கொஞ்சம் தயவு தாட்சண்யம் பார்க்காதவனாக இருக்க வேண்டுமல்லவா?

சூல் முதலிரண்டு நாவல்களிலிருந்து விலகி, அக்கால மக்களின் வேறு ஒரு வாழ்க்கையை காட்டுகின்றது. முதல் இரண்டும் நாவல்களும் சமூக, பொருளாதர மாற்றங்களை பேசுகின்றது. இந்நாவல் விவசாயம், ஆன்மீகம், பாரம்பர்ய அறிவு, அரசியல் மாற்றங்களை அதிகம் பேசுகின்றது. 

30 ஆகஸ்ட் 2017

திரைகளுக்கு அப்பால் - இந்திரா பார்த்தசாரதி

ஒரு டெல்லி நாவல். 

கறுப்பு நிறத்தால் கணவனைவிட்டு விலகி வாழும் பெண்ணை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு நாவல். தாழ்வுமனப்பான்மை ஒரு எல்லைக்கு மேல், ஒரு உயர்வு மனப்பான்மையை உண்டாக்கி, ஒரு முரட்டுத்தனமான முகமூடியை போட்டு கொள்ளும். பின்னர் அந்த முகமூடியை கழட்ட முடியாமல் அதோடு திரிய வேண்டியிருக்கும். என்றாவது ஒரு நாள் அந்த முகமூடி எவராலோ கிழிக்கப்படும் போது அதை தாங்க முடியாது. 

முகமூடி அணிந்த ஒரு பெண்ணின் கதைதான் இது. வழக்கமான இ.பா டைப் பாத்திரங்கள். எதிராளியை குத்தி கிழித்து அனுபவிக்கும் பாத்திரங்கள், அறிவுஜீவி முகமூடிகள், மெலிதான காமம். 

வெளிவந்த காலத்தில் பரபரப்பாக இருந்திருக்கலாம், ஆனால் இன்று ஒரு சராசரி நாவல் என்பதற்கு மேலேக ஒன்றுமே தோன்றவில்லை.